Maṇimēkalai's Renunciation 2.5
Maṇimēkalai urai 2.5
- Language
- Tamil
2.5
விழாவறை காதை
35
40
தீவகச் சாந்தி செய்தரு நன்னாள்
ஆயிரங் கண்ணோன் தன்னோ டாங்குள
நால்வேறு தேவரும் நலத்தகு சிறப்பில்
பால்வேறு தேவரும் இப்பகுப் படர்ந்து
மன்னன் கரிகால் வளவன் நீங்கியநாள்
இந்நகர் போல்வதோர் இயல்பின தாகிப்
பொன்னகர் வறிதாப் போதுவ ரென்பது
தொன்னிலை யுணர்ந்தோர் துணிபொரு ளாதலின்
35
உரை
42
தீவகச் சாந்தி செய்தரு நல் நாள் - நாவலந் தீவிற்குச் சாந்தியாகிய இந்திர விழவினைக் கொண்டாடு நாட்களில், ஆயிரங் கண்ணோன் தன்னோடு-ஆயிரங் கண்களையுடைய புரந்தரனோடு, ஆங்குள நால்வேறு தேவரும் நலத்தகு சிறப்பின் பால்வேறு தேவரும் இப்பதிப் படர்ந்து-ஆண்டுள்ள நால்வகையாகப் பிரிக்கப்படும் முப்பத்து மூவராகிய தேவரும் நன்மைசால் சிறப்புடையராகிய பதினெண் கணங்களும் இந்நகரத்தினை நினைந்து; மன்னன் கரிகால் வளவன் நீங்கிய நாள்-கரிகாற் பெருவளத்தான் என்னும் மன்னர் பெருமான் இந்நகரினின்றும் நீங்கி வட திசையிற் போருக்குச் சென்ற ஞான்று, இந்நகர் போல்வதோர் இயல்பினது ஆகி-இப்பதி வறிதாகிய தன்மைபோல, பொன் நகர் வறிதாப் போதுவர் என்பது - பொன்னுலகம் வறிதாகுமாறு ஈண்டு அடைவர் என்பது, தொல்நிலை உணர்ந்தோர் துணி பொருள் ஆதலின்-பழமையை அறிந்தோர்களால் துணியப்பட்ட பொருளாகலின் ;
நாவலந் தீவின் காவற்றெய்வம் முற்காலத்தில் இத்
தீவிலுள்ளார்க்கு அவுணரால் வருந்துன்பத்தை ஒழித்தற் பொருட்டாக இந்திரனுக்குச் செய்தமையால் இந்திரவிழா தீவகச்சாந்தி எனப்பட்டது. ¹"நாவலோங்கிய மாபெருந் தீவினுட், காவற்றெய்வதந் தேவர்கோற்கெடுத்த, தீவகச் சாந்தி" என மேல் வருதல் காண்க. இனி, இந்நகருக்குளவாகுந் துன்பங்களை யொழித்தற்குச் செய்யப்படும் இவ்விழா தீவிற்குச் செய்வதனை யொக்கு மென்னுங் கருத்தால் தீவகச் சாந்தி யெனப்பட்டதெனினும் அமையும்; இவ்வூ ரம்பலம் "உலக வறவி" (7 : 93 ; 17 : 78, 86) என இக்காப்பியத்தும், இவ்வூர் வாயில் ²"உலக விடைகழி" எனச் சிலப்பதிகாரத்தும் கூறப்படுதல் காண்க. நால் வேறு தேவர் - வசுக்கள் எண்மரும் ஆதித்தர் பன்னிருவரும், உருத்திரர் பதினொருவரும், மருத்துவர் இருவரும் ஆகிய முப்பத்து மூவர். பால்-பகுதி. படர்ந்து-நினைந்து. கரிகால் வளவன்-புகாரிலிருந்தரசாண்ட பெரு வீரனாகிய ஓர் சோழமன்னன் ; இவன் வடநாட்டின்மீது படையெடுத்துச் சென்ற செய்தி ³"செருவெங் காதலிற் றிருமா வளவன்,...புண்ணியத் திசைமுகம் போகிய வந்தாள்" எனச் சிலப்பதிகாரத்து வருதலான் அறியப்படும். வறிதா-வறுமையுடையதாக; தேவர் பலரும் விழாக்காண இந்நகர்க்கு வந்துவிடுதல்பற்றி இவ்வாறு கூறப்பட்டது.
¹ மணி. 2 : 1-3. ² சிலப், 10-27. ³ சிலப். 5 : 60-4.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil