Maṇimēkalai's Renunciation 16.11
Maṇimēkalai urai 16.11
- Language
- Tamil
16.11
பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை
60
65
ஒலித்தொருங் கீண்டிய ஊர்க்குறு மாக்களும்
மெலித்துகு நெஞ்சின் விடருந் தூர்த்தரும்
கொடிக்கோ சம்பிக் கோமகன் ஆகிய
வடித்தேர்த் தானை வத்தவன் தன்னை
வஞ்சஞ் செய்துழி வான்தளை விடீஇய
உஞ்சையில் தோன்றிய யூகி அந்தணன்
உருவுக் கொவ்வா உறுநோய் கண்டு
59
உரை
65
ஒலித்து ஒருங்கு ஈண்டிய - ஆரவாரித்து ஒருங்கு கூடிய, ஊர்க்குறு மாக்களும்-அறிவில்லாத ஊர்ச்சிறாரும், மெலித்து உகு நெஞ்சின் விடரும் தூர்த்தரும் - காமத்தால் நைந்து கெடும் மனத்தினையுடைய தீயோரும் பரத்தரும், கொடிக்கோசம்பிக்கோமகன் ஆகிய வடித்தேர்த் தானை வத்தவன் தன்னை-கொடிகளால் அலங்கரிக்கப் பெற்ற கோசம்பி நகரத்தின் அரசனாகிய திருந்திய தேர்ச் சேனைகளையுடைய உதயணனை, வஞ்சம் செய்துழி வான்தளை விடீஇய - உஞ்சை மன்னவன் பிரச்சோதனன் வஞ்சித்துச் சிறைப்படுத்தியவழி அவனை விடுவிக்கும் பொருட்டு, உஞ்சையில் தோன்றிய யூகி அந்தணன் - உச்சயினி நகரில் வேற்று வேடங்கொண்டு தோன்றிய யூகி யென்னும் அந்தணனது, உருவுக்கு ஒவ்வா உறுநோய் கண்டு பரிவுறு மாக்களில் தாம் பரிவு எய்தி - வடிவிற்கேலாத மிகுந்த நோயைக் கண்டு துன்புற்ற மக்களைப் போலத் தாமும் இரக்கமுற்று ;
ஊரிலே திரியு மியல்பின ரென்பார் 'ஊர்க்குறு மாக்கள்' என்றார். மெலித்து: மெலிந்து என்பதன் விகாரம். விடர் தூர்த்தர் என்பவற்றிற்கு முன்னர் (14: 61) உரைத்தமை காண்க. கோசம்பி - வத்த நாட்டின் தலைநகர். கோமகன் - கோமான் ; அரசன் ; அரசன் குமாரன் என்றுமாம். வத்தவன் - வத்த நாடுடைமையின் வந்த பெயர்; வத்தம்: வத்ஸம் என்பதன் திரிபு. வத்த நாட்டின் கோசம்பி நகரத் தரசனாகிய உதயணனை உச்சயினி நகரத்தரசனாகிய பிரச்சோதனன் சாலங்காயன் என்னும் தன் அமைச்சனால் எந்திர யானையைக் காட்டிப் பிடித்துவரச் செய்து சிறைப்படுத்தினன் என்க. விடீஇய - விடுவிக்க; பிறவினை. உஞ்சை - உச்சியினி ; அவந்தி நாட்டின் தலைநகர்; அவந்தி என்றும் கூறப்படும். யூகி-உதயணனுடைய அமைச்சருளொருவன். மிக்க சூழ்ச்சித்திறம் வாய்ந்தவன். அவன் பெரு நோயுற்றவன் போலவும் மருள்கொண்டவன் போலவும் உஞ்சை நகரின் வீதியில் திரிந்த பொழுது நகரத்தின் மாக்கள் பலரும் அவனைச் சூழ்ந்து பரிவுற்றனரென்பது உதயணன் கதையால் அறியப்படும்.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil