Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 16

Maṇimēkalai urai 16

Language
Tamil

16.1

பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை

1 இன்னும் கேளாய் இளங்கொடி மாதே

1

உரை

1

இன்னும் கேளாய் இளங்கொடி மாதே-இளமை பொருந்தியகொடி போலும் மாதே இன்னும யான் கூறுவதனைக் கேட்பாயாக ; இன்னும் - மற்றுமென்னும் பொருட்டு:

16.2

பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை

5

இன்னும் கேளாய் இளங்கொடி மாதே
அந்நாள் அவனை ஓம்பிய நல் ஆத்
தண்என் சாவகத் தவள மால்வரை
மண்முகன் என்னும் மாமுனி இடவயின்
பொன்னின் கோட்டது பொன்குளம்பு உடையது
தன்நலம் பிறர்தொழத் தான்சென்று எய்தி
ஈனா முன்னம் இன்உயிர்க்கு எல்லாம்
தான்முலை சுரந்து தன்பால் ஊட்டலும்

2

உரை

8

அந்நாள் அவனை ஓம்பிய நல்ஆ-சாலி யென்பாள் ஆபுத்திரனை ஈன்று போகட்டுச் சென்ற அந்நாளில் அவனைப் பாதுகாத்த நல்ல பசுவானது, தண்ணென் சாவகத் தவள மால்வரை - குளிர்ச்சி மிக்க சாவக நாட்டிலுள்ள பெரிய தவளமலைக் கண்ணே, மண் முகன் என்னும் மாமுனி இடவயின் - பெருமை பொருந்திய மண் முகன் என்னும் முனிவனிடத்தில், பொன்னின் கோட்டது பொற்குளம்பு உடையது - பொன்னாலாய கொம்பினையுடையதும் பொன்னாலாகிய குளம்பினையுடையதும் ஆகி, தன் நலம் பிறர் தொழத் தான் சென்று எய்தி-தனது நலத்தினைக் கண்டு பிறர் எல்லாம் வணங்கும்படி சென்று அடைந்து, ஈனா முன்னம் இன் உயிர்க்கு எல்லாம் தான் முலை சுரந்து தன் பால் ஊட்டலும்-தான் ஈனுதற்கு முன்னமே மடி சுரந்து இனிய உயிர்கட்கெல்லாம் தனது பாலை உண்பித்தலும் ;

இடவயின் என்பதில் வயின் ஏழனுருபின் பொருட்டு. நலமாவது ஈண்டு அருள்.

16.3

பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை

10 மூன்று காலமும் தோன்றநன் குணர்ந்த
ஆன்ற முனிவன் அதன்வயிற் றகத்து
மழைவளஞ் சுரப்பவும் மன்னுயிர் ஓம்பவும்
உயிர்கா வலன்வந் தொருவன் தோன்றும்
குடர்த்தொடர் மாலை பூண்பா னல்லன்
அடர்ப்பொன் முட்டை அகவையி னானெனப்

9

உரை

14

மூன்று காலமும் தோன்ற நன்கு உணர்ந்த ஆன்ற முனிவன்-முக்காலங்களையும் தெளிவுற நன்கறிந்த தவத்தான் அமைந்த மண்முக முனிவன், அதன் வயிற்று அகத்து-அப் பசுவினது வயிற்றின்கண், மழைவளம் சுரப்பவும் மன்னுயிர் ஓம்பவும்உயிர்காவலன் வந்து ஒருவன் தோன்றும் - மழைவளம் பெருகவும் நிலைபெற்ற உயிர்களைப் பாதுகாக்கவும் உயிர்களைக் காப்பவனாகிய ஒருவன் வந்து உதிப்பன், குடர்த்தொடர்மாலை பூண்பான் அல்லன் - அங்ஙனந் தோன்றுவோன் ஊனானாய குடர் மாலையைப் பூண்பானல்லன், அடர்ப்பொன் முட்டை அகவையினான் என - பொற்றகட்டினாகிய முட்டையின் உள்ளிடத்தானாவன் எனவுரைக்க ;

மூன்று காலம்-இறப்பு நிகழ்வு எதிர்வு; அவற்றில் நிகழ்வனவற்றை உணர்த்திற்று; ¹',மறுவில் செய்தி மூவகைக் காலமும், நெறியினாற்றிய வறிவன்" என ஆசிரியர் தொல்காப்பியனார் கூறுதலுங் காண்க. தோன்ற - விளங்க ; புலப்பட. உயிர் காவலன் ஒருவன் வந்து என மாறுக. குடர்த்தொடர்-குடரின் தொடர்ச்சி. அடர்-தகடு. அகவை - அடங்கியது ; உள்ளிடம். "குடர்த்தொடர் மாலை சூழா தாங்கோர், அடர்ப்பொன் முட்டையு ளடங்கிய வண்ணமும்" (25 : 72-3) என்பர் பின்னும்.

¹ தொல். புறத். 20.

16.4

பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை

15

20

25 பிணிநோய் இன்றியும் பிறந்தறஞ் செய்ய
மணிபல் லவத்திடை மன்னுயிர் நீத்தோன்
தற்காத் தளித்த தகைஆ அதனை
ஒற்கா வுள்ளத் தொழியான் ஆதலின்
ஆங்கவ் வாவயிற் றமரர்கணம் உவப்பத
தீங்கனி நாவல் ஓங்குமித் தீவினுக்
கொருதா னாகி உலகுதொழத் தோன்றினன்
பெரியோன் பிறந்த பெற்றியைக் கேள்நீ
இருதிள வேனிலில் எரிகதிர் இடபத்
தொருபதின் மேலும் ஒருமூன்று சென்றபின்
மீனத் திடைநிலை மீனத் தகவையின்
போதித் தலைவனொடு பொருந்திய போழ்தத்து

15

உரை

26

பெரியோன் பிறந்த பெற்றியைக் கேள் நீ-அப்பெரியோன் பிறந்த வியல்பினை நீ கேட்பாயாக, பிணிநோய் இன்றியும் பிறந்து அறம் செய்ய-பிணியானுண்டாகும் வருத்தம் இல்லாதிருக்கவும் மீண்டும் உலகின்கண்பிறந்து அறஞ்செய்தற்பொருட்டு, மணிபல்லவத்திடை மன்னுயிர் நீத்தோன் - மணிபல்லவ மென்னுந் தீவின்கண் தன் ஆருயிர் துறந்தவனாகிய ஆபுத்திரன், தற்காத்து அளித்த தகை ஆ அதனை-தன்னைப் பேணிப் பாதுகாத்த அழகிய பசுவினை, ஒற்கா உள்ளத்து ஒழியான் ஆதலின்-தளராத உள்ளத்தின்கண் நீங்காதவனாதலினால், ஆங்கு அவ் ஆ வயிற்று-அம் முனிவன் கூறியவாறே ஆண்டு அப் பசுவின் வயிற்றில், அமரர்கணம் உவப்ப-உம்பர் கூட்டம் உவகை எய்த, தீங்கனி நாவல் ஓங்கும் இத்தீவினுக்கு-இனிய பழங்களையுடைய நாவல் ஓங்கிய இம் மாபெருந் தீவிற்கு, ஒரு தான் ஆகி உலகு தொழத் தோன்றினன்-தான் ஒரு முதல்வனாய் உலகிலுள்ளோர் வணங்கும்படி பிறந்தனன், இருது இளிவேனிலில் - இளவேனிற் பருவத்தில், எரிகதிர் இடபத்து - ஞாயிறு இடப விராசியிலிருக்கும் வைகாசித் திங்களில், ஒரு பதின் மேலும் ஒரு மூன்று சென்றபின் மீனத்து - இருபத்தேழு நாண் மீன்களில் பதின்மூன்று சென்றபின், இடைநிலை மீனத்து அகவையில் - நடுவணதாகிய விசாக நாண்மீனின் அகத்தே, போதித்தலைவனொடு பொருந்திய போழ்தத்து-புத்ததேவனுடன் பொருந்திய பொழுதின் கண்ணே ;

தகை - தகுதியுமாம் ; ஒல்கா என்பது வலித்தல் பெற்றது. அம் முனிவன் கூறியவாறே என வருவித்து, பொருந்திய போழ்தத்துத் தோன்றினன் என முடிக்க. இருது - பருவம் ; பெரும் பொழுது. இளவேனில் - சித்திரையும் வைகாசியும். எரிகதிர் - ஞாயிறு. எரிகதிர் இடபம் என்பதனை இடபஞாயிறு என வைகாசிக்குப் பெயராக்குதலுமாம் ; என்னை? அவ்வாறு சிலையெழுத்துக்களில் வழங்குதலின் என்க. வைகாசித் திங்களில் பதின்மூன்று பாகை சென்றபின் எனக்கொண்டு, இடைநிலை மீனம் என்பதனால் விசாகம் கோடலுமாம் ; இப்பொருட்கு மீன்களுள்ளே இடைநிலைமீன் எனக்கொள்ளுதல் வேண்டும் ; பண்டு கார்த்திகை முதலாக எண்ணப்பட்டமையின் விசாகம் நடுமீனாயிற்று ; அகவை என்பதனால் விசாகத்தின் இரண்டு மூன்றாங் கால்கள் பெற்றாம். அத்து மூன்றும் சாரியைகள். புத்ததேவன் தோன்றியதும், ஞானம் பெற்றதும் விசாகத்துடன் கூடிய தூய நிறைமதி நாளாகலின் ஆபுத்திரன் பிறந்த அப் பொழுதினைப் போதித் தலைவனொடு பொருந்திய போழ் தென்றார்.

16.5

பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை

30

35
மண்ணக மெல்லாம் மாரி இன்றியும்
புண்ணிய நன்னீர் போதொடு சொரிந்தது
போதி மாதவன் பூமியில் தோன்றும்
கால மன்றியும் கண்டன சிறப்பெனச்
சக்கர வாளக் கோட்டம் வாழும்
மிக்க மாதவர் விரும்பினர் வியந்து
கந்துடை நெடுநிலைக் கடவுள் எழுதிய
அந்திற் பாவை அருளு மாயிடின்
அறிகுவம் என்றே செறியிருள் சேறலும்

27

உரை

35

மண்ணகம் எல்லாம் மாரி இன்றியும் புண்ணிய நல்நீர் போதொடு சொரிந்தது - புவிமுழுதும் மழை இல்லாம லிருந்தும் புண்ணியத் தூ நீர் மலருடன் பொழிந்தது, போதி மாதவன் பூமியில் தோன்றும் காலம் அன்றியும்-புத்த தேவன் உலகின்கண் தோன்றும் காலமல்லாதிருந்தும், கண்டன சிறப்பு என - இத்தகைய சிறப்புக்கள் நிகழ்ந்தன என்று, சக்கரவாளக் கோட்டம் வாழும்-சக்கரவாளக் கோட்டத்திலுறைகின்ற, மிக்க மாதவர் விரும்பினர் வியந்து-மிக்க பெருந்தவமுடைய முனிவர்கள் ஆர்வமுடையராய் வியந்து, கந்துடை நெடுநிலைக் கடவுள் எழுதிய அந்தில்பாவை அருளுமாயிடின் அறிகுவம் என்றே - உயரிய தூணின்கண் கடவுளால் எழுதப்பட்ட பாவை உரைத்தருளுமாயின் அறிவோம் என்று, செறிஇருள் சேறலும்-செறிந்த இருளின்கட் செல்லுதலும்;

மாரி - மழை, முகில், போதொடு கூடிய நீர் சொரிந்ததென்க. சொரிதல் - பொழிதல், சோர்தல்; சொரியப்பட்டது என்றுமாம். கண்டன- காணப்பட்டன; ¹"செயப்படு பொருளைச் செய்தது போலத்' தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே" என்பதனாற் போந்த வழுவமைதி : சிறப்பு - வியத்தகு நிகழ்ச்சி ; நன்னிமித்தம். புத்தன் தோன்றுங்காலத்துளவாம் சிறப்பு நிகழ்ச்சிகள் முன்னர் அறவணர்த்தொழுத காதையிற் கூறப்பட்டமை காண்க. நெடுநிலையுடைக்கந்து என மாறுக. அந்தில் : அசை; அவ்விடம் என்று கொண்டு, அந்திற்சேறலும் என்றியைத்தலுமாம்.

¹ தொல். வினை. 49.

16.6

பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை

மணிபல் லவத்திடை மன்னுயிர் நீத்தோன்
தணியா உயிருயச் சாவகத் துதித்தனன்
ஆங்குஅவன் தன்திறம் அறவணன் அறியும்என்று
ஈங்குஎன் நாவை வருத்தியது இதுகேள்:

36

உரை

39

மனிபல்லவத்திடை மன்னுயிர் நீத்தோன் - மணிபல்லவத்தின்கண் ஆருயிர் துறந்தோனாகிய ஆபுத்திரன், தணியா உயிர் உயச் சாவகத்து உதித்தனன் - குறையாத உயிர்கள் உய்யும்படி சாவக நாட்டில் தோன்றினன், ஆங்கவன் தன்திறம் அறவணன் அறியும் என்று - அவனது வரலாற்றினை அறவண முனிவன் அறிவான் என்று கூறி, ஈங்கு என் நாவை வருத்தியது இதுகேள்-எனது நாவை வருத்தியது இதனைக் கேட்பாயாக ;

தணியா - குறையாத, நிறைந்த ; துன்பம் தணியாத உயிரென்றும் துன்பந் தணிந்து உயிருய்ய வென்றும் உரைத்தலுமாம். பாவை என்று கூறி நாவை வருத்தியதென்க. பாவையின் கூற்றை யுட்கொண்ட மாதவர்கள் தம்பால்வந்து வினாவத் தாம் அவர்கட்கு உரைத்தமை தோன்ற என்நாவை வருத்திய தென்றார்; இதனால் அறவணவடிகள் தாபதப் பக்கத்து வாய்வாளாமையிற் கருத்துடையரென்பதும் தோன்றும். ஆங்கு, ஈங்கு என்பன அசைகள்.

16.7

பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை

40

45 மண்ணாள் வேந்தன் மண்முகன் என்னும்
புண்ணிய முதல்வன் திருந்தடி வணங்கி
மக்களை யில்லேன் மாதவன் அருளால்
பெற்றேன் புதல்வனை என்றவன் வளர்ப்ப
அரைசாள் செல்வம் அவன்பால் உண்மையின்
நிரைதார் வேந்தன் ஆயினன் அவன்தான்

40

உரை

45

மண்ணாள் வேந்தன் மண்முகன் என்னும் புண்ணிய முதல்வன் திருந்தடி வணங்கி-அந் நாட்டினையாளும் மன்னனாகிய பூமிசந்திரன் மண்முகன் எனப் பெயரிய தவமுதல்வனது செவ்விய திருவடியை வணக்கஞ் செய்து, மக்களை இல்லேன் - மக்கட்பேறு இல்லாதவனாகிய யான், மாதவன் அருளால் பெற்றேன் புதல்வனை என்று - நுமதருளினாலே அரிய புதல்வனை யடைந்தேன் என்று கூறி, அவன் வளர்ப்ப - அவன் வளர்த்துவர, அரைசு ஆள் செல்வம் அவன்பால் உண்மையின் - அரசாளுதலாகிய செல்வம் அவனிடம் உள்ளமையால், நிரைதார் வேந்தன் ஆயினன் அவன்தான். அந்த ஆபுத்திரன் மலர்கள் இணைந்த மாலையையுடைய மன்னவனாயினன் ;

மாதவன் : முன்னிலையிற் படர்க்கை. அரைசு : இடைப்போலி. அவன் என்றது பூமிசந்திரனை ; அவன் மகனாகிய ஆபுத்திரன் என்று கொண்டு, அரசாளும் பொறியுண்மையால் என்றுரைத்தலுமாம்; ஆபுத்திரனுக்குப் புண்ணியராசன் என்னும் பெயருண்டென்பது பின்னர் அறியப்படும். நிரைதார்: வினைத்தொகை. இதுகாறும் ஆபுத்திரன் வரலாறு உரைக்கப்பட்டது.

16.8

பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை

50 துறக்க வேந்தன் துய்ப்பிலன் கொல்லோ
அறக்கோல் வேந்தன் அருளிலன் கொல்லோ
சுரந்து காவிரி புரந்துநீர் பரக்கவும்
நலத்தகை இன்றி நல்லுயிர்க் கெல்லாம்
அலத்தற் காலை யாகிய தாயிழை

46

உரை

50

துறக்க வேந்தன் துய்ப்பு இலன் கொல்லோ-வானுலகின் மன்னனாய இந்திரன் அவிநுகர்ச்சி இலனாயினனோ, அறக்கோல் வேந்தன் அருள் இலன் கொல்லோ - அறநெறியிற் செல்லுங்கோலினையுடைய அரசன் அருள் இல்லாதவனாயினனோ, சுரந்து காவிரி புரந்து நீர் பரக்கவும் - காவிரியில் நீர் பெருகி உயிர்களைக் காத்துப் பரந்து செல்லவும், நலத்தகை இன்றி நல் உயிர்க்கெல்லாம் அலத்தற்காலை ஆகியது ஆயிழை - ஆயிழையே நன்மையுடைய உயிர்கட்கெல்லாம் இன்பம் இல்லையாக வறுமைக்காலம் உண்டாயிற்று, ஆகலின் ;

துய்ப்பு - அவியூண். துய்ப்பிலன் கொல்லோ என்றதனால் அதனை ஊட்டுவார் இலராயினரோ என்றவாறாயிற்று. மாதவர் வேள்வியும் அரசன் செங்கோலும் மழைக்குக் காரணமாகலின் துய்ப்பிலன்கொல்லோ அருளிலன் கொல்லோ என்றார்; "செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ,...அலத்தற் காலை யாகியது" (28 : 188 - 91) என மேல் வருவதுங் காண்க. அறக்கோல் வேந்தன் - சோழன். "சுரந்து பரக்கவும்" என்றது காவிரியின் சிறப்புக் கூறியபடி. நல்லுயிர் - மக்களுயிர்.

16.9

பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை

வெண்திரை தந்த வமுதை வானோர்
உண்டொழி மிச்சிலை யொழித் துவைத் தாங்கு
வறனோ டுலகின் வான்துயர் கெடுக்கும்
அறனோ டொழித்தல் ஆயிழை தகாதென

51

உரை

54

வெண்டிரை தந்த அமுதை வானோர் உண்டொழி மிச்சிலை ஒழித்து வைத்தாங்கு-வெள்ளிய அலைகளையுடைய பாற்கடலளித்த அமுதினை உம்பர்கள் தாம் உண்டு கழித்த மிகுதியைப் பயன்படுத்தாது வைத்தாற்போல, வறன் ஓடு உலகின் வான்துயர் கெடுக்கும் - வற்கடம் பரந்த உலகினது பெரிய துன்பத்தைப் போக்கவல்ல, அறன் ஓடு ஒழித்தல் ஆயிழை தகாது என - அறத்தின் பெருக்கினையுடைய திருவோட்டைப் பயன்படுத்தாது வைத்தல் நங்காய் தகுதி யுடைத்தன்றென்று, மாதவன் உரைத்தலும் - அறவண முனிவர் கூறலும் ;

அமுதில் மிச்சிலாகியதனை என்க. ஒழித்து வைத்தல் - வறிதிருக்கும்படி வைத்தல். வறன் - வறுமை, வறட்காலம். ஓடுதல் - பரத்தல்; ¹"வறனோடின் வையகத்து வான்றருங் கற்பினாள்" என்றார் பிறரும். அறன் ஓடு - அறம் பயக்கும் ஓடு; திருவோடு. "வறனோ டுலகின் மழை வளந் தரூஉம், அறனோ டேந்தி யாருயி ரோம்புவை" (21: 157 - 8) எனப் பின்னரும் இங்ஙனம் வருதல் காண்க.

¹ கலி 16.

16.10

பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை

55

மாதவ னுரைத்தலும் மணிமே கலைதான்
தாயர் தம்மொடு தாழ்ந்துபல ஏத்திக்
கைக்கொண் டெடுத்த கடவுட் கடிஞையொடு
பிக்குணிக் கோலத்துப் பெருந்தெரு அடைதலும்

54

உரை

58

மணிமேகலைதான் தாயர் தம்மொடு தாழ்ந்து பல ஏத்தி - மணிமேகலை தன் தாயராகிய மாதவி சுதமதி என்னும் இருவருடனும் அறவணவடிகளை வணங்கிப் பலவாறாகத் துதித்து, கைக்கொண்டெடுத்த கடவுள் கடிஞையொடு - தன் கையிலெடுத்துக் கொண்டுள்ள கடவுட்டன்மை பொருந்திய பிச்சைப் பாத்திரத்துடன் ; பிக்குணிக் கோலத்துப் பெருந்தெரு அடைதலும் - பிக்குணிக் கோலமும் பூண்டு அகன்ற வீதியை அடைதலும்;

பௌத்த சமயத் துறவிகளில் ஆடவர் பிக்ஷூக்கள் என்றும், மகளிர் பிக்ஷூணிகள் என்றும கூறப்படுவர். பிக்குணி: வடமொழிச் சிதைவு.

16.11

பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை

60

65
ஒலித்தொருங் கீண்டிய ஊர்க்குறு மாக்களும்
மெலித்துகு நெஞ்சின் விடருந் தூர்த்தரும்
கொடிக்கோ சம்பிக் கோமகன் ஆகிய
வடித்தேர்த் தானை வத்தவன் தன்னை
வஞ்சஞ் செய்துழி வான்தளை விடீஇய
உஞ்சையில் தோன்றிய யூகி அந்தணன்
உருவுக் கொவ்வா உறுநோய் கண்டு

59

உரை

65

ஒலித்து ஒருங்கு ஈண்டிய - ஆரவாரித்து ஒருங்கு கூடிய, ஊர்க்குறு மாக்களும்-அறிவில்லாத ஊர்ச்சிறாரும், மெலித்து உகு நெஞ்சின் விடரும் தூர்த்தரும் - காமத்தால் நைந்து கெடும் மனத்தினையுடைய தீயோரும் பரத்தரும், கொடிக்கோசம்பிக்கோமகன் ஆகிய வடித்தேர்த் தானை வத்தவன் தன்னை-கொடிகளால் அலங்கரிக்கப் பெற்ற கோசம்பி நகரத்தின் அரசனாகிய திருந்திய தேர்ச் சேனைகளையுடைய உதயணனை, வஞ்சம் செய்துழி வான்தளை விடீஇய - உஞ்சை மன்னவன் பிரச்சோதனன் வஞ்சித்துச் சிறைப்படுத்தியவழி அவனை விடுவிக்கும் பொருட்டு, உஞ்சையில் தோன்றிய யூகி அந்தணன் - உச்சயினி நகரில் வேற்று வேடங்கொண்டு தோன்றிய யூகி யென்னும் அந்தணனது, உருவுக்கு ஒவ்வா உறுநோய் கண்டு பரிவுறு மாக்களில் தாம் பரிவு எய்தி - வடிவிற்கேலாத மிகுந்த நோயைக் கண்டு துன்புற்ற மக்களைப் போலத் தாமும் இரக்கமுற்று ;

ஊரிலே திரியு மியல்பின ரென்பார் 'ஊர்க்குறு மாக்கள்' என்றார். மெலித்து: மெலிந்து என்பதன் விகாரம். விடர் தூர்த்தர் என்பவற்றிற்கு முன்னர் (14: 61) உரைத்தமை காண்க. கோசம்பி - வத்த நாட்டின் தலைநகர். கோமகன் - கோமான் ; அரசன் ; அரசன் குமாரன் என்றுமாம். வத்தவன் - வத்த நாடுடைமையின் வந்த பெயர்; வத்தம்: வத்ஸம் என்பதன் திரிபு. வத்த நாட்டின் கோசம்பி நகரத் தரசனாகிய உதயணனை உச்சயினி நகரத்தரசனாகிய பிரச்சோதனன் சாலங்காயன் என்னும் தன் அமைச்சனால் எந்திர யானையைக் காட்டிப் பிடித்துவரச் செய்து சிறைப்படுத்தினன் என்க. விடீஇய - விடுவிக்க; பிறவினை. உஞ்சை - உச்சியினி ; அவந்தி நாட்டின் தலைநகர்; அவந்தி என்றும் கூறப்படும். யூகி-உதயணனுடைய அமைச்சருளொருவன். மிக்க சூழ்ச்சித்திறம் வாய்ந்தவன். அவன் பெரு நோயுற்றவன் போலவும் மருள்கொண்டவன் போலவும் உஞ்சை நகரின் வீதியில் திரிந்த பொழுது நகரத்தின் மாக்கள் பலரும் அவனைச் சூழ்ந்து பரிவுற்றனரென்பது உதயணன் கதையால் அறியப்படும்.

16.12

பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை

70 பரிவுறு மாக்களில் தாம்பரி வெய்தி
உதய குமரன் உளங்கொண் டொளித்த
மதுமலர்க் குழலாள் வந்து தோன்றிப்
பிச்சைப் பாத்திரங் கையினேந் தியது
திப்பியம் என்றே சிந்தைநோய் கூர

66

உரை

70

உதயகுமரன் உளங்கொண்டு ஒளித்த மதுமலர்க் குழலான் வந்து தோன்றி - உதயகுமரனது உள்ளத்தைக் கவர்ந்து மறைந்திருந்த தேன் பொருந்திய மலர்களை யணிந்த கூந்தலையுடைய மணிமேகலை இங்ஙனம் வெளிப்படத் தோன்றி, பிச்சைப் பாத்திரம் கையின் ஏந்தியது திப்பியம் என்றே சிந்தை நோய் கூர - பிச்சைப் பாத்திரமும் கையில் ஏந்தியது வியப்புடைத்தாம் என்று
மிகுந்த மனவருத்த மடைய;

திப்பியம் - ஈண்டு வியப்பென்னும் பொருட்டு. ஊர்க்குறு மாக்களும் விடரும் தூர்த்தரும், மாக்களிற் பரிவெய்தி, குழலாள் தோன்றி ஏந்தியது திருப்பியமென்று நோய்கூர வென்க.

16.13

பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை

பமணமனை மறுகின் மாதவி யீன்ற
அணிமலர்ப் பூங்கொம் பகமலி யுவகையில்
பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடூஉம்
பிச்சை யேற்றல் பெருந்தக வுடைத்தெனக்

71

உரை

74

மணமனை மறுகில்-மங்கல மனைகளையுடைய வீதியில், மாதவி ஈன்ற அணிமலர்ப் பூங்கொம்பு - மாதவிபெற்ற அழகிய மலர்களையுடைய பூங்கொம்பு போலும் மணிமேகலை, அகம் மலி உவகையின் - உள்ளத்தில் நிறைந்த மகிழ்ச்சியுடன், பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடூஉம் பிச்சை ஏற்றல் பெருந்தக வுடைத்து என - கற்புடை மகளிர் இனிதின் இடும் பிச்சையை முதலில் ஏற்றல் மிகவும் தகுதியுடைத் தென்றுரைக்க ;

மாதவி...பூங்கொம்பு' குருக்கத்தி யீன்ற பூங்கொம்பு என்பதோர் கயந் தோன்ற நின்றது.

16.14

பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை

75

80 குளனணி தாமரைக் கொழுமலர் நாப்பண்
ஒருதனி யோங்கிய திருமலர் போன்று
வான்தரு கற்பின் மனையுறை மகளிரில்
தான்தனி யோங்கிய தகைமையள் அன்றோ
ஆதிரை நல்லாள் அவள்மனை இம்மனை
நீபுகல் வேண்டும் நேரிழை என்றனள

75

உரை

80

குளன் அணி தாமரைக் கொழுமலர் நாப்பண் ஒரு தனி ஓங்கிய திருமலர் போன்று-குளத்திற்கு அழகு செய்யும் தாமரைச் செழுமலர்களின் நடுவண் ஒன்றாய் ஒப்பற்றுயர்ந்த அழகிய தாமரை மலரைப்போல, வான் தரு கற்பின் மனைஉறை மகளிரில் - மழை வேண்டிற் பெய்விக்குஞ் சிறந்த கற்பினையுடைய இல்லில்வாழ் பெண்டிருள், தான்தனி ஓங்கிய தகைமையள் அன்றோ ஆதிரை நல்லாள் - ஆதிரை யென்னும் மெல்லியல் தான் இணையிலாச்சிறப்புடைய தகுதியுடையள் அல்லளோ? அவள்மனை இம்மனை - அவளது திருமனை இதுவாகும், நீ புகல்வேண்டும் நேரிழை என்றனள்- நங்கையே இதன்கண் நீமுதலிற் செல்லவேண்டும் என்று கூறினள்;

"பாசடைப் பரப்பிற் பன்மல ரிடைநின், றொருதனி யோங்கிய விரைமலர்த் தாமரை" (4: 8-9) என்றார் முன்னும். திருமலர் போன்று ஆதிரை நல்லாள் ஓங்கிய தகைமையள் என்க. கற்புடை மகளிர் வேண்டும் பொழுது மழை பெய்விக்கும் ஆற்றலுடையரென்பது,

"¹தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை"

என்னும் பொய்யா மொழியானும்,

"²வறனோடின் வையகத்து வான்றருங் கற்பினாள்"

என்னும் பாலைக் கலியானும் அறியப்படும். இக் கருத்து
இந் நூலகத்துப் பின்னரும் (16: 49-50; 22: 68-9) வருதல் காண்க.

¹ குறள் - 55. ² கலி. 16.

16.15

பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை

85 வடதிசை விஞ்சை மாநகர்த் தோன்றித்
தென்றிசைப் பொதியிலோர் சிற்றியாற் றடைகரை
மாதவன் தன்னால் வல்வினை யுருப்பச்
சாபம் பட்டுத் தனித்துயர் உறூஉம்
வீவில் வெம்பசி வேட்கையொடு திரிதரும்
காயசண் டிகையெனும் காரிகை தானென்.

81

உரை

86

வடதிசை விஞ்ஞை மாநகர்த் தோன்றி - வடதிசையிலுள்ள பெரிய வித்தியாதர நகரமாகிய காஞ்சன புரத்தில் உதித்து, தென்றிசைப் பொதியில் ஓர் சிற்றியாற்று அடைகரை - தென்றிசையிலுள்ள பொதியின் மலையில் ஒரு சிற்றாற்று அடைகரையில், மாதவன் தன்னால் வல்வினை உருப்பச் சாபம் பட்டு - தீவினை உருத்து வந்தூட்ட முனிவர் ஒருவரால் சாபமடைந்து, தனித்துயர் உறூஉம்-ஒப்பற்ற துயரினைச் செய்யும், வீவில் வெம்பசி வேட்கையொடு திரிதரும் - அழியாத கொடிய பசியாகிய வேட்கையுடன் சுழலும், காய சண்டிகை எனும் காரிகை தான்என்-காயசண்டிகை என்னும் விஞ்சை மகள்
என்க.

உருப்ப - அழல என்றுமாம். உறூஉம் - உறுவிக்கும்; பிறவினை ; தன் வினையாகக் கொண்டு உறூஉம், திரிதரும் என்பவற்றைக் காரிகை என்பதனுடன் தனித்தனி முடித்தலுமாம். வேட்கை-உணா வேட்கை. காயசண்டிகை யெனுங் காரிகை நீ புகல் வேண்டும் என்றனள் என்க.

"மாதே, கேளாய்; நல்லா எய்தி ஊட்டலும், முனிவன, 'ஒருவன் தோன்றும்; அவன் பொன்முட்டை அகவையினான்' என, நீத்தோன் ஒழியானாதலின், ஒருதானாகிப் போழ்தத்துத் தோன்றினன்; நன்னீர் போதொடு சொரிந்தது; மாதவர் வியந்து அறிகுவமென்று சேறலும், பாவை, 'அறவணன் அறியும்' என்று என் நாவை வருத்திற்று; இது கேள்; வேந்தன் வணங்கிப் பெற்றேனென்று வளர்ப்ப, உண்மையில் அவன் வேந்தனாயினன்; அலத்தற்காலை ஆகியது; ஒழித்தல் தகாது" என மாதவன் உரைத்தலும், மணிமேகலை தாயரொடு ஏத்திக் கடிஞையொடு கோலத்தோடு பெருந்தெரு வடைதலும், மாக்களும் விடரும் தூர்த்தரும் பரிவெய்தி நோய்கூர, பூங்கொம்பு, பெருந்தக வுடைத்து' என, அது கேட்டுக் காரிகை 'நீ புகல் வேண்டும்' என்றனள் என வினை முடிவு செய்க.

Linked texts (1)