Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 23.12

Maṇimēkalai urai 23.12

Language
Tamil

23.12

சிறைசெய் காதை

70

75 பெட்டாங் கொழுகும் பெண்டிரைப் போலக்
கட்டா துன்னையென் கடுந்தொழிற் பாசம்
மன்முறை யெழுநாள் வைத்தவன் வழூஉம்
பின்முறை யல்ல தென்முறை யில்லை
ஈங்கெழு நாளில் இளங்கொடி நின்பால்
வரங்கா நெஞ்சின் மயரியை வாளால்
ககந்தன் கேட்டுக் கடிதலு முண்டென
இகந்த பூதம் எடுத்துரை செய்ததப்
பூத முரைத்த நாளா லாங்கவன்
தாதை வாளால் தடியவும் பட்டனன்

70

உரை

79

பெட்டாங்கு ஒழுகும் பெண்டிரைப் போல - விரும்பிய வண்ணம் ஒழுகும் பெண்டிரைக் கட்டுவதுபோல, கட்டாது உன்னை என் கடுந் தொழிற்பாசம் - எனது கொடிய தொழிலையுடைய பாச மானது நின்னைப் பிணியாது, மன்முறை எழுநாள்வைத்து-அரசன் முறை செய்தற்குக் காலவளவாக ஏழுநாள் நிறுத்தி, அவன் வழுஉம் பின் முறை அல்லது - அந்நாட்களுள் அவன் முறை செய்யாது தவறிய பின்பல்லது, என்முறை இல்லை - யான் முறை செய்யுமாறில்லை, ஈங்கெழுநாளில் இளங்கொடி நின்பால் வாங்கா நெஞ்சின் மயரியை - மெல்லியலே இன்றைக்கு ஏழாம் நாளில் நின்னிடம் வைத்த உள்ளத்தை மீட்காத மயக்கமுடையோனை, வாளால் ககந்தன் கேட்டுக் கடிதலும் உண்டு என - ககந்தன் கேள்வியுற்று வாளினால் ஒறுத்தலும் உண்டு என்று, இகந்த பூதம் எடுத்துரை செய்தது-தீமையைக் கடந்த பூதம் எடுத்துக் கூறியது, அப்பூதம் உரைத்த நாளால் ஆங்கவன் தாதைவாளால் தடியவும் பட்டனன்- அப்பூதங் கூறிய நாளிலேயே அவன் தன் தந்தையின் வாளால் வெட்டப்பட்டனன் ;

நீ அங்ஙனம் விழாக் காண்டல் முதலியன செய்து போந்தாயாயினும கற்பு நெறி கடந்து அவமைறந் தொழுகும் அலவற்பெண்டிர் போலாகாயாகலின் என் பாசம் உன்னைக் கட்டாதென்றும், நின்பால் உள்ளத்தைச் செல்ல விடுத்துப் பிறர்மனை நயத்தலாகிய குற்ற மிழைத்தோனைப் புடைத்துண்டல் வழுவன்றாயினும் ஏழுநாளளவில் அரசன் முறை செய்யா தொழியினே அங்ஙனம் செய்யலாகுமென்றும் பூதங் கூறிற்றென்க. முறை செய்தல் - குற்றஞ் செய்தாரை அதற்குத்தக ஒறுத்தல்; ¹"முறையெனப் படுவது கண்ணோடா துயிர்வவ்வல்" என்றார் பிறசான்றோரும். பின்முறை - பின்பு. எழுநாளில் - ஏழாவது நாளில். மயரி - மயக்கமுடையான். நாளால் - நாளில்.

¹ கலி. நெய்தல்: 16.

Linked texts (1)