Maṇimēkalai's Renunciation 17.7
Maṇimēkalai urai 17.7
- Language
- Tamil
17.7
ஆதிரை பிச்சையிட்ட காதை
35
40 தீயும் கொல்லாத் தீவினை யாட்டியேன்
யாது செய்கேன் என்றவள் ஏங்கலும்
ஆதிரை கேளுன் அரும்பெறற் கணவனை
ஊர்திரை கொண்டாங் குய்ப்பப் போகி
நக்க சாரணர் நாகர் வாழ்மலைப்
பக்கஞ் சேர்ந்தனன் பல்லியாண் டிராஅன்
சந்திர தத்தன் எனுமோர் வாணிகன்
வங்கந் தன்னொடும் வந்தனன் தோன்றும்
நின்பெருந் துன்பம் ஒழிவாய் நீயென
அந்தரந் தோன்றி அசரீரி அறைதலும்
35
உரை
44
தீயுங் கொல்லாத் தீவினை யாட்டின்யேன் யாது செய்கேன் என்று அவள் ஏங்கலும்-தீயினாலுங் கொல்லப்படாத தீவினையேன் இனி யாது செய்வேன் என்று அம் மெல்லியல் ஏங்குதலும், ஆதிரை கேள்-ஆதிரையே கேட்பாயாக, உன் அரும்பெறல் கணவனை - உனது பெறற்கருங் கொழுநனை, ஊர் திரை கொண்டாங்கு உய்ப்பப் போகி - தவழ்கின்ற அலைகள் அவ்வடத்திற் செலுத்த அவன் சென்று, நக்க சாரணர் நாகர் வாழ் மலைப் பக்கம் சேர்ந்தனன் - நக்க சாரணராகிய நாகர்கள் வாழ்கின்ற மலைப் பக்கத்தை யடைந்தனன், பல்லியாண்டு இரான் - அவன் அங்கே பலவாண்டுகள் தங்கான், சந்திரதத்தன் எனும் ஓர் வாணிகன் - சந்திரதத்தன் என்னும் ஒரு வணிகனது, வங்கம் தன்னொடும் வந்தனன் தோன்றும்-மரக்கலத்துடன் வந்து தோன்றுவன், நின் பெரும் துன்பம் ஒழிவாய் நீஎன-ஆகலின் நீ நினது பெரிய துயரினின்றும்நீங்குவாய் என்று, அந்தரம் தோன்றி அசரீரி அறைதலும்-அசரீரி வானிலே தோன்றி மொழிதலும் ;
அசரீரி - சரீரம் இல்லாதது ; அருவமாய் எங்கும் நிறைந்துள்ள கடவுள். இதனை அசரீரி வாக்கு எனவும் ஆகாயவாணி எனவும் கூறுவர்.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil