Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 7.4

Maṇimēkalai urai 7.4

Language
Tamil

7.4

சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை

20 25

அரசிளங் குமரன் ஆயிழை தன்மேல்
தணியா நோக்கந் தவிர்ந்தில னாகி
அறத்தோர் வனமென் றகன்றன னாயினும்
புறத்தோர் வீதியிற் பொருந்துத லொழியான்
பெருந்தெரு வொழித்திப் பெருவனஞ் சூழ்ந்த
திருந்தெயிற் குடபாற் சிறுபுழை போகி
மிக்க மாதவர் விரும்பின ருறையும்
சக்கர வாளக் கோட்டம் புக்கால்
கங்குல் கழியினுங் கடுநவை யெய்தாது
அங்குநீர் போமென் றருந்தெய்வ முரைப்ப

17

உரை

26

அரசிளங் குமரன் ஆயிழை தன்மேல் தணியாவுள்ளம் தவிர்ந்திலன் ஆகி - மன்னவன் புதல்வன் மணிமேகலை யிடத்துக் கொண்ட ஆசை நீங்காத உள்ளத்தினைத் தவிர்ந்திலனாய், அறத்தோர் வனம் என்று அகன்றனன் ஆயினும்-தவத்தோர்களுடைய பொழில் என்று இங்கு நின்றும் நீங்கினனாயினும், புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான் - புறத்திலுள்ளவர்களது தெரு வின்கண்ணே சேர்தலை நீங்கான், பெருந்தெரு ஒழித்து இப்பெருவனஞ் சூழ்ந்த - ஆதலால் பெருந் தெருவுகளை விட்டு இந்தப் பெரிய சோலையைச் சூழ்ந்துள்ள, திருந்து எயிற் குடபால் சிறு புழை போகி - திருத்தமுற்ற மதிலின் மேற்றிசையினிடத்தேயுள்ள சிறிய வாயிலின் வழியே சென்று, மிக்க மாதவர் விரும்பினர் உறையும்-தவத்தான் மிக்க முனிவர்கள் விரும்பி யுறையும், சக்கரவாளக்கோட்டம் புக்கால் - சக்கரவாளக்கோட்டத்தை யடைந்தால், கங்குல் கழியினும் கடுநவை எய்தாது - அங்கே இரவினைக் கழிப்பினும் கொடிய துன்ப முண்டாகாது, அங்குநீர் போம் என்று அருந்தெய்வம் உரைப்ப - ஆகலின் நீவிர் அங்கே செல்வீராக என்று அரிய தெய்வம் கூறியருள;

அறத்றோர் துறவிகளானமையின், புறத்தோர் என்பதற்கு அவர்க்குப்புறமாகவுள்ள இல்லற நெறியினர் என வுரைத்தலும் அமையும்; புறத்து ஓர் வீதியில் என்றலுமாம். புழை-நுழை வாயில். கழியினும் - கழிப்பினும். இனி, ஆண்டே இராக்காலம் கழிவதாயினும் எனலுமாம் கடுநவை - உதயகுமரனாற் பற்றப்படுதல்.

Linked texts (1)