Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 16.9

Maṇimēkalai urai 16.9

Language
Tamil

16.9

பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை

வெண்திரை தந்த வமுதை வானோர்
உண்டொழி மிச்சிலை யொழித் துவைத் தாங்கு
வறனோ டுலகின் வான்துயர் கெடுக்கும்
அறனோ டொழித்தல் ஆயிழை தகாதென

51

உரை

54

வெண்டிரை தந்த அமுதை வானோர் உண்டொழி மிச்சிலை ஒழித்து வைத்தாங்கு-வெள்ளிய அலைகளையுடைய பாற்கடலளித்த அமுதினை உம்பர்கள் தாம் உண்டு கழித்த மிகுதியைப் பயன்படுத்தாது வைத்தாற்போல, வறன் ஓடு உலகின் வான்துயர் கெடுக்கும் - வற்கடம் பரந்த உலகினது பெரிய துன்பத்தைப் போக்கவல்ல, அறன் ஓடு ஒழித்தல் ஆயிழை தகாது என - அறத்தின் பெருக்கினையுடைய திருவோட்டைப் பயன்படுத்தாது வைத்தல் நங்காய் தகுதி யுடைத்தன்றென்று, மாதவன் உரைத்தலும் - அறவண முனிவர் கூறலும் ;

அமுதில் மிச்சிலாகியதனை என்க. ஒழித்து வைத்தல் - வறிதிருக்கும்படி வைத்தல். வறன் - வறுமை, வறட்காலம். ஓடுதல் - பரத்தல்; ¹"வறனோடின் வையகத்து வான்றருங் கற்பினாள்" என்றார் பிறரும். அறன் ஓடு - அறம் பயக்கும் ஓடு; திருவோடு. "வறனோ டுலகின் மழை வளந் தரூஉம், அறனோ டேந்தி யாருயி ரோம்புவை" (21: 157 - 8) எனப் பின்னரும் இங்ஙனம் வருதல் காண்க.

¹ கலி 16.

Linked texts (1)