Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 4.17.8

Maṇimēkalai urai 4.17.8

Language
Tamil

4.17.8

சிமிலிக் கரண்டையன்-உறியிலே வைத்த குண்டிகையை யுடையவனும், நுழைகோல் பிரம்பினன்-நுண்ணிதாய்த் திரண்ட பிரம்பினை யுடையவனும், தவலரும் சிறப்பின் அராந்தாணத்து
உளோன்-கேடில்லாத மேன்மையையுடைய அருகன்கோட்டத்தே யுள்ளவனும், நாணமும் உடையும் நன்கனம் நீத்து - நாணத்தையும் ஆடையையும் அறவே அகற்றி, காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி- கண்களாற் காண வியலாத சிற்றுயிர்க்கும் நடத்தலாதி தன்றொழில்களால் துன்பமுண்டாமோ எனச் செயலற்று ஏங்கி, உண்ணா நோன்போடு-உண்ணா விரதத்துடன், உயவல் யானையின் மண்ணா மேனியன் வருவோன் தன்னை-வருந்துதலையுடைய யானையைப்போல வருவோனுமாகிய கழுவாத உடலையுடைவனை, வந்தீர் அடிகள் நும் மலரடி தொழுதேன் - வாரும் அடிகேள் நும்முடைய மலர்போலும் திருவடிகளை வணங்கினேன், எந்தம் அடிகள் எம்உரை கேண்மோ எம்முடைய பெருமானே அடியேன் மொழியைக் கேளும், அழுக்குடை யாக்கையில் புகுந்த நும் உயிர் - அழுக்குச் செறிந்த உடலின்கட் புகுந்த நும்முடைய உயிரானது, புழுக்கறைப் பட்டோர் போன்று உளம் வருந்தாது - புழுக்கத்தினைத் தரும் அறையில் அகப்பட்டோரைப்போல உள்ளம் வருந்தா வண்ணம், இம்மையும் மறுமையும் இறுதிஇல் இன்பமும் தன் வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது-எம் தலைவருரைத்ததாகிய இம்மை யின்பத்தினையும் மறுமை யின்பத்தினையும் முடிவில்லாத முத்தி யின்பத்தினையும் தன்னிடத்திருந்து தருகின்றதான, கொலையும் உண்டோ கொழுமடல் தெங்கின் விளைபூந் தேறலின் - சொழுவிய மடல்களையுடைய தென்னையின் கண் விளைகின்ற இனிய மதுவில் கொலையென்பதும் உண்டோ?, மெய்த் தவத்தீரே - உண்மைத் தவமுடைய அடிகளே, உண்டு தெளிந்து இவ்யோகத்து உறுபயன் கண்டால் - இதனை உண்டு தெளிவு பெற்று இத் தவநெறியில் இதனின் மிக்க பயனைக் கண்டால், எம்மையும் கையுதிர்க் கொண்மென - தேறலையன்றி எம்மையும் அகற்றிவிடும் என்று கூறி, உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று - உண்ணா நோன்பியாகிய சைன முனிவருடன் சபதங் கூறி, உண்ம் என் இரக்கும் ஓர் களிமகன் பின்னரும் - உண்ணும் என்று இரக்கின்ற ஒரு கட்குடியன் பின் நிற்போரும் ;

Linked texts (1)