Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 23.11

Maṇimēkalai urai 23.11

Language
Tamil

23.11

சிறைசெய் காதை

60

65 தெய்வம் தொழாஅள் கொழுநற் றெழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றஅப்
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்
பிசியும் நொடியும் பிறர்வாய்க் கேட்டு
விசிபிணி முழவின் விழாக்கோள் விரும்பிக்
கடவுள் பேணல் கடவியை யாகலின்
மடவரல் ஏவ மழையும் பெய்யாது
நிறையுடைப் பெண்டிர் தம்மே போலப்
பிறர்நெஞ்சு சுடூஉம் பெற்றியு மில்லை
ஆங்கவை யொழிகுவை யாயி னாயிழை
ஓங்கிரு வானத்து மழையுநின் மொழியது

59

உரை

69

தெய்வந்தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்ற-பிற தெய்வத்தை வணங்காது தன் தெய்வமாகிய கணவனைத் தொழுது எழுகின்ற கற்புடை நங்கை பெய்யென்று சொல்லப் பெருமழை பெய்யும்எனவுரைத்த, அப் பொய்யில் புலவன் பொருளுரை தேறாய் - தெய்வப் புலவராகிய திருவள்ளுவனாரது அப் பொருண்மொழியைத் தெளியாயாய், பிசியும் நொடியும் பிறர்வாய்க் கேட்டு-பொருளொடு புணராப் பொய்ம்மொழிகளையும் பொருளொடு புணர்ந்த நகைமொழிகளையும் பிறரிடம் கேட்டு, விசிபிணி முழவின் விழாக்கோள் விரும்பி- கட்டப்பட்ட கட்டினையுடைய முழவுடன்கூடிய விழாக்காண்டலை விரும்பி, கடவுள் பேணல் கடலியை ஆகலின் - வேறு கடவுளை வணங்கும் கடப்பாடுடைய ஆயினையாகலின், மடவரல் ஏவ மழையும் பெய்யாது - நங்காய் நீ ஏவினாள் மழையும் பெய்யாது, நிறையுடைப் பெண்டிர் தம்மே போல - நிறையுடைய மகளிரைப் போல, பிறர் நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை - பிறருடைய உள்ளத்தைச் சுடுகின்ற தன்மையுடையையும் அல்லை, ஆங்கவை ஒழிகுவை ஆயின் - முற்கூறிய நின் செயல்களை நீங்குவாயானால், ஆயிழை ஓங்கிரு வானத்து மழையும் நின் மொழியது - நங்காய் உயர்ந்த வானத்து மழையும் நீ 'பெய்' என மொழியிற் பெய்யா நிற்கும் ;

"தெய்வந் தொழாஅள...தேறாய்" என்றது இந்நூலாசிரியர் கருத்துத் தெய்வத்தின் கூற்றில் வைத்துணர்த்தப்பட்டது. சாத்தனார் இக் குறளை ¹உரையளவையாகக் கொண்டு, வள்ளுவரைப் பொய்யில் புலவன் என்று கூறியது தெய்வப் புலவர்பால் அவருக்குள்ள பெருமதிப்பை இனிது புலப்படுத்தும். பொருளுரை - முனிவர் புரிந்து கண்ட பொருளுடன் கூடியவுரை ; மெய்யுரையுமாம்; பொருள் - மெய்ம்மையாதலைப் 'பொருள்சேர் புகழ்' என்பதனாலறிக. பிசி - பொய்ம்மொழியும் நகைமொழியுமாவது; இது பிதிர் எனவும், விடுகதையெனவும் வழங்கும். ஆசிரியர் தொல்காப்பியனார் ²"நொடியொடு புணர்த்த பிசியி னான" என நொடியைப் பிசிக்கு அடையாகவே கூறி யுள்ளார். ஈண்டு நொடி என்பதற்கு வறுமொழி என்று கூறுதல் சாலும். மடவரல் : முன்னிலைப் பெயர்.

¹ குறள் : 55. ² தொல், செய், 165.

Linked texts (1)