Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 7.1

Maṇimēkalai urai 7.1

Language
Tamil

7.1

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை

5

அந்தி மாலை நீங்கிய பின்னர்
வந்து தோன்றிய மலர்கதிர் மண்டிலம்
சான்றோர் தங்கண் எய்திய குற்றம்
தோன்றுவழி விளங்குந் தோற்றம் போல
மாசறு விசும்பின் மறுநிறங் கிளர
ஆசற விளங்கிய வந்தீந் தண்கதிர்
வெள்ளிவெண் குடத்துப் பால்சொரி வதுபோல்
கள்ளவிழ் பூம்பொழில் இடையிடை சொரிய

1

உரை

8

அந்திமாலை நீங்கிய பின்னர் - அந்திப்பொழுதாகிய மாலைக் காலம் கழிந்த பின்னர், வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம்- வந்து உதித்த பரந்த கிரணங்களையுடைய திங்கள் மண்டிலம், சான்றோர் தங்கண் எய்திய குற்றம் - உயர்குடித் தோன்றிய மேன்மக்கள்பாலடைந்த குற்றமானது, தோன்றுவழி விளங்கும் தோற்றம்போல - தோன்றுமிடத்து விளங்குமியல்பினைப்போல, மாசு அறு விசும்பில் மறுநிறம் கிளர - விசும்பின்கண் மாசற்ற நிறத்தினிடம் களங்கம் விளங்க, ஆசு அற விளங்கிய அம்தீம் தண் கதிர்-குற்றமற்று விளங்குகின்ற அழகிய தீவிய குளிர்ந்த கதிரினை, வெள்ளி வெண்குடத்துப் பால் சொரிவதுபோல் - வெள்ளிக் குடத்தினின்று பாலைச் செரிவதுபோல, கள்அவிழ் பூம்பொழில் இடையிடை சொரிய - தேன் அவிழுகின்ற மலர்ச்சோலையில் இடையிடையே பொழிய;

அந்திமாலை-அந்தியாகிய மாலை. தோன்றுவழி விளங்கும் என்றதுசான்றோர்பால் குற்றம் உண்டாய அப்பொழுதே அது யாவரும் அறிய வெளிப்படும் என்றவாறாம்; அவர் வளிப்படுமிடத்து அதுவும் வெளிப்படும் என்றுமாம: திங்கள் தூய்மை உடையதாகலானும் அதன்கண் களங்கம் அதற்கு மாறாக இருத்தலானும் அது விளங்கித் தோன்றிற்று. ¹"குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின், மதிக்கண் மறுப்போ லுயர்ந்து" என்பதனாற் சான்றோரிடைக் குற்றம் யாவருமறிய நிற்றல் காண்க. ஈண்டுப் பொருள் உவமமாக்கப்பட்டது; என்னை? ²பொருளே யுவமஞ் செய்தனர் மொழியினும், மருளறு சிறப்பினஃ துவம மாகும்" என்பவாகலான். சான்றோர் குற்றம் விளங்குந் தோற்றம்போலக் கதிர் மண்டிலம் மறுநிறங் கிளரத் தண் கதிரைப் பால் சொரிவதுபோல் இடையிடைச் சொரிய வென்க. திங்களுக்கு வெள்ளிக்குடமும் தண்கதிர்க்குப் பாலும் உவமை.

¹ குறள். 957. ² தொல். பொருளதி. 284.

Linked texts (1)