Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 25.21

Maṇimēkalai urai 25.21

Language
Tamil

25.21

ஆபுத்திரனாடு அடைந்த காதை

135

140
நல்வினை யென்ப தியாதென வினவில்
சொல்லிய பத்தின் றொகுதியினீங்கிச்
சீலந் தாங்கித் தானந் தலைநின்று
மேலென வகுத்த வொருமூன்று திறத்துத்
தேவரு மக்களும் பிரமரு மாகி
மேவிய மகிழ்ச்சி வினைப்பய னுண்குவர்

135

உரை

140

நல்வினை என்பது யாது என வினவின் - நல்வினை எனப்படுவது எத்தகைத்து என்று வினவினால், சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி-கூறப்பட்ட பத்துவகைக் குற்றங்களினின்றும் நீங்கி, சீலம் தாங்கித் தானம் தலை நின்று - சீலத்தை மேற்கொண்டு தானம் வழங்குதலில் நிற்றல்; அங்ஙனம் நிற்போர், மேல் என வகுத்த ஒரு மூன்று திறத்து - உயர்வுடையன என்று வகுக்கப் பட்ட மூவகையினை யுடைய, தேவரும் மக்களும் பிரமரும் ஆகி-வானவர் மக்கள் பிரமர் என்போராய், மேவிய மகிழ்ச்சி வினைப் பயன் உண்குவர் - பொருந்திய நல்வினைப் பயனை அனுபவிப்பர்.

சீலம் - விலக்கியன வொழித்து விதித்தன செய்தல். கள்ளுண்ணாமை முதலிய ஐந்தும் ஐவகைச் சீலம் எனப்படும்; இவை இல்லறத்தார்க்குரியன. ஏனோர்க்கு இவற்றுடன் மூன்றும் ஐந்தும் கூட்டி எட்டும் பத்துமாம் என்பர். தானம் தலை நின்று என்புழித் தலைநின்று என்னும் எச்சத்தைத் தலைநிற்றல் எனத் திரித்தும், அங்ஙனம் நிற்போர் என விரித்தும் உரைக்க. நல்வினை என்பது நீங்கித் தாங்கி நிற்றல் என்க. மகிழ்ச்சிவினை-நல்வினை. செய்கையை நல்வினை தீவினை எனப் பாகுபாடு செய்தவர் பின் அவற்றி னியல்பை எதிர் நிரனிறை வகையால் விளக்கின ரென்க. "பேதைமை செய்கை" என்பது முதல் ஈண்டுக் கூறப்பட்ட முப்பத்தைந்து அடிகளும் இந்நூலின் 30ஆம் காதையில் இவ்வாறே வந்துள்ளமை அறியற்பாலது.

Linked texts (1)