Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 26.14

Maṇimēkalai urai 26.14

Language
Tamil

26.14

ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை

100

மனம்வே றாயினன் மன்னென மந்திரி
சனமித் திரனவன் தாள்தொழு தேத்தி
எங்கோ வாழி யென்சொற் கேண்மதி
நுங்கோ னுன்னைப் பெறுவதன் முன்னாள்
பன்னீ ராண்டிப் பதிகெழு நன்னாடு
மன்னுயிர் மடிய மழைவளங் கரந்தீங்
கீன்றாள் குழவிக் கிரங்கா ளாகித்
தான்றனி தின்னுந் தகைமைய தாயது

97

உரை

104

மனம் வேறாயினன் மன் என மந்திரி சனமித்திரன் அவன் தாள் தொழுது ஏத்தி - அரசன் மனம் வேறுபட்டனன் என்று மந்திரயாகிய சனமித்திரன் மன்னவன் அடிகளை வணங் கித் துதித்து, எங்கோ வாழி என்சொல் கேண்மதி - எம்மிறைவனே வாழ்வாயாகஎன் மொழியினைக் கேள், நுங்கோன் உன்னைப் பெறுவதன் முன்னாள் - நுந் தந்தையாய பூமிசந்திரன் நின்னைப் பெறுவதற்கு முன்னர், பன்னீராண்டு இப் பதிகெழு நன்னாடு மன்னுயிர் மடிய மழைவளம் கரந்து-இந்நகரத்தினையுடைய நல்ல நாடு மிகுதியான உயிர்கள் இறக்குமாறு மழையாகிய செல்வம் பன்னீராண்டு மறைந்தமையால், ஈங்கு ஈன்றாள் குழவிக்கு இரங்காள் ஆகி-பெற்ற தாய் குழந்தைக்கு இரங்காதவளாய், தான் தனி தின்னும் தகைமையதாயது-தானே தனித்து உண்ணுந் தகுதியினை யுடைத்தாயிற்று;

மன் - அரசன். மதி; முன்னிலையசை, கரந்து -கரந்தமையால்என்க; கரந்து என்பதும் பாடம். நாடு - சாவக நாடு.

Linked texts (1)