Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 12.5

Maṇimēkalai urai 12.5

Language
Tamil

12.5

பாத்திரம் பெற்ற காதை

35

40 தீவ திலகை என்பெய ரிதுகேள்
தரும தலைவன் தலைமையின் உரைத்த
பெருமைசால் நல்லறம் பிறழா நோன்பினா
கண்டுகை தொழுவோர் கண்டதற் பின்னர்ப்
பண்டைப் பிறவியர் ஆகுவர் பைந்தொடி
அரியர் உலகத் தாங்கவர்க் கறமொழி
உரிய துலகத் தொருதலை யாக

29

உரை

35

இது கேள் - இதனைக் கேட்பாயாக, தரும தலைவன் தலைமையின் உரைத்த-தரும வேந்தனாகிய புத்தன் தலைமையாகக் கூறிய, பெருமைசால் நல்லறம் பிறழா நோன்பினர்-பெருமை மிக்க நல்லறத்தில் வழுவாத நோன்புடையாரே, கண்டு கைதொழுவோர்-இப் பீடிகையைக் கண்டு கைகூப்பி வணங்குதற் குரியோராவர் கண்டதற் பின்னர்-அவ்வாறு இப் பீடிகையைக் கண்டபின்னர் பண்டைப் பிறவியர் ஆகுவர் பைந்தொடி-பைந்தொடியே அவர் முற்பிறப்பை அறிந்தோராவர். அரியர் உலகத்து- அத்தன்மையர் உலகத்திற் பெறுதற்கரியர், ஆங்கவர்க்கு அற மொழி உரியது உலகத்து ஒருதலையாக - அவர்கட்கு உறுதியாக உலகிலே தருமபதம் உரியது ;

தருமதலைவன்-தருமராசன்; புத்தன் பெயர்களுள் ஒன்று. நோன் பினராய்க் கண்டு தொழுவோர் என்றலுமாம். அவர்க்கு அறமொழி உரியது என்பது அவர் அறமொழி கேட்டற்குரியர் என்றபடி.

Linked texts (1)