Maṇimēkalai's Renunciation 7.16
Maṇimēkalai urai 7.16
- Language
- Tamil
7.16
சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை
100
தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர்
ஈற்றிளம் பெண்டி ராற்றாப் பாலகர்
முதியோ ரென்னான் இளையோ ரென்னான்
கொடுந்தோழி லாளன் கொன்றனன் குவிப்பவிவ்
அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும்
கழிபெருஞ் செல்வக் கள்ளாட் டயர்ந்து
மிக்க நல்லறம் விரும்பாது வாழும்
மக்களிற் சிறந்த மடவோ ருண்டோ
97
உரை
104
தவத்துறை மாக்கள் மிகப் பெருஞ் செல்வர்-தவநெறியிற் செல்லுந் துறவியர் மிக்க பெருஞ் செல்வமுடையோர், ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப்பாலகர் - ஈன்றணிமையையுடைய இளமகளிர் ஆற்றாத இளஞ்சிறார், முதியோர் என்னான் இளையோர் என்னான் - ஆண்டில் முதிர்ந்தோர் என்னாமலும் இளையோர் என்னாமலும், கொடுந் தொழிலாளன் கொன்றனன் குவிப்ப - கொடுந் தொழிலை யுடைய காலன் கொன்று குவிப்ப, இவ் அழல்வாய்ச் சுடலை தின்னக்கண்டும் - அழல் வாயினையுடைய சுடலை தின்னக்கண்டும், கழிபெருஞ்செல்வக் கள்ளாட்டு அயர்ந்து - மிக்க பெருஞ்செல்வமாகிய கள்ளையுண்டு விளையாடுதலைச் செய்து, மிக்க நல்லறம் விரும்பாது வாழும் - மேன்மை தரும் நல்லறங்களை விரும்பாமல் வாழ்கின்ற, மக்களில் சிறந்த மடவோர் உண்டோ - மக்களிலுஞ் சிறந்த அறிவிலிகள் உளரோ;
என்னான் என்பதனைத் தவத்துறைமாக்கள் முதலியவற்றோடும் ஒட்டுக. கொன்றனன்; முற்றெச்சம். அழலாகிய வாய் என உருவகம். இகரச்சுட்டு அதன் கொடுமையை உணர்த்திற்று. ஆரிடையில் பறந்தலையில் சுடலை (49, 66, 101) என்க. பறந்தலையாகிய சுடலை யென்னலுமாம். அறிவை மயக்குதலின் செல்வத்தைக் கள் என்றார். 'தவத் துறைமாக்கள்......மடவோருண்டோ' என்பது தெய்வங் கூறியது ; கவி கூறியதுமாம்.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil