Maṇimēkalai's Renunciation 12
Maṇimēkalai urai 12
- Language
- Tamil
12.1
பாத்திரம் பெற்ற காதை
மணிமே கலாதெய்வம் நீங்கிய பின்னர்
மணிபல் லவத்திடை மணிமே கலைதான்
வெண்மணற் குன்றமும் விரிபூஞ் சோலையும்
தண்மலர்ப் பொய்கையும் தாழ்ந்தனள் நோக்கிக்
1
உரை
5
மணிமேகலா தெய்வம் நீங்கியபின்னர்-மணிமேகலா தெய்வம் மந்திரம் அளித்துச் சென்ற பின்னர், மணிபல்லவத்திடை மணிமேகலைதான்-மணிமேகலை மணிபல்லவத்தின்கண் உள்ள, வெண்மணற் குன்றமும் - வெள்ளிய மணற் குன்றுகளையும், வீரிபூஞ் சோலையும் - விரிந்த பூம்பொழில்களையும், தண்மலர்ப் பொய்கையும் - குளிர்ந்த மலர்களையுடைய பொய்கைகளையும், தாழ்ந்தனள் நோக்கி - மெல்ல நோக்கிக்கொண்டு, காவதம் திரிய - ஒரு காத தூரம் சுற்றிக்கொண்டிருக்க;
குன்றம், சோலை, பொய்கை என்பவற்றிற்கு இரண்டனுருபு விரிக்க. பூக்கள் விரிந்த சோலையுமாம். காதம் காவதம் என விரிந்து நின்றது; ¹வ பகுதிப் பொருள் விகுதி யென்பர் அடியார்க்கு நல்லார்.
¹ சிலப். 10 : 36. உரை.
12.2
பாத்திரம் பெற்ற காதை
5 காவதந் திரியக் கடவுட் கோலத்துத்
தீவ திலகை செவ்வனந் தோன்றிக்
கலங்கவிழ் மகளிரின் வந்தீங் கெய்திய்
5
உரை
8
கடவுட் கோலத்துத் தீவதிலகை செவ்வனம் தோன்றி-தெய்வ வேடமுடைய தீவதிலகை என்பாள் செவ்விதாகத் தோன்றி, கலம் கவிழ் மகளிரின் வந்து ஈங்கு எய்திய - மரக்கலம் கவிழப்பெற்று அதினின்றும் உய்ந்துவந்த மகளிரைப்போல் ஈண்டுவந்து சேர்ந்த, இலங்குதொடி நல்லாய் யார் நீ என்றலும் - விளங்குகின்ற வளையல்களை யணிந்த மெல்லியலே நீ யார் என வினவுதலும் ;
தீவதிலகை : இந்திரன் ஏவலாற் புத்தன் பாத பீடிகையைப் பாதுகாத்துக்கொண்டு மணிபல்லவத்தில் இருப்பவள்; தீவுக்குத் திலகம் போன்றவள் என்றது பொருள். தனித்து ஓர் தீவில் வந்திருத்தலின் 'கலங்கவிழ் மகளிர் போல்' என்றாள். செவ்வனம்-நேரே யென்றுமாம்
12.3
பாத்திரம் பெற்ற காதை
10
15 இலங்குதொடி நல்லாய் யார்நீ என்றலும்
எப்பிறப் பகத்துள் யார்நீ யென்றது
பொற்கொடி யன்னாய் பொருந்திக் கேளாய்
போய பிறவியில் பூமியங் கிழவன்
இராகுலன் மனையான் இலக்குமி யென்பேர்
ஆய பிறவியில் ஆடலங் கணிகை
மாதவி யீன்றி மணிமே கலையான்
என்பெயர்த் தெய்வம் ஈங்கெனைக் கொணரவிம்
மன்பெரும் பீடிகை என்பிறப் புணர்ந்தேன்
ஈங்கென் வரவிதீங் கெய்திய பயனிது
பூங்கொடி யன்னாய் யார்நீ யென்றலும்
9
உரை
18
எப்பிறப் பகத்துள் யார் நீ என்றது-யார் நீ யென என்னை வினாவியது எனது எப்பிறப்பின் நிகழ்ச்சி குறித்து, பொற்கொடி அன்னாய் பொருந்திக் கேளாய் - காமவல்லி போல்வாய் யான் கூறுவதனை மனம் பொருந்திக் கேட்பாயாக, போய பிறவியில்- சென்ற பிறவியில், பூமியங் கிழவன் - நிலவுலகினையாண்ட மன்னனாகிய, இராகுலன் மனை யான்-இராகுலனுடைய மனைவியாவேன்யான், இலக்குமி என்பேர் - என்னுடைய பெயர் இலக்குமி என்பது, ஆய பிறவியில்-இப் பிறப்பிலே, ஆடலங்கணிகை மாதவி ஈன்ற மணிமேகலை யான் - நாடகக் கணிகையாகிய மாதவி பெற்ற மணிமேகலை யாவேன் நான், என் பெயர்த் தெய்வம் ஈங்கு எனைக் கொணர - மணிமேகலா தெய்வம் ஈண்டு என்னைக் கொண்டுவர, இம் மன்பெரும் பீடிகை என் பிறப்பு உணர்ந்தேன்- பெருமை பொருந்திய இப் பெரும் பீடிகையால் என் முற்பிறப்பினை அறிந்தேன், ஈங்கு என் வரவு இது-ஈண்டு நான் வந்த வரலாறு இது, ஈங்கு எய்திய பயன் இது - இவ்விடத்தில் யான் அடைந்த பயன் இதுவாகும், பூங்கொடி அன்னாய் யார் நீ என்றலும் - பூங்கொடி போல்வாய் நீதான் யார் எனக் கேட்டலும்;
பூமியங் கிழவன் - தரணிபன். ஆய - இப்பொழுது உளதாகிய, பீடிகை-பீடிகையால்; மூன்றனுருபு தொக்கது. எய்திய-வந்தமையாலாகிய என்றுமாம். பயன் இது என்றது பழம்பிறப் புணர்ந்தமையை.
12.4
பாத்திரம் பெற்ற காதை
20
25 ஆயிழை தன்பிறப் பறிந்தமை யறிந்த
தீவ திலகை செவ்வனம் உரைக்கும்
ஈங்கிதன் அயலகத் திரத்தின் தீவத்
தோங்குயர் சமந்தத் துச்சி மீமிசை
அறவியங் கிழவோன் அடியிணை யாகிய
பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம்
அறவி நாவாய் ஆங்குள தாதலின்
தொழுதுவலங் கொண்டு வந்தேன் ஈங்குட்
பழுதில் காட்சியிந் நன்மணிப் பீடிகை
தேவர்கோன் ஏவலிற் காவல் பூண்டேன்
19
உரை
29
ஆயிழை தன் பிறப்பு அறிந்தமை அறிந்த - மணிமேகலை தன் முற்பிறப்பினை அறிந்த தன்மையை உணர்ந்த, தீவதிலகை செவ்வனம் உரைக்கும்-தீவதிலகை செம்மையாகக் கூறுகின்றாள், ஈங்கிதன் அயலகத்து இரத்தின தீவத்து-இம் மணிபல்லவத்தின் அயலிடத்துள்ளதாகிய இரத்தின தீவத்தின்கண், ஓங்குயர் சமந்தத்து உச்சிமீமிசை-மிக உயர்ந்த சமந்தம் என்னும் மலையின் உச்சிமீது, அறவியங் கிழவோன் அடியிணை ஆகிய-அறத்திற்கு உரிமையுடையோனாகிய புத்தனின் இணையடிகள் என்னும், பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம் - பிறவியாகிய பெரிய கடலைக் கடத்துவிக்கும், அறவி நாவாய் ஆங்குளது ஆதலின் - அறத்துடன் கூடிய மரக்கலம் அவ்விடத்துள்ளதாகலின், தொழுது வலங் கொண்டு வந்தேன் ஈங்கு-அதனை வலங்கொண்டு பணிந்து ஈண்டு வந்தேன், பழுதில் காட்சி இந் நன் மணிப் பீடிகை - குற்றமற்ற தோற்றத்தினையுடைய நன்றாகிய இந்த மணிப்பீடத்தை, தேவர் கோன் ஏவலின் காவல் பூண்டேன் - இந்திரன் ஏவலாற் காத்தலை மேற்கொண்டேன், தீவதிலகை என் பெயர் - எனது பெயர் தீவதிலகை என்பதாகும் ;
ஓங்குயர், மீமிசை என்பன ஒரு பொருட் பன்மொழிகள். சமந்தம் சமனொளி யெனவும் வழங்குமென்பது, "இலங்கா தீவத்துச் சமனொளி யென்னுஞ் சிலம்பினை யெய்தி" (28 : 107-8) என்று பின் வருவதனா லறியப்படும். சமந்தம் என்பதும், சமனொளி என்பதும் இலங்கையிலுள்ள 'ஆடம்ஸ் பீக்' என ஆங்கில மொழியில் வழங்கும் மலையையே குறிக்குமென்று கருதுவர். அறவி - அறம். காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின் பிறவியைப் பெருங்கடல் என்றார். அறவி நாவாய் - அறவுருவினதாகிய நாவாய் என்றுமாம். பிறவியாகிய பெருங்கடலைக் கடத்தும் அடியிணையாகிய நாவாய் என்க; ¹"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார், இறைவனடி சேரா தார்" என்பதன் கருத்து இதில் அமைந்துள்ளமை காண்க.
¹குறள். 10.
12.5
பாத்திரம் பெற்ற காதை
35
40 தீவ திலகை என்பெய ரிதுகேள்
தரும தலைவன் தலைமையின் உரைத்த
பெருமைசால் நல்லறம் பிறழா நோன்பினா
கண்டுகை தொழுவோர் கண்டதற் பின்னர்ப்
பண்டைப் பிறவியர் ஆகுவர் பைந்தொடி
அரியர் உலகத் தாங்கவர்க் கறமொழி
உரிய துலகத் தொருதலை யாக
29
உரை
35
இது கேள் - இதனைக் கேட்பாயாக, தரும தலைவன் தலைமையின் உரைத்த-தரும வேந்தனாகிய புத்தன் தலைமையாகக் கூறிய, பெருமைசால் நல்லறம் பிறழா நோன்பினர்-பெருமை மிக்க நல்லறத்தில் வழுவாத நோன்புடையாரே, கண்டு கைதொழுவோர்-இப் பீடிகையைக் கண்டு கைகூப்பி வணங்குதற் குரியோராவர் கண்டதற் பின்னர்-அவ்வாறு இப் பீடிகையைக் கண்டபின்னர் பண்டைப் பிறவியர் ஆகுவர் பைந்தொடி-பைந்தொடியே அவர் முற்பிறப்பை அறிந்தோராவர். அரியர் உலகத்து- அத்தன்மையர் உலகத்திற் பெறுதற்கரியர், ஆங்கவர்க்கு அற மொழி உரியது உலகத்து ஒருதலையாக - அவர்கட்கு உறுதியாக உலகிலே தருமபதம் உரியது ;
தருமதலைவன்-தருமராசன்; புத்தன் பெயர்களுள் ஒன்று. நோன் பினராய்க் கண்டு தொழுவோர் என்றலுமாம். அவர்க்கு அறமொழி உரியது என்பது அவர் அறமொழி கேட்டற்குரியர் என்றபடி.
12.6
பாத்திரம் பெற்ற காதை
ஆங்ஙன மாகிய அணியிழை இதுகேள்
ஈங்கிப் பெரும்பெயர்ப் பீடிகை முன்னது
மாமலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய
கோமுகி என்னுங் கொழுநீ ரிலஞ்சி
36
உரை
39
ஆங்ஙனம் ஆகிய அணியிழை இதுகேள் - அத் தன்மையை உடையையாகிய அணியிழையே இதனைக் கேட்பாயாக ஈங்கு இப்பெரும்பெயர்ப் பீடிகை முன்னது-பெரும்புகழுடைய இப் பீடத்தின் முன்னிடத்தாகிய மாமலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய- அழகிய குவளை மலர்களும் நெய்தல் மலர்களும் கலந்து விளங்கு கின்ற, கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சி-கோமுகி என்னும் பெயருடைய அழகிய நீரையுடைய பொய்கையின்கண் ;
ஆங்ஙனமாகிய அணியிழை என்றது அறமொழி கேட்டற்கு உரிமையுடைய என்றபடி பெயர் - புகழ். பெரும் பெயர்ப்பீடிகை - வீடு பயக்கும் பீடிகையுமாம் முன்னதாகிய இலஞ்சியில் என்க.
12.7
பாத்திரம் பெற்ற காதை
40
45 இருதிள வேனிலில் எரிகதி ரிடபத்
தொருபதின் மேலும் ஒருமூன்று சென்றபின்
மீனத் திடைநிலை மீனத் தகவையின்
போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்
ஆபுத் திரன்கை யமுத சுரபியெனும்
மாபெரும் பாத்திரம் மடக்கொடி கேளாய்
40
உரை
45
இருது இளவேனிலில் எரிகதிர் இடபத்து-இளவேனிற் பரு வத்தில் ஞாயிறு இடபத்தில் உள்ள வைகாசித் திங்களில், ஒருபதின் மேலும் ஒரு மூன்று சென்றபின் மீனத்து இடைநிலை மீனத்து அகவையின் - இருபத்தேழு நாண்மீன்களுள் கார்த்திகையை முதலாகக்கொண்டு எண்ணப்படுகின்ற பதின்மூன்றுநாண்மீன்கள் சென்றபின் இடையில் இருப்பதாகிய விசாகத்தின்கண், போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும் - புத்தனுடன் பொருந்தித் தோன்றாநிற்கும், ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் மாபெரும் பாத்திரம் - ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி யென்னும் மிக்க பெருமையுடைய பாத்திரம், மடக்கொடி கேளாய் - இளங் கொடியே கேட்பாயாக ;
இலஞ்சியில் இடபத்து இடைநிலை மீனத் தகவையில் பாத்திரம் பொருந்தித் தோன்றுமென்க. இளவேனிலாகிய இருதுவில் என மாறுக. இளவேனில் - சித்திரைத் திங்களும் வைகாசித் திங்களும் சேர்ந்த பெரும்பொழுது, எரிகதிர்-வெங்கதிர்: ஞாயிறு இடபத்தி லுள்ள திங்கள் என்க. மீனத்து-மீன்களுள். இடைநிலை மீனத் தகவையில்-இடையில் நிற்கும் மீனின்கண் ; அது விசாகமென்பது "மதிநாண் முற்றிய மங்கலத் திருநாள்" (10:83) என முன்புரைத் தமையான் அறியப்படும். புத்தர் பிறந்ததும் ஞானம் பெற்றதும் வைகாசித் தூயநிறைமதி நாளாகலின் அப்பொய்கையில் ஆண்டுதோறும் அந்நாளிற் றோன்றும் அமுதசுரபி 'போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்' எனப்பட்டது. "இருதிள...பொருந்தி" என்பது இவ்வாறே பின்பும் (15 : 23 - 6) வருதல் காண்க. முன்னொரு காலத்திற் கார்த்திகை முதலாக நாட்கள் எண்ணப்பட்டமையின் இருபத்தேழு நாட்களில் விசாகம் பதினான்காவதாகிய நடுநாளாயிற்று. ஒவ்வோ
ராண்டிலும் பகலும் இரவும் முப்பது முப்பது நாழிகையாகச் சமனுற்ற இரண்டு விழுவ நாட்களுள் சித்திரை விழுவில் ஞாயிற்றுக்கு எந்த நாண்மீனிற் புகுதி ஏற்படுகின்றதோ அதனை நான்மீன்களுள் முதலாக வைத்துக் கூறுவது சோதிடநூற் றுணிபாகலின், முன்னொருகாலத்தில் ஞாயிற்றுக்குக் கார்த்திகையிற் புகுதியிருந்தபொழுது அதனை முதலாகக்கொண்டு எண்ணி வந்தனர். பின்பு, வராகமிகிரர் எனப் பெயர் பெற்ற சோதிட வாசிரியர் தமது காலத்தில் சித்திரை விழுநாளில் ஞாயிற்றுக்கு அச்சுவினியிற் புகுதியுண்டாயிருத்தலை அறிந்து, அச்சு வினி முதலாக எண்ணும் வழக்கத்தை யுண்டாக்கின ரென்பர்.
போதி - அரசமரம்; போதத்தையுடைய தென்பது பொருள் ; போதம்-ஞானம்; இதனடியிலிருந்தபொழுது நால்வகை வாய்மைகளை யும் அறிந்து கொள்ளுதற்குரிய ஞானத்தைப் புத்தன் அடைந்தமை யால், இஃது இப் பெயர் பெற்றதென்பர் ; போதியுரவோன், போதித் தலைவன், போதிமாதவன் என்றிங்ஙனம் இந் நூலுட் பல விடத்துப் பின் கூறப்படுதலும் காண்க. அரசு மரங்களுட் சிறந்ததென்பது பகவற்கீதை முதலியவற்றானும் அறியப்படும். போதி என்பது ஞானம் என்ற பொருளில் வருதலும் உண்டு.
அமுத சுரபி-அமுதத்தைக் கொடுக்கும் காமதேனுவைப் போன்ற தென்பது பொருள் ; சுரபி-பசு; இனி, சுரபி-மணம் எனக் கொண்டு, அமிழ்தம் போன்ற மணமுடைய தென்றும் பொருள் கூறுவர்.
12.8
பாத்திரம் பெற்ற காதை
50
அந்நா ளிந்நாள் அப்பொழு திப்பொழுது
நின்னாங்கு வருவது போலும் நேரிழை
ஆங்கதிற் பெய்த ஆருயிர் மருந்து
வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது
தான்தொலை வில்லாத் தகைமைய தாகும்
நறுமலர்க் கோதை நின்னூ ராங்கண்
அறவணன் தன்பாற் கேட்குவை யிதன்திறம்
46
உரை
52
அந்நாள் இந்நாள் அப்பொழுது இப்பொழுது அந்த நன் னாளும் இந்நாளே அது தோன்றும்பொழுதும் இப்பொழுதே ஆகலின், நின்னாங்கு வருவதுபோலும் நேரிழை-நேரிழாய் அது நின் கையிடத்து வருவதுபோலும், ஆங்கதிற் பெய்த ஆருயிர் மருந்து-அப் பாத்திரத்திலிட்ட அரிய உயிரின் மருந்தாகிய அன்னம், வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது-வாங்குவோர் களுடைய கையிடத்தை வருத்துதல் அன்றி, தான் தொலைவில்லாத் தகைமையது ஆகும்-தான் அழவில்லாத இயல்பினையுடைய தாகும், நறுமலர்க் கோதை-மணம் மிக்க மலர்மாலையினை யணிந்த நங்காய், நின்னூர் ஆங்கண் - நின் பதியின்கண் அறவணன் தன் பால் கேட்குவை இதன் திறம்-அறவணவடிகளிடத்தில் இப்பாத்திரத்தின் வரலாற்றினைக் கேட்பாய் ;
ஆருயிர்மருந்து-அடிசில்; உயிர்களைப் பாதுகாத்தலின் இங்ஙனம் கூறப்பட்டது ; "அகன்சுரைப் பெய்த வாருயிர் மருந்து" (11 : 117) என்பர் பின்னும் ; ¹"இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்" என்பதனால் சோறும் நீரும் இருமருந்தெனப்படுதல் காண்க. தான் என்றது சோற்றை.
¹புறம். 70.
12.9
பாத்திரம் பெற்ற காதை
55
60 என்றவள் உரைத்தலும் இளங்கொடி விரும்பி
மன்பெரும் பீடிகை தொழுதனள் வணங்கித்
தீவ திலகை தன்னொடுங் கூடிக்
கோமுகி வலஞ்செய்து கொள்கையின் நிற்றலும்
எழுந்துவலம் புரிந்த இளங்கொடி செங்கையில்
தொழுதகை மரபிற் பாத்திரம் புகுதலும்
பாத்திரம் பெற்ற பைந்தொடி மடவாள்
மாத்திரை யின்றி மனமகிழ் வெய்தி
53
உரை
60
என்று அவள் உரைத்தலும் இளங்கொடி விரும்பி-என்று தீவதிலகை மொழிதலும் மணிமேகலை அதனை விரும்பி, மன் பெரும் பீடிகை தொழுதனள் வணங்கி-பெருமை மிக்க பீடத்தைக் கும்பிட்டு வணங்கி, தீவதிலகை தன்னொடும் கூடி-தீவதிலகை யொடுஞ் சேர்ந்து, கோமுகி வலஞ்செய்து கொள்கையின் நிற்றலும்-கோமுகிப் பொய்கையை வலம்வந்து நியமத்தோடு நிற்றலும், எழுந்து வலம் புரிந்த இளங்கொடி செங்கையில் தொழும் தகை மரபிற் பாத்திரம் புகுதலும்-அனைவரும் தொழத்தக்க மரபினையுடைய மாபெரும் பாத்திரம் பொய்கையினின்றும் எழுந்து வலம் புரிந்து நின்ற மணிமேகலையின் சிவந்த கைகளிற் புகுதலும், பாத்திரம் பெற்ற பைந்தொடி மடவாள் மாத்திரை இன்றி மனமகிழ்வு எய்தி-பாத்திரத்தைப் பெற்ற மணிமேகலை அளவின்றி மனமகிழ்ச்சி யடைந்து ;
பாத்திரம் எழுந்து செங்கையிற் புகுதலும் என்க.
12.10
பாத்திரம் பெற்ற காதை
65
70 மாரனை வெல்லும் வீர நின்னடி
தீநெறிக் கடும்பகை கடிந்தோய் நின்னடி
பிற்ர்க்கறம் முயலும் பெரியோய் நின்னடி
துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்னடி
எண்பிறக் கொழிய இருந்தோய் நின்னடி
கண்பிறர்க் களிக்குங் கண்ணோய் நின்னடி
தீமொழிக் கடைத்த செவியோய் நின்னடி
வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி
நரகர் துயர்கெட நடப்போய் நின்னடி
உரகர் துயரம் ஒழிப்போய் நின்னடி
வணங்குதல் அல்லது வாழ்த்தலென் நாவிற்
கடங்கா தென்ற வாயிழை முன்னர்ப்
61
உரை
72
மாரனை வெல்லும் வீர நின் அடி-மாரனை வென்ற வீரனே நின் திருவடிகளை, தீநெறிக் கடும்பகை கடிந்தோய் நின் அடி-தீய வழிகளாகிய மிக்க பகையை நீக்கினோய் நின் திருவடிகளை, பிறர்க்கு அறம் முயலும் பெரியோய் நின் அடி-ஏனையோர்க்கு அறம் உண்டாதற்கு முயல்கின்ற பெரியோனே நின் திருவடிகளை, துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின் அடி-சுவர்க்க இன்பத்தை வேண்டாத பழையோனே நின் திருவடிகளை, எண் பிறக்கு ஒழிய இறந்தோய் நின் அடி - மக்களுடைய எண்ணங்கள் எட்டாமற் பின்னே கிடக்குமாறு மேற்பட்ட நிலையிற் சென்றோய் நின் திருவடிகளை, கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின் அடி - உயிர்கட்கு ஞானத்தை அளிக்கும் மெய்யுணர்வுடையோய் நின் திருவடிகளை, தீமொழிக்கு அடைத்த செவியோய் நின் அடி - தீயமொழிகளைக் கேளாதிருக்குமாறு அடைக்கப்பட்ட காதினை யுடையோனே நின் திருவடிகளை, வாய்மொழி சிறந்த நாவோய் நின் அடி - மெய்மொழிகள் சிறந்த நாவினை யுடையோய் நின் திருவடிகளை, நரகர்துயர் கெட நடப்போய் நின் அடி-நிரயத்திலிருப்போர்களின் துன்பம் நீங்குமாறு ஆண்டுச்சென்றோய் நின் திருவடிகளை, உரகர் துயரம் ஒழிப்போய் நின் அடி - நாகர்களின் துன்பத்தை நீக்குவோய் நின் திருவடிகளை, வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்கு அடங்காது என்ற ஆயிழை முன்னர்-வணங்குதலேயன்றி வாழ்த்துதல் எனது நாவின்கண் அடங்காது என்று பரவிய மணிமேகலையின் முன்னர் ;
பாத்திரம் பெற்ற மகிழ்ச்சியாலும் அன்பின் ஆராமையினாலும் நின்னடி' என்பதனைப் பலகால் அடுக்கிக் கூறினளாயினும், வீர, கடிந்தோய் என்றிங்ஙனம் விளியடுத்த பெயர்களை ஒருசேரக் கூறி, அவற்றினிறுதியில் 'நின்னடி' என்று கூறுதல் அமையும். மாரன் - அறத்திற்கு மாறாய தீய விருப்பங்களை மனத்தில் உண்டாக்கும் ஒரு தேவன் ; மாபோதியின்கீழ் தவஞ்செய்திருக்கையில் இவன் செய்த இடையூறுகளை யெல்லாம் புத்தன் வென்று மேம்பட்டு விளங்கினன் என்பர். முயலுதலாவது அறத்தினை அறிவுறுத்தல்; பிறர் பொருட்டு அறத்தினை முயன்று செய்யும் என்றுமாம். அழிவற்ற நிருவாணமே (முத்தியே) அவனால் விரும்பப்பட்டமையின் அழியு மியல்புடைய துறக்கம் வேண்டப்படாதாயிற்று. பிறக்கு-பின்; ¹"துறைபிறக் கொழியப் போகி" என்பது காண்க. கண்-ஈண்டு ஞானம்; புத்தன் எடுத்த பல பிறப்புக்களுள் ஒன்றில் வந்து இரந்த இந்திரற்குக் கண்ணைக் கொடுத்ததனை இதற்குப் பொருளாகக் கொள்ளுதல் சிறப்பின்று. தீமொழி-பொய், குறளை, வன்சொல், பயனில்சொல் என்பன. நரகர் சிலரது துன்பந் தணித்தற் பொருட்டுப் புத்தன் ஒரு பிறப்பில் நரகலோகத்திற்குச் சென்றான் என்பர். ²"அருவினை சிலர் கெட வொரு பெரு நரகிடை, எரிசுடர் மரைமல ரெனவிடு மடியினை" என்பது காண்க. கருடனுக்கு அருளறம் போதித்து நாகர் துயரினைப் போக்கினானென்பதும் வீரசோழியத்து அச் செய்யுளுரை மேற்கோள்களால் அறியப்படும்.
¹ பெரும்பாண், 351. ² வீர. யாப்பு. 11. மேற்கோள்.
12.11
பாத்திரம் பெற்ற காதை
75 போதி நீழற் பொருந்தித் தோன்றும்
நாதன் பாதம் நவைகெட ஏத்தித்
தீவ திலகை சேயிழைக் குரைக்கும்
73
உரை
75
போதிநீழல் பொருந்தித் தோன்றும்-அரசமரத்தின் நீழலில் அமர்ந்து விளங்கும், நாதன் பாதம் நவை கெட ஏத்தி-புத்தன் அடிகளைக் குற்றம் நீங்குமாறு துதித்து, தீவதிலகை சேயிழைக்கு உரைக்கும்-மணிமேகலைக்குத் தீவதிலகை மொழியும்;
புத்தனை நாதன் எனப் பின்னரும் வழங்குவர்.
12.12
பாத்திரம் பெற்ற காதை
80 குடிப்பிறப் பழிக்கும் விழுப்புங் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி யென்றும் பாவியது தீர்த்தோர்
இசைச்சொல் அளவைக் கென்நா நிமிராது
76
உரை
81
குடிப்பிறப்பு அழிக்கும்-தன்னாற் பற்றப்பட்டாருடைய உயர்குடிப் பிறப்பைக் கெடுக்கும், விழுப்பம்கொல்லும்-சிறப்பினை அழிக்கும், பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்-பற்றிய கல்வியாகிய பெரிய தெப்பத்தை நீக்கும், நாண் அணி களையும்-நாணாகிய அணிகலனைப் போக்கும், மாண் எழில் சிதைக்கும்-மாட்சிமைப்பட்ட அழகைக் குலைக்கும், பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்-பூண் விளங்குகின்ற கொங்கைகளையுடைய மகளிரொடு பிறர் கடைவாயிலில் நிறுத்தும், பசிப்பிணி என்னும் பாவி-பசி நோய் என்று கூறப்படுகின்ற பாவி, அது தீர்த்தோர்-அத்தகைய பசியை நீக்கினோரது, இசைச்சொல் அளவைக்கு என் நா நிமிராது-புகழை அளந்துரைத்தற்கு எனது நா எழாது ;
குடிப் பிறந்தார்க் கேலாத இழிசெயல்களை உளவாக்கலின் அதனை அழிக்கும் என்றாள். பிடித்த-பற்றுக் கோடாகக் கொண்ட. விடூஉம்-விடுவிக்கும் : பிறவினை ; கல்வியும் அழியும் என்றபடி ; அவரது சொல் செல்லா தென்றவாறுமாம் ; ¹"நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார், சொற்பொருள் சோர்வு படும்" என்பது காண்க. அழகு செய்தலின் நாண் அணியெனப்பட்டது ; ²"அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு" என்றார் வள்ளுவனாரும். ஆணெழில் எனப் பிரித்தலுமாம்; ³"பிறந்த குலமாயும் பேராண்மை மாயும், சிறந்த தங் கல்வியு மாயும்" என்பது அறியற்பாலது. பண்பிற்குப் பண்பு இல்லையேனும் தன்னாற் பற்றப்பட்டாருடைய நலங்களை யெல்லாம் அழித்தற் கொடுமைபற்றி, வேறு பண்புள்ளதுபோல் பசியைப் பாவியென்றார்; ⁴"இன்மை யெனவொரு பாவி" என்பதுங் காண்க. நிமிராது-எழாது; பேச முயலாது; புகழ் அளவுபடா தென்றபடி.
¹குறள். 1049. ² குறள். 1014. ³ நாலடி. 285.
⁴ குறள். 1042.
12.13
பாத்திரம் பெற்ற காதை
85
90 புன்மரம் புகையப் புகையழல் பொங்கி
மன்னுயிர் மடிய மழைவளம் கரத்தலின்
அரசுதலை நீங்கிய வருமறை யந்தணன்
இருநில மருங்கின் யாங்கணுந் திரிவோன்
அரும்பசி களைய வாற்றுவது காணான்
திருந்தா நாயூன் தின்னுத லுறுவோன்
இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர்
வந்து தோன்றிய வானவர் பெருந்தகை
மழைவளந் தருதலின் மன்னுயி ரோங்கிப்
பிழையா விளையுளும் பெருகிய தன்றோ
82
உரை
91
புல் மரம் புகையப் புகை அழல் பொங்கி-புல்லும் மரமும் கரியுமாறு புகையையுடைய அழல்போலும் வெப்பம் மிகுந்து, மன்னுயிர் மடிய மழைவளம் கரத்தலின்-நிலைபெற்ற உயிர்கள் அழியுமாறு மழையாகிய செல்வம் மறைந்து போனமையால், அரசுதலை நீங்கிய அருமறை அந்தணன்-அரசுபுரிதலினின்றும் நீங்கிய அரிய மறைகளை யுணர்ந்த அந்தணனாகிய விசுவாமித்திர முனிவன், இரு நில மருங்கின் யாங்கணும் திரிவோன்-பெரிய பூமியிடத்து யாண்டும் சுற்றுகின்றவன், அரும்பசி களைய ஆற்றுவது காணான்-அரிய பசியை நீக்க உதவுவதாகிய உணவு ஒன்றையுங் காணாதவனாய், திருந்தா நாய் ஊன் தின்னுதல் உறுவோன்-சிறிதும் பொருந்தாத நாயின் ஊனைத் தின்னத் தொடங்குவோன், இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர்-உண்ணுமுன் செய்தற்குரிய தேவ பலியினைச் செய்கின்ற பொழுது அவன் முன்னர், வந்து தோன்றியவானவர் பெருந்தகை - வந்து வெளிப்பட்ட அமரர் தலைவன், மழைவளம் தருதலின்-மழைவளத்தை அளித்தலான், மன்னுயிர் ஓங்கி-நிலைபெற்ற உயிர்கள் மிகுந்து, பிழையா விளையுளும் பெருகியது அன்றோ - தப்பாத விளைவும் மிகுந்த தன்றோ;
புறவயிரமுடையன புல் எனவும், அகவயிர முடையன மரமெனவும் படுமென்பது தொல்காப்பியத்து மரபியலானறியப்படும்; புல் - அறுகு முதலியனவுமாம். விசுவாமித்திரன் அரசர் மரபிற் பிறந்து புவியை ஆண்டுவருங்கால் வசிட்டருடன் முரணி அவரது தவ ஆற்றலையறிந்து, தானும் அருந்தவம்புரிந்து முனிவனாயினன் என்பது வரலாறு. அவன் பசிக்கொடுமையால் நாயூன் தின்ன முயன்ற செய்தி மனு நூலின் பத்தாம் அத்தியாயத்தினும் கூறப்பட்டுளது. இந்திர சிறப்பு- உண்ணுமுன் செய்யும் பலியீடு; இதனை 'வைச்சுவதேவம்' என்பர்; பிற தேவர்கட்கும் உரியதெனினும் தலைமைபற்றி 'இந்திர சிறப்பு' எனப்பட்டது. இது பசியின் கொடுமைக்கு ஒரு வரலாறு காட்டியபடி.
12.14
பாத்திரம் பெற்ற காதை
95 ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்க ளரும்பசி களைவோர்
மேற்றே யுலகின் மெய்நெறி வாழ்க்கை
மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே
உயிர்க்கொடை பூண்ட உரவோ யாகிக்
கயக்கறு நல்லறங் கண்டனை யென்றலும்
92
உரை
98
ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்-பொறுக்கும் வன்மையுடையோராகிய செல்வர்க்கு அளிக்கின்றவர்கள் அறத்தினை விலை கூறுவோரேயாவர், ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை-வறிஞர்களின் தீர்த்தற்கரிய பசியை நீக்குவோரின் கண்ணதே உலகத்தின் உண்மை நெறியாகிய வாழ்க்கை, மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் - அணுக்கள் செறிந்த நிலவுலகில் வாழ்வோர்களில் எல்லாம், உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே - உணவினை அளித்தோரே உயிர்கொடுத்தோராவர், உயிர்க்கொடை பூண்ட உரவோய் ஆகி-உயிரினை அளிக்கும் அறத்தினை மேற்கொண்ட வலிய அறிவினை உடையையாகி, கயக்கறு நல்லறம் கண்டனை என்றலும்-கலங்குதலற்ற நல்லறத்தினை அறிந்தாய் என்று தீவதிலகை உரைத்தலும் ;
ஆற்றுநர்க்கு-கைம்மாறு செய்யும் வலியுடையோர்க்கு என்றுமாம். அறவிலை பகர்வோர் - அறமென்னும் பெயரால் வாணிகஞ் செய்வோர் என்றுமாம் ; பயன் கருதிச் செய்வோராகின்றமையின் "அறவிலை பகர்வோர்" என்றாள். ¹"இம்மைச் செய்தது மறுமைக் காமெனும் அறவிலை வாணிகன் ஆஅ யல்லன்" ²"ஏற்றகை மாற்றாமை யென்னானுந் தாம் வரையா, தாற்றாதார்க் கீவதா மாண்கடன்" என்பன ஈண்டு அறியற் பாலன. வாழ்வோர்க்கெல்லாம்-வாழ்வோ ரெல்லாருள்ளும் என்க : வேற்றுமை மயக்கம். ³"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" எனப் புறப்பாட்டில் வந்துள்ளமையும் காண்க. கயக்கு - கயங்குதல் ; கலங்குதல்; "கயக்கறுமாக்கள்" (16 : 85) என்பர் பின்னும்.
¹ புறம். 134. ² நாலடி. 98. ³ புறம். 18.
12.15
பாத்திரம் பெற்ற காதை
100
105 விட்ட பிறப்பில்யான் விரும்பிய காதலன்
திட்டி விடமுணச் செல்லுயிர் போவுழி
உயிரொடு வேவே னுணர்வொழி காலத்து
வெயில்விளங் கமையத்து விளங்கித் தோன்றிய
சாது சக்கரன் றனையா னூட்டிய
காலம் போல்வதோர் கனாமயக் குற்றேன்
ஆங்கதன் பயனே ஆருயிர் மருந்தாய்
ஈங்கிப் பாத்திரம் என்கைப் புகுந்தது
99
உரை
106
விட்ட பிறப்பில் யான் விரும்பிய காதலன்-போன பிறவியில் என்னால் விரும்பப்பட்ட கணவன், திட்டிவிடம் உணச் செல் உயிர் போவுழி-திட்டிவிடமெனும் பாம்பு தீண்டப்பெற்று உயிர் நீங்கினவிடத்து, உயிரொடு வேவேன் உணர்வு ஒழிகாலத்து - தீயிற் குளித்து உயிருடன் வேகாநிற்கும் யான் உணர்வு நீங்குந் தறுவாயில், வெயில் விளங்கு அமயத்து விளங்கித் தோன்றிய - வெயில் விளங்குகின்ற உச்சிப் பொழுதில் விளக்கமுற்றுத் தோன்றிய, சாது சக்கரன் தனை யான் ஊட்டிய காலம் போல்வதோர் கனாமயக்குற்றேன்-சாது சக்கரனை யான் உண்பித்த பொழுதைப் போல்வதாகிய ஒரு கனாவாகிய மயக்கத்தை யடைந்தேன், ஆங்கதன் பயனே - அக் கனாப்போலும் நினைவின் பயனே, ஆருயிர் மருந்தாய் ஈங்கு இப்பாத்திரம் என் கைப்புகுந்தது - அரிய உயிர்களைக் காக்கும் மருந்தாகி இப் பாத்திரம் ஈண்டு என் கையிற்புக்கது ;
உயிருடன தீயிற் குளித்து வெந்தமையின் 'உயிருடன் வேவேன்' என்றாள். வேவேன் : பெயர். முற்பிறப்பிலே கணவன் திட்டிவிடத்தாலிறந்ததும், இவள் தீயிற் குளித்ததும் (9:49--50) முன்னரும் போந்தமை யறிக. வேவேன் உணர்வொழி காலத்துக் கனாமயக்குற்றேன் என்க. 'அதன் பயனே......என்கைப் புகுந்தது' என்னுங் கருத்து உண்மை நூற் றுணிபாதல், ¹"பிறப்பென்னும் பேதைமை" என்னுங் குறளுரையில்; "உயிர் உடம்பின் நீங்குங்காலத்து அதனால் யாதொன்று பாவிக்கப்பட்டது அஃது அதுவாய்த் தோன்றுமென்பது எல்லா ஆகமங்கட்கும் துணிபாகலின்" எனப் பரிமேலழகர் கூறியவாற்றானும் அறியப்படும். புகுந்தது அதன்பயனே யாகுமென்க.
¹குறள். 358.
12.16
பாத்திரம் பெற்ற காதை
110
115 நாவலொடு பெயரிய மாபெருந் தீவத்து
வித்தி நல்லறம் விளைந்த வதன்பயன்
துய்ப்போர் தம்மனைத் துணிச்சித ருடுத்து
வயிருகாய் பெரும்பசி யலைத்தற் கிரங்கி
வெயிலென முனியாது புயலென மடியாது
புறங்கடை நின்று புன்கண் கூர்ந்துமுன்
அறங்கடை நில்லா தயர்வோர் பலரால்
ஈன்ற குழவி முகங்கண் டிரங்கித்
தீம்பால் சுரப்போள் தன்முலை போன்றே
நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சைப் பாத்திரத்
தகன்சுரைப் பெய்த ஆருயிர் மருந்தவர்
முகங்கண்டு சுரத்தல் காண்டல்வேட் கையேன்என
107
உரை
118
நாவலொடு பெரிய மாபெருந் தீவத்து-மிகப் பெரிய சம்புத் தீவின்கண். வித்தி நல்லறம் விளைந்த அதன் பயன் - நல்லறத்தை விதைத்து அதன்கண் விளைந்த பயனாகிய செல்வத்தை, துய்ப்போர் தம்மனை - அனுபவிக்கும் செல்வருடைய இல்லத்தில், துணிச் சிதர் உடுத்து - கிழிந்த சீரைகளை உடுத்திக்கொண்டு, வயிறுகாய் பெரும்பசி அலைத்தற்கு இரங்கி - வயிற்றினைக் காய்கின்ற பெரிய பசி அலைத்தலால் வருந்தி, வெயில் என முனியாது புயல் என மடியாது - மிக்க வெயில் என்று வெறுப்படையாமலும் மழை என்று ஓரிடத்தில் தங்காமலும் சென்று, புறங்கடை நின்று புன்கண் கூர்ந்து - தலைவாயிலில் நின்றுகொண்டு துன்பமிகுந்து, முன் அறங்கடை - முற்பிறப்பிற் செய்த தீவினையால், நில்லாது அயர்வோர் பலரால்-ஓரிடத்தில் நில்லாமல் அயர்கின்றவர் பலராவர் ஆகலின், ஈன்ற குழவி முகம் கண்டு இரங்கி-பெற்ற குழவியினது முகத்தைக் கண்டு இரங்கி, தீம்பால் சுரப்போள் தன்முலை போன்றே - இனிய பாலைச் சுரக்கின்ற தாயின் கொங்கையைப் போல, நெஞ்சுவழிப் படூஉம் விஞ்சைப் பாத்திரத்து - மனத்தின் வழியே ஒழுகும்விஞ்சையையுடைய இப்பாத்திரத்தின்கண், அகன் சுரைப்பெய்த ஆருயிர் மருந்து - அகன்ற உள்ளிடத்திலிட்ட அரியவுயிர் மருந்தாகிய உணவு, அவர் முகம் கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன் என - அவ்வறிஞர்களின் முகத்தைக் கண்டு சுரத்தலைக் காணும் விருப்ப முடையேன் என்று மணிமேகலை கூற ;
சிதர் - சிதார் எனவும் வழங்கும். வயிறு காய்-வயிறு உணவின்றிக் காய்ந்தமையாலாகிய எனலுமாம். அலைத்தற்கு-அலைத்தலால். அறத்தின் நீக்கப்பட்டமையின், பாவம் அறங்கடை யெனப்பட்டது; ¹;"அறன் கடை நின்றாரு ளெல்லாம்" என்பதூஉங் காண்க. ²;"அகத்தாரே வாழ்வாரென் றண்ணாந்து நோக்கிப், புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி, மிகத்தாம் வருந்தி யிருப்பரே மேலைத் தவத்தாற் றவஞ்செய்யாதார்" என்பது ஈண்டு அறியற்பாலது. மடியாது சென்று என ஒரு சொல்லும், அறங்கடையால் என மூன்றனுருபும் விரித்துரைக்க. சுரை-உட்டுளை ; ஈண்டுப் பாத்திரத்தின் குழிந்த உள்ளிடம்.
¹ குறள். 142. ² நாலடி. 31.
12.17
பாத்திரம் பெற்ற காதை
120 மறந்தே னதன்திறம் நீயெடுத் துரைத்தனை
அறங்கரி யாக அருள்சுரந் தூட்டும்
சிறந்தோர்க் கல்லது செவ்வனஞ் சுரவாது
ஆங்ஙன மாயினை அதன்பயன் அறிந்தனை
ஈங்குநின் றெழுவாய் என்றவள் உரைப்பத்
119
உரை
123
மறந்தேன் அதன் திறம் நீ எடுத்துரைத்தனை-யான் அதன் இயல்பினை நன்கு மறந்தேன் நீ எடுத்துக் கூறினாய், அறம் கரியாக அருள் சுரந்து ஊட்டும் - அறமே சான்றாக அருட்பெருக்கால் உண்பிக்கும், சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது-சிறப்புடையோர்கட்கு அன்றி ஏனையோர்க்குச் செவ்வனே சுரவாது, ஆங்ஙனம் ஆயினை அதன் பயன் அறிந்தனை-அறம் கரியாக அருள் சுரந்தூட்டும் அத்தன்மையையுடையை யாயினை அங்ஙனம் ஊட்டுவதின் பயனையும் அறிந்தாய் ஆதலின், ஈங்கு நின்று எழுவாய் என்று அவள் உரைப்ப-ஈண்டு நின்று நின் பதிக்கு எழுவாயாக என்று தீவதிலகை மொழிய ;
அறம் கரியாக என்றது பிறரறியச் செய்தல் வேண்டா என்றபடி. அருளாவது ஒன்றின் துயர் கண்டவழி வேறு காரணமின்றித் தோன்றும் இரக்கம். 'அவர் முகங்கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன்' என முன்பு கூறியதனால் 'ஆங்ஙனமாயினை' என்றாள்.
12.18
பாத்திரம் பெற்ற காதை
125
130 தீவ திலகை தன்னடி வணங்கி
மாபெரும் பாத்திரம் மலர்க்கையில் ஏந்திக்
கோமகன் பீடிகை தொழுது வலங்கொண்டு
வானூ டெழுந்து மணிமே கலைதான்
வழுவறு தெய்வம் வாய்மையின் உரைத்த
எழுநாள் வந்த தென்மகள் வாராள்
வழுவாய் உண்டென மயங்குவோள் முன்னர்
வந்து தோன்றி யவர்மயக் கங்களைந்
124
உரை
131
தீவதிலகை தன் அடி வணங்கி-தீவதிலகையினுடைய அடிகளைப் பணிந்து, மாபெரும் பாத்திரம் மலர்க்கையின் ஏந்தி - பெருமை மிக்க அமுதசுரபியை மலர்போலும் கையில் ஏந்தி, கோமகன் பீடிகை தொழுது வலங்கொண்டு-புத்தன் திருவடிப் பீடத்தை வலங்கொண்டு வணக்கஞ்செய்து, வானூடு எழுந்து மணிமேகலைதான் - மணிமேகலை விசும்பின் வழியாக எழுந்து, வழுவறு தெய்வம் வாய்மையின் உரைத்த - வழுவுதலற்ற மணிமேகலா தெய்வம் உறுதியாகக் கூறிய, எழுநாள் வந்தது என் மகள் வாராள் - ஏழாம் நாள் வந்தது என் மகள் வரவில்லை, வழுவாய் உண்டென மயங்குவோள் முன்னர் - தப்புதலும் உண்டு போலும் என்று கலங்குகின்ற மாதவியின்முன், வந்து தோன்றி அவர் மயக்கம் களைந்து-வந்து தோன்றி அவர்களுடைய கலக்கத்தை நீக்கி ;
மயங்குவோள் - சுதமதியுமாம். இருவரும் அகப்பட 'அவர்' என்றார். மணிமேகலை தான் வந்து தோன்றி யென்க.
12.19
பாத்திரம் பெற்ற காதை
135
தந்தில் அவர்க்கோர் அற்புதங் கூறும்
இரவி வன்மன் ஒருபெரு மகளே
துரகத் தானைத் துச்சயன் தேவி
அமுத பதிவயிற் றரிதில் தோன்றித்
தவ்வைய ராகிய தாரையும் வீரையும்
அவ்வைய ராயினீர் நும்மடி தொழுதேன
132
உரை
137
அந்தில் அவர்க்கு ஓர் அற்புதம் கூறும் - அவ்விடத்தில் அவர்கட்கு ஓர் அற்புதத்தைக் கூறுவாள், இரவிவன்மன் ஒரு பெருமகளே - இரவிவன்மனுடைய ஒப்பற்ற பெரிய மகளே, துரகத்தானைத் துச்சயன் தேவி-குதிரைச் சேனைகளையுடைய துச்சயனுடைய மனைவியே, அமுதபதி வயிற்று அரிதில் தோன்றி- அமுதபதியின் வயிற்றின்கண் அரிதாகப் பிறந்து, தவ்வையா ஆகிய தாரையும் வீரையும்-எனக்குத் தமக்கையராகிய தாரையும் வீரையுமாய நீவிர், அவ்வையர் ஆயினீர்-இப்பிறப்பில் எனக்குத் தாயர் ஆயினீர், நும் அடி தொழுதேன் - நும்முடைய அடிகளை வணங்கினேன் ;
தேவி - மாதவி ; சுதமதியுமாம். தவ்வையர் - தமக்கைமார். அவ்வையர் - தாய்மார் ; மாதவிக்குத் தோழியாகலின் செவிலி யென்பது பற்றிச் சுதமதியையும் தாய் என்றாள்.
12.20
பாத்திரம் பெற்ற காதை
140
145 வாய்வ தாக மானிட யாக்கையில்
தீவினை அறுக்கும் செய்தவம் நுமக்கீங்
கறவண அடிகள் தம்பாற் பெறுமின்
செறிதொடி நல்லீர் உம்பிறப் பீங்கிஃ
தாபுத் திரன்கை அமுத சுரபியெனும்
மாபெரும் பாத்திரம் நீயிரும் தொழுமெனத்
தொழுதனர் ஏத்திய தூமொழி யாரொடும்
பழுதறு மாதவன் பாதம் படர்கேம்
எழுகென வெழுந்தெனள் இளங்கொடி தானென
138
உரை
146
வாய்வதாக மானிடயாக்கையில் தீவினை அறுக்கும் செய் தவம் நுமக்கீங்கு-நுங்கட்கு இப்பொழுது மனித உடலால் தீவினைகளை அறுக்கவல்ல செய்தவம் வாய்ப்புடைத்தாகுக, அறவண வடிகள் தம்பால் பெறுமின் செறிதொடி நல்லீர் உம் பிறப்பு - செறிந்த வளையல்களை யணிந்த மகளிரே உம் பிறப்பினை அறவண வடிகள்பால் அறிந்துகொள்ளுமின், ஈங்கிஃது ஆபுத்திரன் கை அமுத சுரபிஎனும் மாபெரும் பாத்திரம்-இங்கிருக்கின்ற இது ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி என்னும் பெயருடைய பெருமைமிக்க பாத்திரமாகும், நீயிரும் தொழும் என - இதனை நீவிரும் வணங்குவீர் என்று கூற, தொழுதனர் ஏத்திய தூமொழி யாரொடும் - வணங்கித் துதித்த மாதவி சுதமதியுடன், பழுதறு மாதவன் பாதம் படர்கேம் எழுக என எழுந்தனள் இளங்கொடி தான்என்-குற்றமற்ற பெருந்தவமுடைய அறவண வடிகள் திருவடிகளை வணங்குதற்குச் செல்லுவேம் நீவிரும் எழுக எனவுரைத்து மணிமேகலை எழுந்தனள் என்க.
செய்தவம் வாய்வதாக எனவும், பிறப்பு பெறுமின் எனவும் கூட்டுக. தொழுமெனக்கூறி எழுகென எழுந்தனளென்க ;
மணிபல்லவத்தில் தெய்வம் நீங்கிய பின்னர் மணிமேகலை நோக்கித் திரிய, தீவதிலகை தோன்றி 'யார் நீ' என்றலும், 'கேளாய், என் வரவு ஈது; பயன் இது; அன்னாய், நீ யார்?' என்றலும் தீவதிலகை உரைக்கும்; உரைப்பவள், என்றுரைத்தலும், மணிமேகலை விரும்பிப் பீடிகையைத் தொழுது வணங்கிக் கூடி வலஞ்செய்து நிற்றலும், அவள் கையிற் பாத்திரம் புகுந்தது ; புகுதலும் மகிழ்வெய்தி, 'வாழ்த்தல் என்னாவிற்கடங்காது' என்றாள்; என்ற ஆயிழை முன்னர்த் தீவதிலகை உரைக்கும்; உரைப்பவள், 'கண்டனை' என்றலும், மணிமேகலை 'சுரத்தல் காண்டல் வேட்கையேன்' என, அவளுரைப்ப, மணிமேகலை வணங்கி ஏத்தி வலங்கொண்டு எழுந்து, மயங்குவோள் முன்னர் வந்து தோன்றிக் களைந்து கூறும்; கூறுகின்றவள், தொழுமென, தொழுதேத்திய அவரொடும் இளங்கொடி எழுந்தனள் என வினை முடிவு செய்க.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil