Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 31.22

Maṇimēkalai urai 31.22

Language
Tamil

31.22

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை

95

பிறப்பெனப் படுவதக் கருமப் பெற்றியின்
உறப்புண ருள்ளஞ் சார்பொடு கதிகளிற்
காரண காரிய வுருக்களிற் றோன்றல்

95

உரை

97

பிறப்பெனப்படுவது-பிறப்பென்னும் நிதானமவது; கரும்ப் பெற்றியின் - செய்த வினைகளின் தன்மைக் கேற்ப; உறப்புணர் உள்ளம் - ஏனையவற்றோடு மிகவும் சேர்ந்திருக்கும் விஞ்ஞான மானது ; சார்பொடு - முன்னும் பின்னுமாய்ச் சாரும் நிதானங்களுடன்; கதிகளில் - பலவகைப் பிறப்புகளிலும்; காரண காரியவுருக்களில் தோன்றல் - காரண காரியமாய் இயையும் உடம்புகளில் தோன்றுவதாம் எ - று.

செய்யப்படும் வினைக்கேற்பப் பிறப்பெய்துதலால் "கருமப் பெற்றியின்: என்றும், உருவம், வேதனை, சஞ்ஞை, சமஸ்காரம் என்ற நான்கு கந்தங்களுடன் பிரிப்பறச் சேர்ந்திருக்கும் இயல்புபற்றி, விஞ்ஞான கந்தத்தை, "உறப்புணர் உள்ளம்" என்றும், நிதானங்கள் தாமும் ஒன்றை யொன்று சார்வாகக்கொண்டு தோன்றுதலின், "சார் பொடு" என்றும், உருவுடைய உடம்பும், முன்னைய வுடம்புகளின் காரியமாயும், வரும் உடம்புகட்குக் காரணமாயும் இயைதலின், "காரண காரிய வுருக்க"ளென்றும் கூறினார். காரண காரியமாய் இயையும் உடம்பெல்லாம் ஐவகைக் கந்தங்களின் கூட்டமென்பது பௌத்த நூற் றுணிபாதலின் உறப்புணர் உள்ளம் சார்வோடு கதிகளில் உருக்களில் தோன்றல் என்றாற் போலவே, ஐங்கந்தங்களின் தோற்றமே பிறப்பெனப்படும் நிதானமாம் என்று தசபூமிக சூத்திலமுடையார் கூறுகின்றார். கரும்ப் பெற்றியின் சார்பொடு கதிகளில் தோன்றல் என்ற கருத்தையே வேறு வாய்பாட்டால், பல்வகைப் பிறப்பின் சுழற்சித் தோற்றம் பிறப்பென்பதென்று க்ஷேமேந்திரர் கூறுகின்றார். இப் பிற்பினை வடநூல்கள் சாதியென்று வழங்குகின்றன. திபேத்திலுள்ள ஓவியங்கள் இதனை மணஞ் செய்துகொண்டதன் விளைவாக மகற்பெற்ற மனிதனொருவன்போல் உருவந்தீட்டிக் காட்டுகின்றன.

Linked texts (1)