Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 5.9

Maṇimēkalai urai 5.9

Language
Tamil

5.9

பளிக்கறை புக்க காதை

55

நாடக மந்தையர் நலங்கெழு வீதி
ஆடகச் செய்வினை மாடத் தாங்கண்
சாளரம் பொளித்த கால்போகு பெருவழி
வீதிமருங் கியன்ற பூவணைப் பள்ளித்
தகரக் குழலாள் தன்னொடு மயங்கி
மகர யாழின் வான்கோடு தழீஇ
வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின்
எட்டி குமரன் இருந்தோன் றன்னை

51

உரை

58

நாடக மடந்தையர் நலங்கெழு வீதி-நாடகக் கணிகையரது அழகு பொருந்திய வீதியில், ஆடகச் செய்வினை மாடத் தாங்கண் - ஆடகப்பொன்னாற் செய்தொழிலமைந்த மாளிகையின்கண், சாளரம் பொளித்த கால்போகு பெருவழி-காற்று செல்லுகின்ற பெரிய வழியாகிய துளைசெய்யப்பட்ட சாளரத்தினிடமாக, வீதி மருங்கு இயன்ற பூவணைப்பள்ளி - வீதியின் பக்கலில் இயற்றிய மலரணைச் சேக்கையில், தகரக்குழலாள் தன்னோடு மயங்கி - மயிர்ச்சாந்தினை யணிந்த குழலினையுடைய கணிகையொருத்தியுடன் மயக்கமுற்று, மகரயாழின் வான்கோடு தழீஇ - மகர யாழினது சிறந்த கோட்டைத் தழுவி, வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின் எட்டிகுமரன் இருந்தோன் தன்னை - எழுது கோலினால் எழுதப்பட்ட ஓவியப் பாவை போல அசைவற்று இருந்த எட்டிகுமரனை,

ஆடகம்-நால்வகைப் பொன்னுள் ஒன்று.பொளித்த -

துளைசெய்த. 'கால்போகு பெருவழியாகிய பொளித்த சாளரம் என்க. மகரயாழ் - நால்வகை யாழினுளொன்று; பதினேழு நரம்புடையது என்பர். கோடு - யாழ்த்தண்டு. வட்டிகை - எழுதுகோல். எட்டி - வணிகர் பெறும் பட்டப் பெயர்; "எட்டிப் பூப்பெற் றிருமுப் பதிற்றியாண். டொட்டிய செல்வத் துயர்ந்தோ னாயினன்." (22; 113-4) என்பர் பின்னும்; ¹"எட்டி காவிதிப் பட்டந் தாங்கி," என்பதுங் காண்க; ², 'எட்டி காவிதியென்பன தேய வழக்காகிய சிறப்புப் பெயர்" என்பர் நச்சினார்க்கினியர்.

¹பெருங். 2. 3: 144. ² தொல். தொகை. 12.

Linked texts (1)