Maṇimēkalai's Renunciation 2
Maṇimēkalai urai 2
- Language
- Tamil
2.1
விழாவறை காதை
உலகந் திரியா ஓங்குயர் விழுச்சீர்ப்
பலர்புகழ் மூதூர்ப் பண்புமேம் படீஇய
ஓங்குயர் மலயத் தருந்தவ னுரைப்பத்
தூங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியன்
5 விண்ணவர் தலைவனை வணங்கிமுன் னின்று
மண்ணகத் தென்றன் வான்பதி தன்னுள்
மேலோர் விழைய விழாக்கோ ளெடுத்த
நாலேழ் நாளினும் நன்கினி துறைகென
அமரர் தலைவன் ஆங்கது நேர்ந்தது
10
கவராக் கேள்வியோர் கடவா ராகலின்
1
உரை
10
உலகம் திரியா ஓங்குயர் விழுச்சீர் - நன்மக்களது ஒழுக்கம் வேறுபடாத மிக உயர்ந்த சீரிய புகழையுடைய, பலர்புகழ்மூதூர்ப் பண்பு மேம்படீஇய - பல நாட்டினராலும் புகழ்ந்துரைக்கப்படும் பழமை சான்ற புகார்நகரத்தின் தன்மை மேம்படும் பொருட்டு, ஓங்குயர் மலயத்து அருந்தவன் உரைப்ப - மிக மேம்பட்ட பொதியின் மலையில் உள்ள அரிய தவத்தையுடைய அகத்திய முனிவர் உரைத்தருள, தூங்கு எயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் - வானத்தில் அசைகின்ற மதில்களை அழித்த வீரவளையணிந்த தோள்களை யுடைமையின் தூங்செயி லெறிந்த தொடித்தோட் செம்பியன் எனப் பெயர்பெற்ற சோழ மன்னவன், விண்ணவர் தலைவனை வணங்கி முன்நின்று - வானவர்க் கரசனாகிய இந்திரனை வணங்கி நின்று, மண்ணகத்து என்றன் வான்பதி தன்னுள் - நிலவுலகின் கண் என்னுடைய சிறந்த நகரத்தில், மேலோர் விழைய விழாக்கோள் எடுத்த - மேலோரும் விழையுமாறு விழாவெடுத்தலை மேற்கொண்ட, நாலேழ் நாளினும் நன்கு இனிது உறைக என - இருபத்தெட்டு நாளினும் ஆண்டு வந்து இனிதே தங்க வேண்டும் என வேண்ட, அமரர் தலைவன் ஆங்கது நேர்ந்தது - வானவர் தலைவன் அதற்கு உடன்பட்டதனை, கவராக் கேள்வியோர் கடவார் ஆகலின் - தெளிந்த நூற்கேள்வியினை யுடையார் பிழையார் ஆதலினால் ;
ஓங்குயர் இரண்டும் ஒரு பொருட் பன்மொழிகள். மேம்
படீஇய - மேம்படுத்துவதற்கு என்றுமாம். தூங்கெயில் - அசைகின்ற மதில் ; தேவர்க்குப் பகைவராகிய அவுணருடைய மதில். செம்பியன் - சோழருள் ஒருவன். இவன் எயிலழித்த செய்தி, ¹"ஒன்னா ருட்குந் துன்னருங் கடுந்திறற், றூங்கெயி லெயிந்தநின், னூங்கணோர்." ²"தூங்கெயின் மூன்றெறிந்த சோழன்கா ணம்மானை" என்பன முதலியவற்றானும் அறியப்படும். வான்பதி - சிறந்தபதி. மேலோர் - தேவர் முதலாயினோர். நேர்ந்தது : வினைப்பெயர். கவரா - ஐயுறாத, தெளிந்த. அருந்தவன் உரைப்ப, செம்பியன் வணங்கி நின்று உறைகவென, அமரர் தலைவன் நேர்ந்தது என்க.
¹ புறம். 39. ² சிலப். 29. அம்மானைவரி.
2.2
விழாவறை காதை
மெய்திறம் வழக்கு நன்பொருள் வீடெனும்
இத்திறந் தத்தம் இயல்பினிற் காட்டும்
சமயக் கணக்கருந் தந்துறை போகிய
அமயக் கணக்கரும் அகலா ராகிக்
15 காநதுரு வெய்திய கடவு ளாளரும்
பரந்தொருங் கீண்டிய பாடை மாக்களும்
ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும்
11
உரை
17
மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும் இத் திறம் - மெய்ப் பொருளுணர்த்துகின்ற நூல்வகை, உலகியல், நல்ல தத்துவப் பொருள், முத்தி என்னும் இவ்வகைகளை, தத்தம் இயல்பினிற் காட்டும் சமயக் கணக்கரும் - அவரவர் இயற்கைக்கேற்ப உணர்த்துகின்ற சமய வாதியரும், தம் துறைபோகிய அமயக் கணக்கரும் - தம்முடைய நெறியிற் கைதேர்ந்த காலங்களை எண்ணிக் கூறும் சோதிடரும், அகலாராகி - இந் நகரைவிட்டு நீங்காதவராய், கரந்து உரு எய்திய கடவுளாளரும்-தமது பேரொளியினை மறைத்து மக்கள் கண்களாற் காணுமளவான வடிவினையாக்கிக் கொண்ட தேவரும், பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும் - பலவிடத்து நின்றும் போந்து ஒருங்குகூடிய மொழி வேறுபட்ட மக்களும், ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் - அரசர்க்குரிய அமைச்சராதி ஐந்து பெருங் குழுவினரும் கரணத்தியலவராதி எண்பெருங் கூட்டத்தினரும், வந்து ஒருங்கு குழீஇ - வந்து ஒன்றாகக் கூடி ;
மெய்த்திறம்-மெய்ந்நூல் வகை ; ¹"யாமெய்யாக் கண்
டவற்றுள்" என்பதில், மெய்-மெய்ந்நூலென்னும் பொருட்டாதல் அறிக. ²"மெய்த்திறம் வழக்கென விளம்புகின்ற, எத்திறத்தினு மிசையா திவருரை" என மேல் வருவதனாலும் இப் பொருள் அறியப்படும். நன்பொருள் வீடு என்பவற்றை ஒன்றாயடக்கி, ³"அருமறை விதியு முலகியல் வழக்கும், கருத்துறை பொருளும் விதிப்பட நினைந்து" என்றார் கல்லாட ஆசிரியர். அகலாராகி எய்திய கடவுளாளர் என்க. வானவ ருருவினை மக்கள் கண்கள் காணப்பொறா வென்பதனை ⁴ "அந்தரத் துள்ளோ ரறியா மரபின், வந்து காண்குறூஉம் வானவன் விழவும்" ⁵" அவளுக்குப், பூவந்த வுண்கண் பொறுக்கென்று மேவித்தன், மூவா விளநலங்காட்டி" என்பவற்றானறிக. ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்பவற்றை, ⁶"அமைச்சர் புரோகிதர் சேனாபதியர், தவாத்தொழிற்றூதுவர் சாரண ரென்றிவர், பார்த்திபர்க் கைம்பெருங் குழுவெனப் படுமே," ⁷"கரணத் தியலவர் கரும விதிகள், கனகச் சுற்றங் கடைக்காப்பாளர், நகர மாந்தர் நளிபடைத் தலைவர், யானை வீர ரிவுளி மறவர், இனைய ரெண்பே ராய மென்ப" என்னுஞ் சூத்திரங்களா னறிக.
¹ குறள். 200. ² மணி. 27: 106-7. ³ கல். 66. ⁴ சிலப். 6: 72-3.
⁵ சிலப். 9: 33-5. ⁶ திவாகரம் ⁷சிலப். 6: 7-13.
2.3
விழாவறை காதை
20
25
வந்தொருங்கு குழீ இ வான்பதி தன்னுள்
கொடித்தேர்த் தானைக் கொற்றவன் துயரம்
விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின்
மடித்த செவ்வாய் வல்லெயி றிலங்க
இடிக்குரல் முழக்கத் திடும்பை செய்திடும்
தொடுத்தபா சத்துத் தொல்பதி நரகரைப்
புடைத்துணும் பூதமும் பொருந்தா தாயிடும்
மாயிரு ஞாலத் தரசுதலை யீண்டும்
ஆயிரங் கண்ணோன் விழாக்கால் கொள்கென
18
உரை
26
வான்பதி தன்னுள் - தேவர் நகரமாகிய அமராபதியில், கொடித் தேர்த் தானைக் கொற்றவன் துயரம் விடுத்த பூதம்-கொடி யெடுத்த தேர்ப்படையினையுடைய முசுகுந்த மன்னற்குப் பகைவரால் நேர்ந்த துன்பத்தினை நீக்கிய நாளங்காடிப்பூதம், விழாக்கோள் மறப்பின் - விழாவெடுத்தலை மறந்தால், மடித்த செவ்வாய் வல் எயிறு - இலங்க - சினத்தான் மடிக்கப்பெற்ற சிவந்த வாயில் வலிய பற்கள் விளங்க, இடிக்குரல் முழக்கத்து இடும்பை செய்திடும் - இடியொலி போன்ற முழக்கத்துடன் துன்பஞ் செய்யும், தொடுத்த பாசத்துத் தொல்பதி நரகரைப் புடைத்து உணும் பூதமும் பொருந்தாதாயிடும் - இம் முதுநகரில் அல்லவை செய்யும் பாவிகளைக் கையிற்கொண்ட பாசத்தாற் பிணித்துப் புடைத்து உண்ணுஞ் சதுக்கப்பூதமும் பகைமை கொள்ளும்; ஆகலின், மாயிரு ஞாலத்து அரசு தலைஈண்டும் - மிகப்பெரிய புவியின்கண் உள்ள அரசரெல்லாரும் வந்து செறிதற் கேதுவாகிய, ஆயிரங் கண்ணோன் விழா - இந்திரனுக்குச் செய்யும் விழாவினை, கால் கொள்க என - தொடங்குகவென்று சொல்ல ;
துயரம்-அவுணர் விட்ட இருட்கணையால் உண்டாகிய
துன்பம். விடுத்த-முசுகுந்தற்கு ஓர் மந்திரத்தை யருளி அவ்விருளைப் போக்கிய. பூதம்-புகார்நகரின் பட்டினப்பாக்கம் மருவூர்ப்பாக்கம் இரண்டிற்கும் நடுவாகிய நாளங்காடி யிடத்துள்ள பூதம். இவ்வரலாற்றினை, ¹"கடு விசை யவுணர்...இடனுங் காண்கும்" என்பதனாலும், "முன்னாளிந்திரன் ...பூதம்" என்னும் உரை மேற்கோளாலும் அறிக. நரகர்-²"தவ மறைந் தொழுகுந் தன்மையி லாளர், அவமறைந் தொழுகு மலவற் பெண்டிர், அறைபோ கமைச்சர், பிறர்மனை நயப்போர், பொய்க் கரியாளர், புறங்கூற்றாளர் என்னுமிவர். பூதம்-சதுக்கப்பூதம். பொருந்தாதாயிடும் - நகரை விட்டு நீங்கும் எனினுமாம். கால் கொள்க வென்று சமயக்கணக்கர் முதலாயினோர் கூறவென்க.
¹ சிலப். 6: 7-13. ² சிலப். 5: 128-31.
2.4
விழாவறை காதை
30 வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை யேற்றி
ஏற்றுரி போர்த்த இடியுறு முழக்கின்
கூற்றுக்கண் விளிக்குங் குருதி வேட்கை
முரசுகடிப் பிடூஉம் முதுகுடிப் பிறந்தோன்
திருவிழை மூதூர் வாழ்கென் றேத்தி
வான மும்மாரி பொழிக மன்னவன்
கோள்நிலை திரியாக் கோலோ னாகுக
27
உரை
34
வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசம்-வச்சிரப்படை நிற்குங் கோயிலின்கணுள்ள விழாமுரசினை, கச்சையானைப் பிடர்த்தலை ஏற்றி-கச்சையை யணிந்த யானையின் பிடரினிடம் ஏற்றி, ஏற்று உரி போர்த்த இடியுறு முழக்கிற் கூற்றுக்கண் விளிக்கும் குருதி வேட்கை-வென்ற நல்லேற்றின் உரியாற் போர்க்கப்பட்டதும் இடியை யொத்த முழக்கத்தை யுடையதும் கூற்றுவனை யழைப்பதும் குருதிப் பலிகொள்ளும் விருப்பத்தினை யுடையதுமாகிய, முரசு கடிப்பிடூஉம் முதுகுடிப் பிறந்தோன் - வீர முரசத்தைக் குறுந்தடிகொண்டு அறைகின்ற தொல்குடிப் பிறந்த வள்ளுவன், திரு விழைமூதூர் வாழ்க என்று ஏத்தி-திருமகளும் விழைகின்ற தொன்னகர் வாழ்க என்று துதித்து, வானம் மும்மாரி பொழிக-மேகம் மாதம் மும்முறை மழை பொழிக, மன்னவன் கோள்நிலை திரியாக் கோலோன் ஆகுக - அரசன் கோள்கள் நிற்கும் நிலை குலையாமைக்குக் காரணமாகிய செங்கோலை யுடையவனாகுக என வாழ்த்தி ;
கச்சை - அடி வயிற்றிற் கட்டுங் கயிறு. பிடர்த்தலை -
பிடரிடம். வீர முரசிற்கு வென்ற ஏற்றின் தோலை மயிர் கழியாது போர்த்தல் மரபு; இதனை' ¹" மண்கொள வரிந்த வைந்துதி மருப்பின், அண்ணனல்லே றிரண்டுடன் மடுத்து, வென்றதன் பச்சை சீவாது போர்த்த, திண்பிணி முரசம்" என்பதனாலறிக. இடியுறு: உறு - உவமவுருபு. இடியுரும் என்னும் பாடத்திற்கு இடியேறு என்க. கூற்றுக்கண் : கண் - அசை. கடிப்பிகூஉம் என்னும் பாடத்திற்கும், இகூஉம்-அறையுமென்னும் பொருட்டாம்; ²" முரசுகடிப் பிகுப்பவும்" என்பது காண்க. என்று வாழ்த்தியென விரித்துரைக்க. மூதூர் வாழ்க மாரிபொழிக கோலோனாகுக என்று ஏத்தி என்னலுமாம்; ஏத்தி-வாழ்த்தி. அரசனது கோல் கோடின் கோட்கள் நிலை திரியும் என்பது, ³"கோனிலை திரிந்திடிற் கோணிலை திரியும்" ⁴"கோணிலை திரிந்து...அரசுகோல் கோடி னென்றான்" என்பவற்றாலும் அறியப்படும். முதுகுடிப் பிறந்தோன் முரசம் ஏற்றி ஏத்தி என்றியைக்க.
¹ புறம். 287. ² புறம். 157. ³ மணி. 7: 8. ⁴ சீவக. 255.
2.5
விழாவறை காதை
35
40
தீவகச் சாந்தி செய்தரு நன்னாள்
ஆயிரங் கண்ணோன் தன்னோ டாங்குள
நால்வேறு தேவரும் நலத்தகு சிறப்பில்
பால்வேறு தேவரும் இப்பகுப் படர்ந்து
மன்னன் கரிகால் வளவன் நீங்கியநாள்
இந்நகர் போல்வதோர் இயல்பின தாகிப்
பொன்னகர் வறிதாப் போதுவ ரென்பது
தொன்னிலை யுணர்ந்தோர் துணிபொரு ளாதலின்
35
உரை
42
தீவகச் சாந்தி செய்தரு நல் நாள் - நாவலந் தீவிற்குச் சாந்தியாகிய இந்திர விழவினைக் கொண்டாடு நாட்களில், ஆயிரங் கண்ணோன் தன்னோடு-ஆயிரங் கண்களையுடைய புரந்தரனோடு, ஆங்குள நால்வேறு தேவரும் நலத்தகு சிறப்பின் பால்வேறு தேவரும் இப்பதிப் படர்ந்து-ஆண்டுள்ள நால்வகையாகப் பிரிக்கப்படும் முப்பத்து மூவராகிய தேவரும் நன்மைசால் சிறப்புடையராகிய பதினெண் கணங்களும் இந்நகரத்தினை நினைந்து; மன்னன் கரிகால் வளவன் நீங்கிய நாள்-கரிகாற் பெருவளத்தான் என்னும் மன்னர் பெருமான் இந்நகரினின்றும் நீங்கி வட திசையிற் போருக்குச் சென்ற ஞான்று, இந்நகர் போல்வதோர் இயல்பினது ஆகி-இப்பதி வறிதாகிய தன்மைபோல, பொன் நகர் வறிதாப் போதுவர் என்பது - பொன்னுலகம் வறிதாகுமாறு ஈண்டு அடைவர் என்பது, தொல்நிலை உணர்ந்தோர் துணி பொருள் ஆதலின்-பழமையை அறிந்தோர்களால் துணியப்பட்ட பொருளாகலின் ;
நாவலந் தீவின் காவற்றெய்வம் முற்காலத்தில் இத்
தீவிலுள்ளார்க்கு அவுணரால் வருந்துன்பத்தை ஒழித்தற் பொருட்டாக இந்திரனுக்குச் செய்தமையால் இந்திரவிழா தீவகச்சாந்தி எனப்பட்டது. ¹"நாவலோங்கிய மாபெருந் தீவினுட், காவற்றெய்வதந் தேவர்கோற்கெடுத்த, தீவகச் சாந்தி" என மேல் வருதல் காண்க. இனி, இந்நகருக்குளவாகுந் துன்பங்களை யொழித்தற்குச் செய்யப்படும் இவ்விழா தீவிற்குச் செய்வதனை யொக்கு மென்னுங் கருத்தால் தீவகச் சாந்தி யெனப்பட்டதெனினும் அமையும்; இவ்வூ ரம்பலம் "உலக வறவி" (7 : 93 ; 17 : 78, 86) என இக்காப்பியத்தும், இவ்வூர் வாயில் ²"உலக விடைகழி" எனச் சிலப்பதிகாரத்தும் கூறப்படுதல் காண்க. நால் வேறு தேவர் - வசுக்கள் எண்மரும் ஆதித்தர் பன்னிருவரும், உருத்திரர் பதினொருவரும், மருத்துவர் இருவரும் ஆகிய முப்பத்து மூவர். பால்-பகுதி. படர்ந்து-நினைந்து. கரிகால் வளவன்-புகாரிலிருந்தரசாண்ட பெரு வீரனாகிய ஓர் சோழமன்னன் ; இவன் வடநாட்டின்மீது படையெடுத்துச் சென்ற செய்தி ³"செருவெங் காதலிற் றிருமா வளவன்,...புண்ணியத் திசைமுகம் போகிய வந்தாள்" எனச் சிலப்பதிகாரத்து வருதலான் அறியப்படும். வறிதா-வறுமையுடையதாக; தேவர் பலரும் விழாக்காண இந்நகர்க்கு வந்துவிடுதல்பற்றி இவ்வாறு கூறப்பட்டது.
¹ மணி. 2 : 1-3. ² சிலப், 10-27. ³ சிலப். 5 : 60-4.
2.6
விழாவறை காதை
45 தோரண வீதியுந் தோமறு கோட்டியும்
பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும்
பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின்
43
உரை
45
தோரண வீதியும் தோம் அறு கோட்டியும்-தோரணங்களையுடைய வீதிகளிலும் குற்றமற்ற மன்றங்கிளிலும், பூரண கும்பமும் பொலம்பாலிகைகளும் பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின் -நிறைகுடங்களும் பொற்காலிகைகளும் பாவைவிளக்குகளுமாகிய மங்கலப் பொருள் பலவற்றையும் ஒருங்கு பரப்புமின் ;
2.7
விழாவறை காதை
காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்
பூக்கொடி வல்லியுங் கரும்பும் நடுமின
46
உரை
47
காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்-காய்ந்த குலைகளுடன் கூடிய பாக்கு மரமும் வாழை மரமும் வஞ்சி மரமும், பூக்கொடி வல்லியும் கரும்பும் நடுமின் - மலர்களையுடைய கொடியும்கரும்பும் என்னுமிவற்றை நடுவீர் ; வஞ்சி - கொடியுமாம். கொடி வல்லி ஒரு பொருளன.
2.8
விழாவறை காதை
பத்தி வேதிகைப் பசும்பொற் றூணத்து
முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின்
48
உரை
49
பத்தி வேதிகைப் பசும்பொன் தூணத்து-வலிசையாகவுள்ள திண்ணைகளிலிருக்கும் பசும் பொன்னாலாகிய தூண்களில், முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின் - முத்துமாலைகளை முறையாகத் தொங்க விடுமின் ; தூணம் - தூண். பத்தியாகிய தூண் என்றலுமாம். முறையொடு - முறையால்.
2.9
விழாவறை காதை
50 விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும்
பழமணல் மாற்றுமின் புதுமணற் பரப்புமின்
50
உரை
51
விழவு மலி மூதூர் வீதியும் மன்றமும் - விழாக்கள் நிறைந்த மூதூரின் வீதிகளிலும் மரத்தடிகளிலும், பழ மணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின் - பழைய மணலை நீக்குமின் புதிய மணலைப் பரப்புமின் ; மன்றம்-ஊர்க்கு நடுவாய் எல்லாரு மிருக்கும் மரத்தினடி என்பர்.
2.10
விழாவறை காதை
கதலிகைக் கொடியுங் காழூன்று விலோதமும்
மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின
52
உரை
53
கதலிகைக் கொடியும் காழ் ஊன்று விலோதமும் மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின்-துகிற் கொடிகளையும் காம்பினால் ஊன்றப்படுங் கொடிகளையும் காடுங்கைகளையுடைய
மாடங்களிலும் வாயில்களிலும் சேர்ப்பீராக ;
கதலிகைக்கொடி, விலோதம் என்பன துகிற்கொடி வேறுபாடுகள்.
2.11
விழாவறை காதை
55 நுதல்விழி நாட்டத் திறையோன் முதலாப்
பதிவாழ் சதுக்கத்துத் தெய்வமீ றாக
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
ஆறறி மரபின் அறிந்தோர் செய்யுமின்
54
உரை
57
நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப் பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் றாக-இமைத்தலில்லாத நெற்றித் திருக் கண்ணையுடைய சிவபெருமான் முதலாக இப்பதியில் வாழ்கின்ற சதுக்கப்பூதம் ஈறாகவுள்ள கடவுளர்கட்கு, வேறு வேறு சிறப்பின் வேறு வேறு செய்வினை - வெவ்வேறு வகைப்பட்ட சிறப்புக்களோடு வெவ்வேறாகிய செய்வினைகளை, ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யுமின்-செய்யும் நெறியினை அறிந்த முறைமையினையுடைய
அறிவுடையோர் செய்ம்மின் ;
விழிநாட்டம்-இமையா நாட்டம்; ¹"நுதல திமையா நாட்டம்"
என்பது அகம். ²" நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும்" என்பர், இளங்கோவடிகளும். இனி, இறைவி கண் புதைத்தபொழுது நெற்றியிற் புறப்படவிட்டகண் என்றுமாம். விழி-விழித்த. சதுக்கம் -
நான்கு தெருக் கூடுமிடம்- சிறப்பு - நைமித்திகமும், செய்வினை - நித்தமுமாம்; வெவ்வேறு சிறப்பினுக்கேற்ற செய்வினையுமாம். ஆறு - வேதத்தின் ஆறங்கமுமாம். அறிந்தோர் : முன்னிலை.
¹அகம். கடவுள் வாழ்த்து. ² சிலப். 14 : 7.
2.12
விழாவறை காதை
தண்மணற் பந்தருந் தாழ்தரு பொதியிலும்
புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின்
58
உரை
59
தண்மணற் பந்தரும் தாழ்தரு பொதியிலும் - குளிர்ந்த மணலையுடைய பந்தர்களிலும பலரும் தங்கும் அம்பலங்களிலுப், புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின் - நன்றாகிய அறவுரையை அறிவீர் சேருமீன் ;
மணப்பந்தர் என்னும் பாடத்திற்கு மணத்தையுடைய தண்ணீர்ப்பந்தர் என்க. தாழ்தல் - தங்குதல். புண்ணிய நல்லுரை - தருமபதம். பொருந்துமின் - பொருந்தி உரைமின் என்று
கொள்க.
2.13
விழாவறை காதை
60 ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்
பட்டிமண் டபத்துப் பாங்கறிந் தேறுமின்
60
உரை
61
ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள் - தம்தம் சமயத்திற் பொருந்திய பொருள்களைக் குறித்துச் சபதஞ்செய்து வாதிக்கும் சமயவாதிகள், பட்டி மண்டபத்துப் பாங்கு அறிந்து எறுமின்- வித்தியா மண்டபத்தில் உரிய இடங்களில் அமர்வீர் ; ஒட்டல்-சபதஞ் செய்தல், பொருள்-தத்துவம். பட்டிமண்டபம்- கலை யாராய்தற்கும், வாது புரிதற்குமுரிய மண்டபம் ; ¹"பகைப்புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும்" ²"பன்னருங் கலைதெரி பட்டி மண்டபம்" என்பன காண்க. ஓலக்க மண்டபமென்றும் கூறுவர். ³"பட்டி மண்டப மேற்றினை யேற்றினை" என்பது திருவாசகம்.
¹ சிலப். 5 : 102. ² கம்ப. நகர. 62. ³திருவாசகம், சதகம், 49.
2.14
விழாவறை காதை
பற்றா மாக்கள் தம்முட னாயினும்
செற்றமுங் கலாமுஞ் செய்யா தகலுமின்
62
உரை
63
பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும்-பகைவரோடாயினும், செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின் - சினமும் போரும் செய்யாது நீங்குமின் ;
செற்றம் - நெடுங்கால நிற்கும் கோபம்; வயிரம்.
2.15
விழாவறை காதை
65 வெண்மணற் குன்றமும் விரிபூஞ் சோலையும்
தண்மணல் துருத்தியுங் தாழ்பூந் துறைகளும்
தேவரு மக்களும் ஒத்துடன் றிரிதரு
நாலேழ் நாளினும் நன்கறிந் தீரென
64
உரை
67
வெண்மணற் குன்றமும் - வெள்ளிய மணற்குன்றுகளிலும், விரிபூஞ் சோலையும் - பரந்த மலர்ப் பொழில்களிலும், தண்மணல் துருத்தியும் - குளிர்ந்த மணலையுடைய யாற்றிடைக் குறைகளிலும், தாழ் பூந்துறைகளும் -ஆழ்ந்த பொலிவினையுடைய நீர்த்துறைகளிலும், தேவரும் மக்களும் ஒத்து உடன்திரிதரும் நாலேழ் நாளினும் - தேவரும் மக்களும் வேற்றுமையின்றிச் சேர்ந்துலாவும் இருபத்தெட்டு நாட்களிலும், நன்கு அறிந்தீர் என - இவற்றை நன்கு அறிந்தீராய என்று ; அறிந்தீர் : அறிந்தீராகியென வினையெச்சமாக்குக.
2.16
விழாவறை காதை
70
ஒளிறுவாள் மறவருந் தேரும் மாவும்
களிறுஞ் சூழ்தரக் கண்முர சியம்பிப்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வகியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி
அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கென்.
68
உரை
72
ஒளிறு வாள் மறவரும் தேரும் மாவும் களிறும் குழ்தர விளங்குகின்ற வாளினையுடைய வீரரும் தேரும் குதிரையும் யானையும்சூழ்ந்துவர, கண் முரசு இயம்பி-முகத்தையுடைய முரசத்தினைஅடித்து, பசியும் பிணியும் பகையும் நீங்கி - மக்கள்பால் பசியும்நோயும் பகைமையும் நீங்கி, வசியும் வளனும் சுரக்க எனவாழ்த்தி-நாட்டிலே மழையும் வளமும் பெருகுக என்று வாழ்த்தி,அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கு என் - அகநகரிடத்தேஅழகிய விழாவைத் தெரிவித்தனன் என்க.
பகை-காமம் முதலிய உட்பகையுமாம். அகநகர்-பட்டினப்
பாக்கம். என் : அசை. ¹"பசியும் பிணியும் பகையு நீங்கி, வசியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி" எனச் சிலப்பதிகாரத்தும் இத்தொடர் முழுதும் வந்துள்ளமைகாண்க. முதுகுடிப் பிறந்தோன் முரசத்தை ஏற்றி இயம்பி ஏத்திச் சுரக்கென வாழ்த்தித் துணிபொருளாதலின் நாலேழ் நாளினும்நன்கறிந்தீராய்ப் பரப்புமின், நடுமின், நாற்றுமின், மாற்றுமின், பரப்புமின், சேர்த்துமின், செய்யுமின், பொருந்துமின், ஏறுமின், அகலுமின்என அகநகர் மருங்கு விழாவை அறைந்தனன் என்க.
¹ சிலப் . 5 ; 723
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil