Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 31.41

Maṇimēkalai urai 31.41

Language
Tamil

31.41

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை

இயல்பு மிகுத்துரை யீறுடைத் தென்றுந்
தோன்றிற் றென்று மூத்த தென்றும்
மூன்றி னொன்றி னியல்புமிகுத் துரைத்தல்

202

உரை

204

இயல்பு மிகுத்துரை - தன்மை மிகுத்துரையாவது; ஈறுடைத்தென்றும் - ஒரு பொருள் அழிந்ததென்றும்; தோன்றிற்றென்றும் - பிறந்ததென்றும்; மூத்ததென்றும் - முதுமை யுற்றதென்றும் கூறப்படும் தன்மைகள்; மூன்றின்-மூன்றனுள்; ஒன்றின் இயல்பு மிகுத்துரைத்தல் - ஒரு கூற்றின் தன்மையை மிக் கெடுத்துக் கூறுவதாம் எ - று.

ஈறுடைமையாகிய தன்மையை "ஈறுடைத்தென்றும்" பிறப்புடைமையைத் "தோன்றிற்றென்றும்" முதுமையுறுந் தன்மையை "மூத்ததென்றுங்" கூறினார். பிறப்பு மூப்பு இறப்பு என்னாது பிறழக் கூறினார். செய்யுளாதலின். தோற்றத்தினும் அழிவு நன்கு விளங்குதலும் முதுமை அவ்வழிவுபோல நன்கு விளங்காமையுங் கண்டு இவ்வாறு கூறினாரெனினுமாம். இதனையும் உண்மை வழக்கோடும் இன்மை வழக்கோடும் இயைக்கும் அருணந்தி சிவனார், இரண்டினையும், "தோற்றிய பொருள்க ளெல்லாம் நாசமா மென்று சொல்லும். மாற்றமூன்றுரைத்தல் மற்றை மிகுத்துரை வழக்கி னுண்மை, போற்றிய பொருள் கண் கட்குப் போனது போன் முதிர்ந்து, வேற்றுமைப்பட்ட தென்கை மிகுத்துரை யில்வழக்கே" (சிவ சித். பரபக். 72) என்று கூறுவர். இதற்கு உரைகண்ட திருவொற்றியூர்த் தத்துவப் பிரகாசத் தம்பிரான் சுவாமிகள் "கண்கட்குப் போனது போன் முதிர்ந்து வேற்றுமைப் படுகை காரியமழிந்து காரணங் கிடக்கை" யென்றும், "மிகுத்துரை மூன்றும் உள்வழக்கு இல்வழக்கு இரண்டினும் வழங்கும் வழியெனக் கொள்க" என்றும் கூறுவது ஈண்டுக் குறிக்கத் தக்கது. இவ்வாசிரியர் மேலே கூறுகின்ற இயைந்துரைத் திறத்தை அருணந்தி சிவனார் விளக்கிற்றலர். அவர், இதனை மேற்கொள்ளாமையை, தொகை தொடர்ச்சி மிகுத்துரை மூன்றும் உண்மை வழக்கு இன்மை வழக்கு என்ற இரண்டி னோடுறழ ஆறாதலைக் காட்டி, "தொகை தொடர்ச்சி மிகுத்துரை யென்று மூன்றாய், உற்றிடும் வழக் கிரண்டு மொன்றுமூன்றாகி யாறாம்" (சிவ. சித். பரபக் 69) என்பதனாலும் துணியப்படும். படவே, இயைந்துரை யொழித்து ஏனைமூன்றுமே கொண்ட பௌத்த நூல்களும் உண்டென்பது எய்துகிறது.

Linked texts (1)