Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 25.20

Maṇimēkalai urai 25.20

Language
Tamil

25.20

ஆபுத்திரனாடு அடைந்த காதை

125

130
தீவினை யென்ப தியாதென வினவின்
ஆய்தொடி நல்லா யாங்கது கேளாய்
கொலையே களவே காமத் தவிழைவு
உலையா வுடம்பிற் றோன்றுவ மூன்றும்
பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்
சொல்லெனச் சொல்லிற் றோன்றுவ நான்கும்
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சியென்று
உள்ளந் தன்னி னுருப்பன மூன்றுமெனப்
பத்து வகையாற் பயன்றெரி புலவர்
இத்திறம் படரார் படர்குவ ராயின்
விலங்கும் பேயு நரகரு மாகிக்
கலங்கிய வுள்ளக் கவலையிற் றோன்றுவர்

123

உரை

134

தீவினை என்பது யாது என வினவின் ஆய்தொடி நல்லாய் ஆங்கது கேளாய் - தீவினை எனப்படுவது யாது என்று வினவினால் ஆராய்ந்த வளையல்களை அணிந்த நங்காய் அதனைக் கேட்பாயாக, கொலையே களவே காமத் தீவிழைவு உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும் - கொலையும் களவும் காமமாகிய கொடிய விருப்பமும் என்று உடலின்கண் தோன்றுவன மூன்றும், பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்-பொய் குறளை கடுஞ்சொல் பயனில்சொல் என்று சொல்லிற் பிறப்பன நான்கும், வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று உள்ளந்தன்னில் உருப்பன மூன்றும் எனப் பத்து வகையாம் - விரும்பல் சினத்தல் மயக்க மெய்துதல் என மனத்தின்கண் எழுவன மூன்றும் எனப் பத்து வகையாகும், பயன்தெரி புலவர் இத்திறம் படரார் - வினைகளின் பயனை உணர்ந்த அறிஞர் கொலை முதலிய இத் தீய வழிகளிற் செல்லார், படர்குவர் ஆயின் - யாரேனும் அந்நெறிகளிற் செல்வராயின் அங்ஙனம் செல்லுபவர், விலங்கும் பேயும் நரகரும் ஆகிக் கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர் - விலங்கும் பேயும் நரகருமாய்க் கலக்கமுற்ற உள்ளக் கவலையின்கட்படுவர்;

காமத் தீவிழைவு - இணை விழைச்சு. எனவென ஒரு சொல் வருவிக்க. உலையா உடம்பு - தளராத வுடம்பு. குறளை - கோட்சொல், பயனில் சொல்-அறம் பொருள் இன்பங்களில் ஒன்றும் பயவாத சொல், வெஃகல் - விரும்புதல், பொல்லாக்காட்சி - மயக்க வறிவு. வெஃகல் முதலிய மூன்றும் முறையே காமம் வெகுளி மயக்கம் எனப்படும். படர் குவராயின் அங்ஙனம் படர்வோர் என விரித்துரைக்க.

Linked texts (1)