Maṇimēkalai's Renunciation 2.1
Maṇimēkalai urai 2.1
- Language
- Tamil
2.1
விழாவறை காதை
உலகந் திரியா ஓங்குயர் விழுச்சீர்ப்
பலர்புகழ் மூதூர்ப் பண்புமேம் படீஇய
ஓங்குயர் மலயத் தருந்தவ னுரைப்பத்
தூங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியன்
5 விண்ணவர் தலைவனை வணங்கிமுன் னின்று
மண்ணகத் தென்றன் வான்பதி தன்னுள்
மேலோர் விழைய விழாக்கோ ளெடுத்த
நாலேழ் நாளினும் நன்கினி துறைகென
அமரர் தலைவன் ஆங்கது நேர்ந்தது
10
கவராக் கேள்வியோர் கடவா ராகலின்
1
உரை
10
உலகம் திரியா ஓங்குயர் விழுச்சீர் - நன்மக்களது ஒழுக்கம் வேறுபடாத மிக உயர்ந்த சீரிய புகழையுடைய, பலர்புகழ்மூதூர்ப் பண்பு மேம்படீஇய - பல நாட்டினராலும் புகழ்ந்துரைக்கப்படும் பழமை சான்ற புகார்நகரத்தின் தன்மை மேம்படும் பொருட்டு, ஓங்குயர் மலயத்து அருந்தவன் உரைப்ப - மிக மேம்பட்ட பொதியின் மலையில் உள்ள அரிய தவத்தையுடைய அகத்திய முனிவர் உரைத்தருள, தூங்கு எயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் - வானத்தில் அசைகின்ற மதில்களை அழித்த வீரவளையணிந்த தோள்களை யுடைமையின் தூங்செயி லெறிந்த தொடித்தோட் செம்பியன் எனப் பெயர்பெற்ற சோழ மன்னவன், விண்ணவர் தலைவனை வணங்கி முன்நின்று - வானவர்க் கரசனாகிய இந்திரனை வணங்கி நின்று, மண்ணகத்து என்றன் வான்பதி தன்னுள் - நிலவுலகின் கண் என்னுடைய சிறந்த நகரத்தில், மேலோர் விழைய விழாக்கோள் எடுத்த - மேலோரும் விழையுமாறு விழாவெடுத்தலை மேற்கொண்ட, நாலேழ் நாளினும் நன்கு இனிது உறைக என - இருபத்தெட்டு நாளினும் ஆண்டு வந்து இனிதே தங்க வேண்டும் என வேண்ட, அமரர் தலைவன் ஆங்கது நேர்ந்தது - வானவர் தலைவன் அதற்கு உடன்பட்டதனை, கவராக் கேள்வியோர் கடவார் ஆகலின் - தெளிந்த நூற்கேள்வியினை யுடையார் பிழையார் ஆதலினால் ;
ஓங்குயர் இரண்டும் ஒரு பொருட் பன்மொழிகள். மேம்
படீஇய - மேம்படுத்துவதற்கு என்றுமாம். தூங்கெயில் - அசைகின்ற மதில் ; தேவர்க்குப் பகைவராகிய அவுணருடைய மதில். செம்பியன் - சோழருள் ஒருவன். இவன் எயிலழித்த செய்தி, ¹"ஒன்னா ருட்குந் துன்னருங் கடுந்திறற், றூங்கெயி லெயிந்தநின், னூங்கணோர்." ²"தூங்கெயின் மூன்றெறிந்த சோழன்கா ணம்மானை" என்பன முதலியவற்றானும் அறியப்படும். வான்பதி - சிறந்தபதி. மேலோர் - தேவர் முதலாயினோர். நேர்ந்தது : வினைப்பெயர். கவரா - ஐயுறாத, தெளிந்த. அருந்தவன் உரைப்ப, செம்பியன் வணங்கி நின்று உறைகவென, அமரர் தலைவன் நேர்ந்தது என்க.
¹ புறம். 39. ² சிலப். 29. அம்மானைவரி.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil