Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 31.30

Maṇimēkalai urai 31.30

Language
Tamil

31.30

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை

150

பிறப்பின் முதலுணர் வாதிச் சந்தி
நுகர்ச்சி யொழுக்கொடு விழைவின் கூட்டம்
புகர்ச்சியின் றறிவ திரண்டாஞ் சந்தி
கன்மக் கூட்டத் தொடுவரு பிறப்பிடை
முன்னிச் செல்வது மூன்றாஞ் சந்தி

148

உரை

152

பிறப்பின் முதல் உணர்வு ஆதிச்சந்தி-பிறப்புக்கு காரணமாகிய செய்கையும் உணர்ச்சியும் பொருந்துவது முதற் சந்தியாம்; நுகர்ச்சி யொழுக்கொடு விழைவின் கூட்டம்-நுகர்ச்சியாகிய ஒழுக்கமும் வேட்கையும் கூடும் சந்தி; புகர்ச்சி யின்றி அறிவது இரண்டாம் சந்தி - குற்றமின்றி யறியப்படுவதாகிய இரண்டாஞ் சந்தி யாகும்; கன்மக் கூட்டத்தொடு வருபிறப்பிடை முன்னிச்செல்வது மூன்றாம் சந்தி-கன்மத் தொகுதியும் மேல்வரும் பிறப்பும் பொருந்திச் செல்வதாகிய சந்தி மூன்றாஞ் சந்தியாகும் எ - று.

நால்வகைக் கண்டங்களும் சொற்புணர்ச்சிபோலத் தம்மிற்புணரு மியல்பினவாதலின், சந்திகள் மூன்றாயினவென வறிக. முதற்கண்டத்திறுதிக் கண்ணதாகிய செய்கையும் இரண்டாங் கண்டத்து முதற் கண்ணதாகிய உணர்ச்சியும் பொருந்தும் சந்தி முதற்சந்தி யாதலின், "பிறப்பின் முதல் உணர்வு ஆதிச்சந்தி" என்றார். ஆதிச்சந்தி யென்பது தமிழ்முடிபு பெற்றது. பிறப்புக் கேதுவாகிய கரும வீட்டத்துக்கு முதலாதலின் செய்கையை, "பிறப்பின் முதல்" என்றார். இவ்வாறே இரண்டாங் கண்டத் தீற்றினின்ற நுகர்ச்சியும் மூன்றாங் கண்டத்து

முதலில் வரும் வேட்கையும் பொருந்துஞ் சந்தியை இரண்டாஞ் சந்தி யென்றும், மூன்றாங் கண்டத்தீற்றுக் கருமவீட்டமும் நான்காங் கண்டத்து முதலில் நிற்கும் பிறப்பும் புணரும் புணர்ச்சியை மூன்றாஞ் சந்தி யென்றும் கூறினாரென வறிக. நான்காங் கண்டத்து வரும் பிறப்பு உருவுடைத்தாகலின், அதனை நாடிக்கொள்ளும் இயைபு தோன்ற, "முன்னிச் செல்வது" என்றார். புகர்ச்சி - குற்றம். கன்மத் தொகுதி: ஈண்டுப் பவத்தைக் குறித்து நின்றது.

Linked texts (1)