Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 7.31

Maṇimēkalai urai 7.31

Language
Tamil

7.31

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை

180 185

நால்வகை மரபி னரூபப் பிரமரும்
நானால் வகையி னுரூபப் பிரமரும்
இருவகைச் சுடரும் இருமூ வகையிற்
பெருவனப் பெய்திய தெய்வத கணங்களும்
பல்வகை யசுரரும் படுதுய ருறூஉம்
எண்வகை நரகரும் இருவிசும் பியங்கும்
பன்மீ னீட்டமும் நாளுங் கோளும்
தன்னகத் தடக்கிய சக்கர வாளத்து
வரந்தரற் குரியோர் தமைமுன் நிறுத்தி
அரந்தை கெடுமிவ ளருந்துய ரிதுவெனச்

176

உரை

185

நால்வகை மரபின் அரூபப் பிரமரும் - நான்கு வகைப்பட்ட முறைமையினையுடைய அரூபப் பிரமர்களையும், நானால் வகையின் உரூபப் பிரமரும்-பதினாறு வகைப்பட்ட உரூபப் பிரமர்களையும், இருவகைச் சுடரும்-ஞாயிறு திங்கள்களையும், இரு மூவகையில் பெருவனப்பு எய்திய தெய்வத கணங்களும் - ஆறு வகையினையுடைய மிக்க அழகு விளங்குகின்ற தெய்வ கணங்களையும், பல்வகை அசுரரும் படுதுயர் உறூஉம் எண்வகை நரகரும்- பல திறப்பட்ட அசுரர்களையும் மிக்க துன்பத்தை அனுபவிக்கின்ற எண்வகைப்பட்ட நரகர்களையும், இரு விசும்பு இயங்கும் பன்மீன் ஈட்டமும் நாளும்கோளும்-அகன்ற வானின்கண் திரியும் பல மீன்களின் தொகுதிகளையும் நாட்களையும் கோட்களையும், தன் அகத்து அடக்கிய சக்கரவாளத்து - தன் உள்ளே அடக்கிக் கொண்டிருக்கும் சக்கரவாளத்தில், வரந் தரற்குரியோர்தமை முன் நிறுத்தி - வரந்தருவதற் குரியவர்களாகிய தேவர்களைக் கோதமைக்கு முன்னே நிறுத்தி, அரந்தை கெடும் இவள் அருந்துயர் இதுவென - இவளுற்ற அரிய துயர் இது இத்துயரினைப் போக்குவீராக என்று சம்பாபதி கூற

உலகம் முப்பத்தொன்று என்றும், அவற்றுள் முதலாவதாகிய நரக லோகத்தின் பகுதிகளாகிய மகாநிரயம், இரௌரவம், காலசூத்திரம், சஞ்சீவனம், மகாவீசி, தபனம், சம்பிரதாபனம், சங்கதம் என்னும் எட்டு நரகங்களிலும் நரகர்கள் வசிப்பரென்றும், ஆறாவது முதலிய அறுவகை உலகங்களிலும் அறுவகைத் தெய்வகணங்கள் வசிப்பரென்றும், பன்னிரண்டாவது முதலிய பதினாறு உலகங்களில் பதினறுவகை உருவப்பிரமர்களும், இருபத்தெட்டாவது முதலிய நான்கு உலகங்களில் நால்வகை அருவப்பிரமர்களும் வசிப்பரென்றும் கூறுவர். ஒன்று முதல் மேன்மேலுலகங்களில் வசிப்போர் படிப்படியே உயர்ந்தோராவ ரென்பது அறிக. கெடும் : செய்யுமென்னுஞ் சொல் ; ஏவலில் வந்தது.

Linked texts (1)