Maṇimēkalai's Renunciation 6.2
Maṇimēkalai urai 6.2
- Language
- Tamil
6.2
மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை
10
ஓவிய னுள்ளத் துள்ளியது வியப்போன்
காவியங் கண்ணி யாகுதல் தெளிந்து
தாழொளி மண்டபந் தன்கையில் தடைஇச்
சூழ்வோன் சுதமதி தன்முக நோக்கிச்
சித்திரக் கைவினை திசைதொறுஞ் செறிந்தன
எத்திறத் தாள்நின் இளங்கொடி யுறையெனக்
7
உரை
12
ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன் - (மணிமேகலையின் உருவத்தை ஓவியம் என நினைந்து) ஓவியக்காரன் அதனை எழுதுமாறு மனதில் அமைத்ததை வியக்கின்றவனாய் உதயகுமரன், காவியங் கண்ணி யாகுதல் தெளிந்து - அவ்வடிவம் நீலமலரனைய கண்களையுடைய மணிமேகலை யாதலைத் தெளிந்து, தாழ் ஒளி மண்டபம் தன் கையில் தடைஇச் சூழ்வோன் - தங்கிய ஒளியுடைய பளிக்கு மண்டபத்தைத் தன் கையாலே தடவிப் பார்த்துச் சுற்றி வருபவன், சுதமதி தன்முகம் நோக்கி - சுதமதியின் முகத்தைப் பார்த்து, சித்திர கைவினை திசைதொறும் செறிந்தன எத்திறத்தாள் நின் இளங்கொடி உரை என - சித்திரக் கைத்தொழில் எப்பக்கமும் நிறைந்திருக்கின்றன நின் இளங்கொடி போல்பவள் எவ்விடத்தாள் கூறுக என ;
தாழ்தல்-தங்குதல். வாயில் கரண்டற்கு மண்டபத்தைத் தடவிச் சூழ்ந்தனனென்க. சூழ்ந்து வருங்கால் மணிமேகலையின் உருவம் எத் திசையினும் வெளிப்பட்டமையின் "சித்திரக் கைவினை திசைதொறுஞ் செறிந்தன" என்றான் ; மண்டபத்திலுள்ள ஓவியப்பாவை பலவற்றுடன் மணிமேகலையின் உருவம் வேறுபாடின்றி யிருந்தமையின் அங்ஙனம் கூறினானெனலுமாம் ; ¹"மேவிய பளிங்கின் விருந்திற் பாவையிஃ தோவியச் செய்தியென் றொழிவேன் முன்னர்" ²"ஈங்கிம் மண்ணீட்டியாரென வுணர்கேன்" எனப் பின்வருவன காண்க. திறம்-இயல்புமாம். சுதமதி காவற் பெண்டாகலின் 'நின் இளங்கொடி' என்றான். ஓவியன் என்பதற்கு உதயகுமரன் சித்திரம் போன்றவனாய் நின்றென்றுரைத்தல் ஈண்டைக்குப் பொருந்தாமையோர்க.
1 மணி. 18 : 69-7. ² மணி. 18 : 156.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil