Maṇimēkalai's Renunciation 26
Maṇimēkalai urai 26
- Language
- Tamil
26.1
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
5 அரச னுரிமையோ டப்பொழில் புகுந்து
தரும சாவகன் றன்னடி வணங்கி
அறனு மறனும் அநித்தமு நித்தத்
திறனுந் துக்கமுஞ் செல்லுயிர்ப் புக்கிலும்
சார்பிற் றேற்றமுஞ் சார்பறுத் துய்தியும்
ஆரிய னமைதியு மமைவுறக் கேட்குப்
1
உரை
6
அரசன் உரிமையோடு அப் பொழில் புகுந்து - மன்னவன் மனைவியுடன் அச் சோலையின்கட் புக்கு, தருமசாவகன் தன்னடி வணங்கி-தருமசாவக முனிவரின் திருவடிகளைவணக்கஞ் செய்து, அறனும் மறனும் அநித்தமும் நித்தத்திறனும் துக்கமும் செல்லுயிர்ப்புக்கிலும்-அறமும் பாவமும் அநித்தப்பொருளின் வகைகளும் நித்தப்பொருளின் வகைகளும் பிறப்புமுதலாய துக்கமும் செல்லுகின்ற வுயிர் புகுமிடமும், சார்பிற்றோற்றமும்சார்பு அறுத்துஉய்தி் - பேதைமை முதலிய பன்னிரண்டின் தோற்றமும் அவற்றினீங்கி உய்யும் வகையும், ஆரியன் அமைதியுப் அமைவுறக் கேட்டு- ஆசிரியனாகிய புத்தனின் இயல்பும் அமைதிபெறக் கேட்டு;
அரசன் - புண்ணிய ராசன். தரும சாவகன் என்பது தருமங் கேட்பவன் என்னும் பொருளது. துக்கம் - பிறப்பு, பிணி, மூப்பு சாக்காடு என்பன. சார்பிற்றோற்றம் - ஒன்றினொன்று சார்ந்து தோன்றும் பன்னிரு நிதானம். ஆரியன் - குரவன் ; புத்தன். அரசன் புகுந்து வணங்கிக் கேட்டு என்க.
26.2
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
10 பெண்ணிணை யில்லாப் பெருவனப் புற்றாள்
கண்ணிணை யியக்கமுங் காமனோ டியங்கா
அங்கையிற் பாத்திரங் கொண்டறங் கேட்கும்
இங்கிணை யில்லாள் இவள்யா ரென்னக்
7
உரை
10
பெண் இணை இல்லாப் பெருவனப்பு உற்றாள் - மகளிருள் தனக்கு இணையில்லாத பேரழகுடையளாய், கண்ணிணை இயக்கமும் காமனோடு இயங்கா - கண்களின் இயங்குதலும் அநங்கனோடு இயங்கா நின்று, அங்கையிற் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும்- அழகிய கையிற் பிச்சைப் பாத்திரத்தைக்கொண்டு அறவுரை கேட்கின்ற, இங்கிணை இல்லாள் இவள் யார் என்ன - இணையற்ற இம் மங்கை யாவள் என வினவ ;
கண்ணிணை இயக்கமும் காமனோடு இயங்கா என்றது இதனைக் கருவியாகக்கொண்டு காமன் போருக்கெழுமாறு இவள் பார்வையின் இயக்கம் உளதென்றபடி: "உருவி லாளனொ டுருவம் பெயர்ப்ப" (5: 6) என முன் வந்திருப்பதனோடு ஒத்து நோக்கற்பாலது. இனி, இயங்கா என முற்றாக்கி இயக்கம் தீநெறியிற் சென்றிலது என்றுமாம். அரசன் கேட்டுப் பின்பு இவள் யாரென்ன வென்க.
26.3
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
15 காவலற் றொழுது கஞ்சுக னுரைப்போன்
நாவலந் தீவிலிந் நங்கையை யொப்பார்
யாவரு மில்லை யிவள்திற மெல்லாம்
கிள்ளி வளவனொடு கெழுதகை வேண்டிக்
கள்ளவிழ் தாரோய் கலத்தொடும் போகிக்
காவிரிப் படப்பை நன்னகர் புக்கேன்
மாதவ னறவணன் இவள்பிறப் புணர்ந்தாங்
கோதின னென்றியா னன்றே யுரைத்தேன்
11
உரை
18
காவலன் தொழுது கஞ்சுகன் உரைப்போன் - அரசனைப் பணிந்து சட்டையிட்ட பிரதானி உரைக்கின்றவன், காவலந்தீவில் இந் நங்கையை ஒப்பார் யாவரும் இல்லை - சம்புத் தீவின்கண் இம்மங்கையை ஒப்பவர் எவரும் இல்லை, இவள் திறமெல்லாம் - இவளுடைய வரலாறு அனைத்தையும், கிள்ளிவளவனொடு கெழுதசை வேண்டி-கிள்ளிவளவனுடன் நட்புக் கொள்ளுதலை வேண்டி, கள் அவிழ் தாரோய்-தேன் பொருந்திய மலர் மாலையினை யுடையோய், கலத்தொடும் போகிக் காவிர்ப் படப்பை நன்னகர் புக்கேன-கலத்துடன் சென்று காவிரியின் பக்கத்ததாகிய புகார்நகரத்தை யடைந்தேன், மாதவன் அறவணன் இவள் பிறப்பு உணர்ந்தாங்கு ஓதினன் என்று - அறவண முனிவன் இவளது பிறப்பினை அறிந்தவாறு மொழிந்தனன் என்று, நான் அன்றே உரைத்தேன்-யான் மீண்டு வந்த அந் நாளிலேயே கூறினேன் ;
படப்பை - பக்கம்; தோட்டக்கூறுமாம். 1"காவிரிப் படப்பைப்பட்டினம்" என்றார் இளங்கோவடிகளும். தாரோய்! கெழுதகை வேண்டிப் போகி நன்னகர் புக்கேனாகியயான் அறவணன் இவள் பிறப்பு ஓதினன் என்று இவள் திறமெல்லாம் அன்றே யுரைத்தனன் என்க.
¹ சிலப். 15: 151.
26.4
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
20 ஆங்கவ ளிவளவ் வகனகர் நீங்கி
ஈங்கு வந்தன ளென்றலு மிளங்கொடி
நின்கைப் பாத்திர மென்கைப் புகுந்தது
மன்பெருஞ் செல்வத்து மயங்கினை யறியாய்
அப்பிறப் பறிந்திலை மாயினு மாவயிற்
றிப்பிறப் பறிந்திலை யென்செய் தனையோ
19
உரை
24
ஆங்கவள் இவள் அவ் அகல் நகர் நீங்கி-அவள் இந்நங்கையே அவ் வகன்ற்தினின்றும் நீங்கி, ஈங்கு வந்தனள் என்றலும்- ஈண்டு வந்திருக்கின்றனள் என வுரைத்தலும், இளங்கொடி-மணிமேகலை, நின்கைப் பாத்திரம் என் கைப் புகுந்தது - நினது கையிலிருந்த அமுதசுரபியே என் கையில் வந்தடைந்தது, மன்பெருஞ் செல்வத்து மயங்கினை அறியாய் - மிகப் பெருஞ் செல்வத்தால் மயங்கினையாகலின் நீ அதனை அறியாய், அப் பிறப்பு அறிந்திலை ஆயினும்-நினது முற்பிறப்பினை அறிந்திலாயேனும், ஆ வயிற்று இப்பிறப்பு அறிந்திலை என் செய்தனையோ - பசுவின் வயிற்றிலுதித்த இப் பிறப்பினையும் அறிந்திலையே என் செய்தனை ;
உரைப்போனாகிய கஞ்சுகன் 'ஈங்கு வந்தனள்' என்றலும் என்க. அப் பிறப்பு - முற்பிறப்பு; சாலி வயிற்றிற் பிறந்த பிறப்பு.
26.5
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
25 மணிப்பல் லவம்வலங் கொண்டா லல்லது
பிணிப்புறு பிறவியின் பெற்றியை யறியாள்
ஆங்கு வருவாய் அரசநீ யென்றப்
பூங்கமழ் தாரோன் முன்னர்ப் புகன்று
மையறு விசும்பின் மடக்கொடி யெழுந்து
25
உரை
29
மணிப்பல்லவம் வலங்கொண்டால் அல்லது - மணிபல்லவத் தின்கட் சென்று புத்த பீடிகையை வலம் வந்தாலன்றி, பிணிப்புறு பிறவியின் பெற்றியை அறியாய்-பற்றுக்களையுடைய பிறவியினது தன்மையை அறியாய் ஆகலின், ஆங்கு வருவாய் அரச நீ என்று-அரசனே நீ ஆண்டு வருவாயாக என்று, அப் பூங்கமழ் தாரோன் முன்னர்ப் புகன்று - மணங்கமழும் மாலையினையுடைய அம் மன்னவன் முன்னர்க் கூறி, மையறு விசும்பின் மடக்கொடி எழுந்து - இளங்கொடி களங்கமற்ற வானூடு எழுந்து ;
பிணிப்பு - பற்று, கட்டு. கமழ் பூந்தாரோன் என்க
26.6
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
30
35
வெய்யவன் குடபால் வீழா முன்னர்
வானின் றிழிந்து மறிதிரை யுலாவும்
பூநா றடைகரை யெங்கணும் போகி
மணிப்பல் லவம்வலங் கொண்டு மடக்கொடி
பிணிப்பறு மாதவன் பீடிகை காண்டலும்
தொழிதுவலங் கொள்ளவத் தூமணிப் பீடிகைப்
பழுதில் காட்சி தன்பிறப் புணர்த்தக்
30
உரை
36
வெய்யன் குடபால் வீழா முன்னர் - கதிரவன் மேற்றிசையிற் சென்று வீழ்வதன் முன்னம், வானின்று இழிந்து-விசும்பினின்றும் இறங்கி, மறி திரை உலாவும்-வளைந்த அலைகள் உலாவுகின்ற, பூநாறு அடைகரை எங்கணும் போகி - பூக்கள் மணம் வீசுகின்ற அடைகையெங்குஞ் சென்று, மணிப்பல்லவம் வலங்கொண்டு - மணிப்பல்லவத்தை வலம் வந்து, மடக்கொடி பிண்ப்பறு மாதவன் பீடிகை காண்டலும் - மணிமேகலை பற்றற்ற பெருந்தவனாம் புத்தனது பீடிகையைக் காண்டலும், தொழுது வலங்கொள்ள - வலம் வந்து வணங்க, அத் தூமணிப் பீடிகை-அவ் வழகிய தூய பீடிகையின், பழுது இல் காட்சி - குற்றமற்ற காட்சியானது, தன் பிறப்பு உணர்த்த - தனது பிறப்பினை அறிவிக்க;
அடைகரை - அணைந்துள்ள கரை. மடக்கொடி எழுந்து இழிந்து போகி வலங்கொண்டு காண்டலும், பீடிகைக் காட்சி உணர்த்த வென்க.
26.7
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
40
காயங் கரையெனும் பேரியாற் றடைகரை
மாயமின் மாதவன் றன்னடி பணிந்து
தருமங் கேட்டுத் தாள்தொழு தேத்திப்
பெருமகன் றன்னொடும் பெயர்வோர்க் கெல்லாம்
விலங்கு நரகரும் பேய்களு மாக்கும்
கலங்கஞர்த் தீவினை கடிமின் கடிந்தால்
தேவரு மக்களும் பிரமரு மாகுதிர்
ஆகலி னல்வினை யயரா தோம்புமின
37
உரை
44
காயங் கரையெனும் பேரியாற்று அடைகரை-காயங்கரை என்னும் பேராற்றின் அடைகரையிலுள்ள, மாயம் இல் மாதவன் தன்னடி பணிந்து, வஞ்சனையற்ற பெருந்தவனாகிய பிரமதருமன் திருவடிகளை வணங்கி, தருமம் கேட்டுத் தாள் தொழுது ஏத்தி- அறங்கேட்டு அடியிணை பணிந்து துதித்து, பெருமகன் தன்னொடும் பெயர்வோர்க்கு எல்லாம்-அரசனுடன் அவந்தி நகரஞ் செல்வோரனைவர்க்கும், விலங்கும் நரகரும் பேய்களும் ஆக்கும்- விலங்கினமும் நிரயவாணரும் பேய்களுமாகத் தோற்றுவிக்கும். கலங்கு அஞர்த் தீவினை கடிமின் - கலங்குதற்குக் காரணமாகிய துன்பத்தைத் தரும் தீவினைகளை நீக்குமின், கடிந்தால் - அவற்றை நீக்கினால், தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர்-வானவரும் மக்களும் பிரமரும் ஆவீர், ஆதலின் நல்வினை அயராது ஓம்புமின் - ஆதலின் நல்வினைகளை மறவாது பாதுகாத்திடுமின் ;
புத்த சமயத்திற் கூறப்படும் கதி ஆறாகுமென்பதும், அவற்றுள் மூன்று நல்வினையானும், மூன்று தீவினையானும் உளவாகும் என்பதும் 1 "அலகில் பல்லுயி ரறுவகைத் தாகும், மக்களும் தேவரும் பிரமரு நரகரும், தொக்க விலங்கும பேயு மென்றே, நல்வினை தீவினை யென்றிரு வகையாற், சொல்லப்பட்ட கருவிற் சார்தலும்" என இந்நூலுட் பின்பு கூறப்படுதலா னறிக. தீவினை - கொலை முதலியன. நல்வினை- கொல்லாமை முதலியன.
1 மணி. 30: 56-60.
26.8
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
45
50 புலவன் முழுதும் பொய்யின் றுணர்ந்தோன்
உலகுயக் கோடற் கொருவன் றோன்றும்
அந்நா ளவனறங் கேட்டோ ரல்லது
இன்னாப் பிறவி யிழுக்குந் ரில்லை
மாற்றாருங் கூற்றம் வருவதன் முன்னம்
போற்றுமி னறமெனச் சாற்றிக் காட்டி
நாக்கடிப் பாக வாய்ப்பறை யறைந்தீர
45
உரை
51
புலவன் முழுதும் பொய்யின்று உணர்ந்தோன் உலகுஉயக் கோடற்கு ஒருவன் தோன்றும்-பேரறிவுடையோனும் அனைத்தையும் வழுவின்று உணர்ந்தோனுமாகிய ஒருவன் உலகினை உய்யக் கொள்ளுமாறு உதித்தருள்வன், அந்நாள் அவன் அறம் கேட்டோர் அல்லது-அந்நாளிலே அவனுடைய அறமொழிகளைக் கேட்டோரை, யன்றி, இன்னாப் பிறவி இழுக்குநர் இல்லை-துன்பந்தரும் பிறவியினின்றும் தப்புவோர் எவரும் இல்லை ஆகலின், மாற்றருங் கூற்றம் வருவதன் முன்னம்-பிறரால் தடுத்தற்கரிய கூற்றுவன் வருவதற்கு முன்னரே, போற்றுமின் அறம் எனச் சாற்றிக்காட்டி-அறம்புரிவீராக என்று விளங்க எடுத்துரைத்து, நா கடிப்பாக வாய்ப்பறை அறைந்தீர்-நாவே குறுந்தடியாக வாயாகிய பறையை அறைந்தீர்: புலவன்-ஞானி புத்தன் என்பதும் இப்பொருட்டு. இனி, புலவன்- இயற்கை யறிவுடையவன் என்றுமாம். உணர்ந்தோன் ஒருவன் தோன்று மென்க. அவன் அறம் - அவன் கூறும் அறம். கூற்றுவன் எதனாலும் தடுத்தற்கரியன் என்பது, 1 "மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமையும்" 2 "மருந்தில் கூற்றத் தருந்தொழில்" எனப் பிற சான்றோர் கூறுமாற்றானு மறிக - அறைந்து சாற்றிக் காட்டினீர் என விகுதி பிரித்துக் கூட்டுக. மாதவன் றன்னடி பணிந்து பெயர்வோர்க்கெல்லாம் வாய்ப்பறை அறைந்தீர் என இடமும் பாலும் மயங்கியுள்ளன; 'மாதவ நின்னடி' எனப் பாடங் கொள்ளுதல் தக்கது.
1 தொல். புறத்திணை. 24. 2 புறம். 3.
26.9
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
55
அவ்வுரை கேட்டுநும் மடிதொழு தேத்த
வெவ்வுரை யெங்கட்கு விளம்பினி ராதலின்
பெரியவன் றோன்று முன்னரிப் பீடிகை
கரியவ னிட்ட காரணந் தானு
மன்பெரும் பீடிகை மாய்ந்துயிர் நீங்கிய
என்பிறப் புணர்த்தலு மென்னென் றியான்தொழ
52
உரை
57
அவ்வுரை கேட்டு நும் அடி தொழுது ஏத்த-அவ்வற மொழிகளைக் கேட்டு யாம் நும் திருவடிகளை வணங்கித் துதிக்க, வெவ்வுரை எங்கட்கு விளம்பினிர் ஆதலின்-நீர் எங்கட்குத் துன்பந்தரும் மொழிகளைக் கூறியருளினீர் ஆதலின், பெரியவன் தோன்றுமுன்னர் - புத்தன் தோன்றுதற்கு முன்னரே, இப்பீடிகை கரியவன் இட்ட காரணம் தானும்-இப் பீடிகையை இந்திரன் ஈண்டு இட்ட காரணமும், மன்பெரும் பீடிகை - பெருமைமிக்க இப்பீடிகை, மாய்ந்து உயிர் நீங்கிய என் பிறப்பு உணர்த்தலும்-யாக்கையினின்றும் உயிர் நீங்கி மறைந்த எனது முற் பிறப்பினை உணர்த்தற்குக் காரணமும், என் என்று யான் தொழ - என்னையென்று யான் வணங்க;
வெவ்வுரை-பதினாறு நாளில் இராகுலன் நச்சுவிழி யரவால் உயிர் துறப்பான், நீ அவனுடன் தீயில் மூழ்குவை என்னும் மொழி. இதனை இந்நூல்க ஆம் காதையா னறிக.
26.10
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
60
65
முற்ற வுணர்ந்த முதல்வனை யல்லது
மற்றப் பீடீகை தன்மிசைப் பொறாஅது
பீடிகை பொறுத்த பின்ன ரல்லது
வானவன் வணங்கான் மற்றவ் வானவன்
பெருமகற் கமைத்துப் பிறந்தார் பிறவியைத்
தரும பீடிகை சாற்றுக வென்றே
அருளின னாதலி னாயிழை பிறவியும்
இருளறக் காட்டு மென்றெடுத் துரைத்தது
அன்றே போன்ற தருந்தவர் வாய்மொழி
இன்றெனக் கென்றே யேத்தி வலங்கொண்டு
ஈங்கிவ ளன்னண மாக விறைவனும்
58
உரை
68
. முற்ற உணர்ந்த முதல்வனை அல்லது - எல்லா மறிந்த இறைவனையன்றி, மற்று அப்பீடிகை தன்மிசைப் பொறாஅது - வேறெவரையும் அப்பீடிகை தன்மீது தாங்காது, பீடிகை பொறுத்தபின்னர் அல்லது-அப்பீடம் அறவோன் அடியிணையைத் தாங்கியபின்னரேயன்றி, வானவன் வணங்கான்-இந்திரன் அதனை வணங்கான், மற்று அவ்வானவன்-அவ்விண்ணவன், பெருமகற்கு. அமைத்து-புத்தனை அறிந்து கொள்ளும்பொருட்டு இயற்றி, பிறந்தார் பிறவியை - பிறந்தோர்களுடைய பழம்பிறப்பின் செய்தியை, தரும பீடிகை சாற்றுக என்றே அருளினன் ஆதலின் - இத் தரும பீடிகை உணர்த்துக என ஆணைதந்தனன் ஆதலின், ஆயிழை பிறவியும் இருளறக்காட்டும் என்று எடுத்து உரைந்து-நின் பிறவியினையும் மயக்கமறக்காட்டும் என்று எடுத்துக் கூறியதாகிய, அன்றே போன்றது அருந்தவர் வாய்மொழி இன்று எனக்கு என்றே ஏத்தி வலங்கொண்டு-அன்றுரைத்த நுமது வாய்மொழி எனக்கு இன்று கூறினாற்போன்றது என்று துதித்து வலங்கொண்டு, ஈங்கிவள் இன்னணம் ஆக - இவ்விடத்து மணிமேகலை இப்படியிருக்க;
பெருமகற்கு அமைத்து - பெருமகன் எழுந்தருளுதற் பொருட்டமைத்து என்றுமாம். ஆயிழை, அருந்தவர் என்பன முன்னிலக்கண் வந்தன. உரைத்ததாகிய வாய்மொழி யென்க. வாய்மொழி இன்று எனக்கு அன்று நேரிலே கேட்டாற் போன்றது என்றுரைத்தலுமாம்
26.11
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
70
75
ஆங்கப் பொழில்விட் டகநகர் புக்குத்
தந்தை முனியாத் தாய்பசு வாக
வந்த பிறவியு மாமுனி யருளால்
குடர்த்தொடர் மாலை சூழா தாங்கோர
அடர்ப்பொன் முட்டையு ளடங்கிய வண்ணமும்
மாமுனி யருளான் மக்களை யில்லோன்
பூமிசந் திரன்கொடு போந்த வண்ணமும்
ஆய்தொடி யரிவை யமரசுந் தரியெனும்
தாய்வாய்க் கேட்டுத் தாழ்துய ரெய்தி
இறந்த பிறவியின் யாய்செய் ததூஉம
பிறந்த பிறவியின் பெற்றியு நினைந்து
68
உரை
79
இறைவனும் - புண்ணியராசனும், ஆங்கப் பொழில் விட்டு அகநகர் புக்கு - அச்சோலையை விட்டு நகரத்துள்ளே சென்று, தந்தை முனியா தாய் பசுவாக வந்த பிறவியும், தாதை முனிவனாகவும் தாய் பசுவாகவும் வந்த பிறவியையும், மாமுனி அருளால் குடர்த்தொடர் மாலை சூழாது - தவமுனிவன் திருவருளால் குடராகிய தொடர்மாலையாற் சுற்றப்படாமல், ஆங்கோர் அடர்ப்பொன் முட்டையுள் அடங்கிய வண்ணமும் - பசுவின் வயிற்றினுள்ளே பொற் றகட்டினலாய ஒரு முட்டையின்கண் அடங்கிய வண்ணத்தினையும், மாமுனி அருளால் மக்களை இல்லோன் பூமிசந்திரன் கொடுபோந்த வண்ணமும் - மக்கட்பே றில்லாதவனாகிய பூமிசந்திரன் முனிவர் திருவருளால் தன்னைக் கொணர்ந்த திறத்தினையும் ஆய்தொடி அரிவை அமரசுந்தரி என்கின்ற, தாய்வாய் கேட்டுத் தாழ்துயர் எய்தி - தாயினிடமாகக் கேட்டு அறிந்து மிக்க துன்பத்தை யடைந்து, இறந்த பிறவியின் யாய் செய்ததூஉம்-சென்ற பிறப்பின்கண் தாய் செய்த்தனையும், பிறந்த பிறவியின் பெற்றியும் நினைந்து - இப்பிறப்பின் இயல்பினையும் எண்ணி;
முனி - மண்முக முனிவன், 1 "மண்முக னென்னு மாமுனி யிடவயின்" என முன் வந்தமை அறிக. அடர்-தகடு. அமர சுந்தரி-பூமி சந்திரன் மனைவி. இறந்த பிறவியின் யாய்-அபஞ்சிகன் மனைவியாகியசாலி.
1 மணி. 15:4. .
26.12
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
80
85
90
செருவேன் மன்னர் செவ்விபார்த் துணங்க
அரைசுவீற் றிருந்து புரையோர்ப் பேணி
நாடகங் கண்டு பாடற் பான்மையில்
கேள்வி யின்னிசை கேட்டுத் தேவியர்
ஊடற் செவ்வி பார்த்துநீ டாது
பாடகத் தாமரைச் சீறடி பணிந்து
தேமரு கொங்கையிற் குங்கும மெழுதி
அங்கையிற் றுறுமலர் சுரிகுழற் சூட்டி
நறுமுகை யமிழ்துறூஉந் திருநகை யருந்தி
மதிமுகக் கருங்கட் செங்கடை கலக்கக்
கருப்பு வில்லி யருப்புக்கணை தூவத்
தருக்கிய காமக் கள்ளாட் டிகழ்ந்து
தூவறத் துறத்தல் நன்றெனச் சாற்றித
80
உரை
92
செருவேல் மன்னர் செவ்விபார்த்து உணங்க-போர் புரியும் வேற்படையினையுடைய வேந்தர் தம் குறை கூறுதற்கேற்ற காலத்தினை நோக்கி வாட, அரைசு வீற்று இருந்து புரையோர்ப்பேணி-பெரியோரை விரும்பித் துணைக்கொண்டு அரசு புரிந்து செம்மாந்திருந்து, நாடகம் கண்டு - நாடகத்தினைக் கண்டு, பாடற்பான்மையின் கேள்வி இன்னிசை கேட்டு, பாடுதன் முறைமையுடைய கேள்விபொருந்திய இனியிசையைக் கேட்டு, தேவியர் - மனைவியரின் ஊடற் செவ்வி பார்த்து - ஊடுஞ் செவ்வியை நோக்கி,நீடாது - அது நீட்டியாவாறு, பாடகத் தாமரைச் சீறடி பணிந்து- பாடகமணிந்துள்ள தாமரை மலரைப் போன்ற சிறிய அடிகளை வணங்கி, தேமரு கொங்கையில் குங்குமம் எழுதி-அழகிய கொங்கைகளில் குங்குமக் குழம்பால் எழுதி, அங்கையில் துறுமலர் சுரிகுழல் சூட்டி - நெருங்கிய மலர்களை அழகிய கையினால் சுரிந்த கூந்தலின் கண் சூட்டி, நறுமுகை அமிழ்து உறூஉந் திருநகை அருந்தி-நறிய முகிழ்போலும் அழகிய பற்களிற் பொருந்திய அமிழ்தினையுண்டு, மதிமுகக் கருங்கண் செங்கடை கலக்க-திங்களனையமுகத்திலுள்ள கரிய கண்களின் சிவந்த கடை கலக்குறுத்த, கருப்பு வில்லி அருப்புக்கணை தூவ - கரும்பினை வில்லாகக்கொண்ட காமன் முகையறா மலராகிய அம்புகளைப் பொழிய, தருக்கிய காமக் கள்ளாட்டு இகழ்ந்து - செருக்குற்ற காமமாகிய கள்ளையுண்டு விளையாடும் விளையாட்டினை இகழ்ந்து, தூ அறத்துறத்தல் நன்று எனச் சாற்றிபற்றுக்கோடு இல்லையாகத் துறத்தல் நல்லது எனக் கூறி;
மன்னர் செவ்விபார்த்தலாவது தம் குறை கூறுதற் கேற்ற மனமொழி மெய்கள் இனியனாங் காலம் பார்த்தல். 1 "செவ்வி அறம்பார்க்கும்" என்புழிப் பரிமேலழகர் உரைத்தமை காண்க. புரையோர் - அறிவில் மேம்பட்ட அமைச்சர் புரோகிதர் முதலாயினர். கேள்வி - சுருதி. ஊடல்-கலவியின்பம் பற்றிப் புலத்தல்; அஃது அளவிற் பெருகலாகா தென்பதை, 2 "உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது, மிக்கற்றால் நீளவிடல்" என்பதனா லறிக. ஊடல் நீடாது பணிந்து எழுதிச் சூட்டி யென்க. திரு நகை உறும் அமிழ்து என மாறுக. உணங்க வீற்றிருந்து கண்டு கேட்டு அருந்தித் தருக்கிய காமக் கள்ளாட்டு என முடிக்க. துவரத் துறத்தல் என்னும் பாடத்திற்கு முற்றத் துறத்தல் என்று பொருள் கொள்க.
1 குறள். 130. 2 குறள். 1302.
26.13
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
95
தெளிந்த நாதனென் செவிமுத லிட்டவித்
தேத மின்றா யின்று விளைந்தது
மணிமே கலைதான் காரண மாகவென்
றணிமணி நீண்முடி யரசன் கூற
93
உரை
96
தெளிந்த நாதன் என் செவிமுதல் இட்ட வித்து-மெய்யுணர்வுடைய தருமசாவக முனிவன் எனது காதினிடம் விதைத்த வித்தானது. ஏதம் இன்றாய் இன்று விளைந்து மணிமேகலைதான் காரணமாக என்று - மணிமேகலை காரணமாகக் குற்றமின்றாய் இன்று விளைந்தது என்று, அணிமணி நீள்முடி அரசன் கூற - தொன்று தொட்டுவந்த அழகிய மணிமுடியினையுடைய மன்னவன் மொழிய;
நீண்முடி - தொன்று தொட்டு வந்த முடி; குடியின் பழமையும் பெருமையும் கூறியபடி. அரசன் துயரெய்தி நினைந்து இகழ்ந்தது சாற்றிக்கூற வென்க.
26.14
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
100
மனம்வே றாயினன் மன்னென மந்திரி
சனமித் திரனவன் தாள்தொழு தேத்தி
எங்கோ வாழி யென்சொற் கேண்மதி
நுங்கோ னுன்னைப் பெறுவதன் முன்னாள்
பன்னீ ராண்டிப் பதிகெழு நன்னாடு
மன்னுயிர் மடிய மழைவளங் கரந்தீங்
கீன்றாள் குழவிக் கிரங்கா ளாகித்
தான்றனி தின்னுந் தகைமைய தாயது
97
உரை
104
மனம் வேறாயினன் மன் என மந்திரி சனமித்திரன் அவன் தாள் தொழுது ஏத்தி - அரசன் மனம் வேறுபட்டனன் என்று மந்திரயாகிய சனமித்திரன் மன்னவன் அடிகளை வணங் கித் துதித்து, எங்கோ வாழி என்சொல் கேண்மதி - எம்மிறைவனே வாழ்வாயாகஎன் மொழியினைக் கேள், நுங்கோன் உன்னைப் பெறுவதன் முன்னாள் - நுந் தந்தையாய பூமிசந்திரன் நின்னைப் பெறுவதற்கு முன்னர், பன்னீராண்டு இப் பதிகெழு நன்னாடு மன்னுயிர் மடிய மழைவளம் கரந்து-இந்நகரத்தினையுடைய நல்ல நாடு மிகுதியான உயிர்கள் இறக்குமாறு மழையாகிய செல்வம் பன்னீராண்டு மறைந்தமையால், ஈங்கு ஈன்றாள் குழவிக்கு இரங்காள் ஆகி-பெற்ற தாய் குழந்தைக்கு இரங்காதவளாய், தான் தனி தின்னும் தகைமையதாயது-தானே தனித்து உண்ணுந் தகுதியினை யுடைத்தாயிற்று;
மன் - அரசன். மதி; முன்னிலையசை, கரந்து -கரந்தமையால்என்க; கரந்து என்பதும் பாடம். நாடு - சாவக நாடு.
26.15
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
105 110
காய்வெங் கோடையிற் கார்தோன் றியதென
நீதோன் றினையே நிரைத்தா ரண்ணல்
தோன்றிய பின்னர்த் தோன்றிய வுயிர்கட்கு
வானம் பொய்யாது மண்வளம் பிழையாது
ஊனுடை யுயிர்க ளுறுபசி யறியா
நீயொழி காலை நின்னா டெல்லாம்
தாயொழி குழவி போலக் கூஉம
105
உரை
111
காய் வெங் கோடையில் கார் தோன்றியது என - எரிகின்ற வெப்பமிகுந்த கோடையில் கருமுகில் தோன்றினாற் போல, நீ தோன்றினையே நிரைத்தார் அண்ணல்-வரிசைப் படுத்திய மலர் மாலையினையணிந்த பெருந்தகாய் நீ தோன்றினையே, தோன்றிய பின்னர்த் தோன்றிய உயிர்கட்கு-நீ உதித்த பின் உலகில் உள்ள உயிர்களுக்கு, வானம் பொய்யது மண்வளம் பிழையாது - மழை பெய்தலிற் பொய்யாமையின் நிலவளம் பிழையாதாயிற்று, ஊனுடை உயிர்கள் உறுபசி அறியா-ஊனுடம்பினையுடைய உயிர்கள் மிக்க பசியை அறியாவாயின ஆகலின், நீயொழிகாலை நின்னாடு எல்லாம் தாயொழி குழவிபோலக் கூஉம்-நீ நீங்கிய காலத்துநினது நாடு முழுவதும் தாயற்ற சிறு குழந்தையைப்போல வாய்விட்ட ழைக்கும்;
செங்கோன் மன்னன் குடிகளுக்குத் தாய்போல்வான் என்பது ¹" தாயொக்கும் அன்பின்" என்பதனானு மறிக. "தாயொழி குழவி போலக் கூ.உம்' என்னுங் கருத்து ² "தாயில் தூவாக் குழவி போல, ஓவாது கூ.உம்" என்பதனோ டொத்திருத்தலுங் காண்க.
¹ கம்ப. பால. அரசியல். 4. ² புறம். 4.
26.16
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
115
துயர்நிலை யுலகங் காத்த லின்றிநீ
உயர்நிலை யுலகம் வேட்டனை யாயின்
இறுதி யுயிர்க ளெய்தவு மிறைவ
பெறுதி விரும்பினை யாகுவை யன்றே
தன்னுயிர்க் கிரங்கான் பிறவு யிரோம்பு
மன்னுயிர் முதல்வ னறமுமீ தன்றால்
மதிமா றோர்ந்தனை மன்னவ வென்றே
முதுமொழி கூற முதல்வன் கேட்டு
112
உரை
119
துயர்நிலை உலகம் காத்தல் இன்றி நீ-நீ துன்புறும் நிலையில் உள்ள உலகத்தினைப் பாதுகாத்தலின்றி, உயர்நிலை உலகம் வேட்டனையாயின்-முத்தியுலக மெய்துதலை விரும்பினையானால், இறுதி உயிர்கள் எய்தவும் இறைவ - அரசே! உயிர்கள் துன்புற்று மரணமடையவும், பெறுதி விரும்பினை ஆகுவை அன்றே - நீ நினக்கு ஊதியமாகிய நிருவாணத்தையே விரும்பினாயாவையன்றே, தன் உயிர்க்கு இரங்கான் பிறவுயிர் ஓம்பும் - தனது உயிர் துன்பத்தால் வருந்துதற்கு இரங்காமல் பிறவுயிர்களைப் பாதுகாக்கும், மன்னுயிர் முதல்வன் அறமும் ஈது அன்றால் - புத்த தேவனது அறமும் இதுவன்று ஆகலான், மதிமாறு ஓர்ந்தனை மன்னவ என்றே - மன்னவனே நீ மாறுபட்ட சிந்தனையைக் கடைப்பிடித்தனை என, முதுமொழி கூற முதல்வன் கேட்டு - அறிவுரைகளைக் கூறப் புண்ணியராசன் அதனைக் கேட்டு;
துயர் நிலை யுலகம் என்புழி உலகம் உயிர்களை யுணர்த்திற்று. உயர்நிலை யுலகம் - வீட்டுலகம்; ¹"உயர்நிலை யுலகமுஞ் சிறிது" என்பதுங் காண்க. பெறுதி - பேறு; ஊதியம். இரங்குதல் ஓம்புதல் என்னும் வினைகளை ஏனையிடத்துங் கூட்டி, இரங்கிக் காவாமல் என்றும் இரங்கிக் காக்குமென்றும் முறையே பொருள் கொள்க. முதுமொழி - அறிவு வாய்ந்த மொழி.
¹ குறுந். 361.
26.17
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
120
மணிபல் லவம்வலங் கொள்வதற் கெழுந்த
தணியா வேட்கை தணித்தற் கரிதால்
அரசு முரிமையு மகநகர்ச் சுற்றமும்
ஒருமதி யெல்லை காத்தனின் கடனெனக
120
உரை
123
மணிபல்லவம் வலங்கொள்வதற்கு எழுந்த-மணி பல்லவத்தினை யடைந்து வலம் வந்து வணங்குவேன் என்றெழுந்த, தணியா வேட்கை தணித்தற்கு அரிதால்-நீங்காத விருப்பமானது தணித்திட அரியதாகும் ஆகலின், அரசும் உரிமையும் அகநகர்ச்சுற்றமும் - அரசாட்சியையும் உரிமையையும் அகநகரிலுள்ள பரிசனங்களையும், ஒருமதி எல்லை காத்தல் நின் கடன் என - ஒரு திங்கள் அளவுங் காத்தல் நின்னுடைய கடமையாகும் என மொழிந்து;
உரிமை - அந்தப்புர மகளிர். அகநகர்ச் சுற்றம் - அகப் பரிவாரம்.முதலிய பரிசனங்கள்.
26.18
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
125
கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஉய்
இலங்குநீர்ப் புணரி யெறிகரை யெய்தி
வங்க மேறினன் மணிபல் லவத்திடைத்
தங்கா தக்கலஞ் சென்றுசார்ந் திறுத்தலும்
124
உரை
127
கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஉய்-மரக்கலத் தொழிலாளரை வருக என அழைத்துக்கொண்டு. இலங்கு நீர்ப் புணரி எறிகரை எய்தி - விளங்குகின்றி நீரினையுடைய கடல் அலைவீசுகின்ற கரையை அடைந்து, வங்கம் ஏறினன் - மரக்கலத்தின்கண் ஏறினன், மணிபல்லவத்திடைத் தங்காது அக்கலம் சென்று சார்ந்து இறுத்தலும்-அம் மரக்கலம் இடையே தங்காமற் சென்று மணிபல்லவத்தை அடைந்து தங்குதலும்;
கலம் செய் கம்மியர் - மரக்கல் மியற்றுந் தொழிலாளர்; மரக்கலத்தின்உறுப்புகள் சிதைவுழி அவற்றைச் செம்மை செய்தற்கு அவரையும் உடன்கொண்டு செல்வர்.
26.19
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
130
புரைதீர் காட்சிப் பூங்கொடி பொருந்தி
அரைசன் கலமென் றகமகிழ் வெய்திக்
காவலன் றன்னொடுங் கடற்றிரை யுலாவும்
தேமலர்ச் சோலைத் தீவகம் வலஞ்செய்து
பெருமகன் காணாய் பிறப்புணர் விக்குக்
தரும பீடிகை யிதுவெனக் காட்ட
128
உரை
133
புரைதீர் காட்சிப் பூங்கொடி பொருந்தி-குற்றமற்ற மெய்யறிவினையுடைய மணிமேகலை ஆண்டு எய்தி, அரைசன் கலம் என்று அகமகிழ்வு எய்தி - புண்ணியராசனது மரக்கலம் என்று அறிந்து உளமகிழ்ச்சியுற்று, காவலன் தன்னொடும் கடற்றிரை உலாவும் தேமலர்ச் சோலைத் தீவகம் வலஞ்செய்து - அரசனுடன் கடலில் அலைகள் உலாவுகின்றன. பொருந்திய மலர்ப்பொழிலையுடைய மணிபல்லவத்தை வலங்கொண்டு, பெருமகன் காணாய் பிறப்பு உணர்விக்கும் தரும பீடிகை இது எனக் காட்ட - அரச! முற்பிறப்பினை யறிவிக்கும் அறத்தவிசு ஈது காண்பாயாக என்று காட்ட; காவலன் றன்னொடும் வலஞ்செய்து பீடிகையைக்காட்ட வென்க.
26.20
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
135
வலங்கொண் டேத்தினன் மன்னவன் மன்னவற்கு
உலந்த பிறவியை யுயர்மணிப் பீடிகை
கையகத் தெடுத்துக் காண்போர் முகத்தை
மையறு மண்டிலம் போலக் காட்ட
134
உரை
137
வலங்கொண்டு ஏத்தினன் மன்னவன் - வேந்தன் அப்பீடிகையை வலம்வந்து துதித்தனன், மன்னவற்கு உலந்த பிறவியை உயர்மணிப் பீடிகை - உயரிய மணிகளானிழைக்கப்பட்ட அவ்வறத்தவிசு அரசனுக்குச் சென்று பிறப்பின்கண் நிகழ்ந்த செய்தியை, கையகத்து எடுத்துக் காண்போர் முகத்தை மையறு மண்டிலம் போலக் காட்ட-கையிலெடுத்துக் காண்போருடைய முகத்தைத் தெளிவாக்க் காண்பிக்கும் குற்றமற்ற கண்ணாடியைப்போல எடுத்துக்காட்ட; பீடிகை உலந்த பிறவியை மண்டிலம்போலக் காட்டவென்க.
26.21
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
140
145
150
155
என்பிறப் பறிந்தே ணென்னிடர் தீர்ந்தேன்
தென்றமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய்
மாரி நடுநாள் வயிறுகாய் பசியால்
ஆரிரு ளஞ்சா தம்பல மணைந்தாங்கு
இரந்தூண் வாழ்க்கை யென்பால் வந்தோர்க்கு
அருந்தூண் காணா தழுங்குவேன் கையின்
நாடுவறங் கூரினுமிவ் வோடுவறங் கூராது
ஏடா வழிய லெழுந்திது கொள்கென
அமுத சுரபி யங்கையிற் றந்தென்
பவமறு வித்த வானோர் பாவாய்
உணர்விற் றோன்றி யுரைப்பொரு ளுணர்த்தும்
அணிதிக ழவிரொளி மடந்தை நின்னடி
தேவ ராயினும் பிரம ராயினும்
நாமாசு கழூஉ நலங்கிளர் திருந்தடி
பிறந்த பிறவிகள பேணுத லல்லது
மறந்து வாழேன் மடந்தையென் றேத்தி
மன்னவன் மணிமே கலையுட னெழுந்து
தென்மேற் காகச் சென்று திரையுலாங்
கோமுகி யென்னும் பொய்கையின் கரையோர்
தூமலர்ப் புன்னைத் துறைநிழ லிருப்ப
138
உரை
157
என் பிறப்பு அறிந்தேன் என் இடர் தீர்ந்தேன் - எனது முற்பிறப்பினை உணர்ந்தேன் னது இடுக்கணினின்றும் நீங்கினேன், தென்றமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய் - தென்றமிழ் மதுரையின்கணுள்ள அழகு மிக்க கலைமகளே, மாரிநடுநாள் வயிறு காய் பசியால்-மாரிக்காலத்து நள்ளிரவில் வயிற்றினைக் காய்கின்ற பெரும்பசியினாலே, ஆரிருள் அஞ்சாது அம்பலம் அணைந்தாங்கு இரந்தூண் வாழ்க்கை என்பால் வந்தோர்க்கு - செறிந்திருக்கின்ற இருளையும் அஞ்சாதவராய் அம்பலத்தை அடைந்து இரந்துண்ணும் உணவையே பொருளாகவுடைய என்னிடம் வந்தவர்கட்கு, அருந்து ஊண் காணாது அழுங்குவேன் கையில் - உண்பதற்குரிய உணவொன்றையும் காணாமல் வருந்துவேனுடைய கைகளில், நாடு வறங் கூரினும் இவ்வோடு வறங்கூராது ஏடா அழியல் எழுந்து இது கொள்கென - ஏடா வருந்தற்க நாடெங்கும் மழையின்றி வறுமையுற்றாலும் இந்த வோடு வறுமையுறாது ஆகலின் நீ எழுந்து இதனைக் கொள்வாயாக என்று கூறி, அமுதசுரபி அங்கையில் தந்து என் பவம் அறுவித்த வானோர் பாவாய் - அமுதசுரபி என்னும் அரும்பெறற் பாத்திரத்தை எனது கையின்கண் கொடுத்தருளி என்னுடைய வினைத்தொடர்புகளை அறுவித்த இமையோர் பாவையே, உணர்வில் தோன்றி உரைப்பொருள் உணர்த்தும்- அறிவின்கண்ணே தோன்றிச் சொற்பொருள்களை உணர்த்தியருளும், மணிதிகழ் அவிரொளி மடந்தை - பளிக்குமணி போல விளங்குகின்ற ஒளிவிடும் திருமேனியையுடைய தேவியே, நின்அடி- நின்திருவடிகளை, தேவராயினும் பிரமராயினும் அவர்தம் நாமாசு கழூஉம் நலங்கிளர் திருந்தடி - தேவராயினும் பிரமராயினும் அவர் தம் நாக்குற்றத்தினைப் போக்கும் சிறப்புமிக்க திருந்திய அடிகளை, பிறந்த பிறவிகள் பேணுதல் அல்லது - யான் பிறக்கின்ற பிறவி கள்தோறும் உளத்திற்கொண்டு வழிபடலல்லது, மறந்து வாழேன் மடந்தை என்று ஏத்தி-மறந்து உயிர்வாழேன் மெல்லியால் எனத் துதித்து, மன்னவன் மணிமேகலையுடன் எழுந்து - அரசன் மணி மேகலையுடன் அங்கு நின்றும் எழுந்து, தென்மேற்காகச் சென்று- தென்மேற்றிசையின் கட்சென்று, திரைஉலாம் - அலைகள் உலாவுகின்ற, கோமுகி என்னும் பொய்கையின் கரை - கோமுகி என்ற வாவியின் கரையில், ஓர் தூமலர்ப் புன்னைத் துறை நிழல் இருப்பதுறையினருகே தூய மலர்களையுடைய ஒரு புன்னைமர நிழலின்கண் இருப்ப;
பீடிகையாற் பழம் பிறப்பை யணர்ந்த புண்ணியராசன் சென்றபிறப்பிலே மதுரையிற் கலைநியமத்தில் சிந்தாதேவி அமுதசுரபியைத் தனக்கு அளித்ததனை அறிந்தானாகலின் அத்தேவியைப் பரவுகின்றான். இங்ஙனம் அவன் அமுதசுரபி பெற்ற வரலாற்றினை மேலே பாத்திர மரபு கூறிய காதையில் அறிக. ஏடா: கெழுதகைச் சொல், பவம் - கன்மக் கூட்டம். நின்னடி, நலங்கிளர் திருந்தடி என ஒருபொருண் மேல் அடுக்கிவந்தன. கழூஉம்-போக்கும். பிறவிகள் - பிறவிகடோறும், மன்னவன் ஏத்தி எழுந்து சென்று கரையில் நிழலில் இருப்பவென்க. என்னிடர் தீர்த்த; ஏடா பரியல்; என்பனவும் பாடம்.
26.22
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
160 165
ஆபுத் திரனோ டாயிழை யிருந்தது
காவற் றெய்வதங் கண்டுவந் தெய்தி
அருந்துயிர் மருந்துமுன் னங்கையிற் கொண்டு
பெருந்துயர் தீர்த்தவப் பெரியோய் வந்தனை
அந்நாள் நின்னை யயர்த்துப் போயினர்
பின்னாள் வந்துநின் பெற்றிமை நோக்கி
நின்குறி யிருந்து தம்முயிர் நீத்தோர்
ஒன்பது செட்டிக ளுடலென் பிவைகாண்
ஆங்கவ ரிடவுண் டவருடன் வந்தோர்
ஏங்கிமெய் வைத்தோ ரென்பு மிவைகாண்
158
உரை
167
ஆபுத்திரனோடு ஆயிழை இருந்தது காவற்றெய்வதம் கண்டு உவந்து எய்தி - ஆபுத்திரனுடன் மணிமேகலை கோமுகிக் கரையில் இருந்தனை மணிபல்லவத்தின் காவற்றெய்வமாகிய தீவ திலகை கண்டு மகிழ்ச்சியுடன் ஆண்டு அடைந்து, அருந்து உயிர் மருந்து முன் அங்கையில் கொண்டு - முற்பிறப்பில் உண்ணப்படும் அரிய உயிர் மருந்தினைக் கையகத்திற்கொண்டு, பெருந்துயர் தீர்த்த அப் பெரியோய் வந்தனை-உயிர்களின் பெரிய துன்பத்தை நீக்கிய பெரியோய் ஈண்டு வந்தாய், அந்நாள் நின்னை அயர்த்துப் போயினர்-அந்நாளில் நின்னை இங்குவிட்டு மறந்நு சென்றோர்கள், பின்னாள் வந்து நின் பெற்றிமை நோக்கி - பின்னாட்களில் ஈண்டு வந்து நின் தன்மையைக் கண்டு, நின்குறி இருந்து தம்முயிர் நீத்தோர் -நீ இறந்தவிடத்தில் உண்ணாநோன்புடனிருந்து தம் உயிரை விட்டோராகிய, ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவைகாண் ஒன்பது வணிகர்களின் உடல் எலும்புகளாகிய இவற்றைக் காண்பாயாக, ஆங்கு அவர் இட உண்டு அவருடன் வந்தோர் ஏங்கி மெய் வைத்தோர் என்பும் இவைகாண் - அச் செட்டிகள் உணவளிக்க உண்டு அவர்களுடன் வந்தோர்கள் ஏக்கமுற்று உயிர் நீங்கினோர்களுடைய என்புகளாகிய இவற்றையுங் காண்பாயாக;
ஆபுத்திரனோடு மணிமேகலை இருந்ததனைக் கண்டு அடைந்த தீவதிலகை முறைய அவ்விருவரையும் நோக்கிப் பின்வருமாறு கூறுவதாயிற்று. கண்டு வந்தெய்தி என்று பிரித்தலுமாம். உயிர் மருந்து-சோறு. அப் பெரியோய் - அத்தகு பெரியோய் குறி - இடம். போயினர், நீத்தோர், வந்தோர், வைத்தோர் வினைப்பெயர்கள். போயினவர் வந்து நீத்தார்; அங்ஙனம் நீத்தவராகிய செட்டிகள் எனவும், வந்தோராகிய வைத்தோருடைய என்பு எனவும் கொள்க.
26.23
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
170
ஊர்திரை தொகுத்த வுயர்மணல் புதைப்ப
ஆய்மலர்ப் புன்னை யணிநிழற் கீழால்
அன்புடை யாருயி ரரசற் கருளிய
என்புடை யாக்கை யிருந்தது காணாய்
168
உரை
171
ஊர் திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப-பரந்த அலைகளால் திரட்டப்பட்ட உயர்ந்த மணல் மறைப்ப, ஆய்மலர்ப்புன்னை அணிநிழற் கீழால் - அழகிய பூக்களையுடைய புன்னை மரத்தின் அழகிய நிழலின் கீழிடமத்தே, அன்புடை ஆருயிர் அரசர்க்கு அருளிய என்புடை யாக்கை இருந்தது காணாய் - அன்பினையுடைய அரியவுயிரை அரசனாகிய நினக்குக் கொடுத்த என்பினாலாகிய யாக்கை இருக்கின்றதைப் பாராய்; கீழால்: உருபு மயக்கம். ஆருயிர் என்றது விஞ்ஞான கந்தத்தை. அரசற்கு: முன்னிலையிற் படர்க்கை
26.24
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
நின்னுயிர் கொன்றாய் நின்னுயிர்க் கிரங்கிப்
பின்னாள் வந்த பிறருயிர் கொன்றாய்
கொலைவ னல்லையோ கொற்றவ னாயினை
172
உரை
174
நின் உயிர் கொன்றாய் - நீ நின் உயிரையுங் கொன்றனை, நின் உயிர்க்கு இரங்கி - நினது உயிருக்கு இரக்கமுற்று, பின்னாள் வந்த பிறர் உயிர் கொன்றாய் - பின்னாளில் ஈண்டுவந்த ஏனோரின் உயிரையுங் கொன்றனை, கொலைவன் அல்லையோ கொற்றவன் ஆயினை-அங்ஙனம் கொலைஞனாகவுள்ள நீ யல்லயோ அரசனாயினை என்று கூறி;
நின் உயிர்க்கு - நின்னுயிர் கழிந்தமைக்கு. பிறர் உயிர் விடுதற்குக்காரணமானமையின் 'பிறருயிர் கொன்றாய்' என்றது. இது பழிப்பது போலப் புகழ்தலின் வஞ்சப் புகழ்ச்சி யென்னும் அணியாகும்.
26.25
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
175
பலர்தொழு பாத்திரங் கையி னேந்திய
மடவரல் நல்லாய் நின்றன மாநகர்
கடல்வயிறு புக்கது காரணங் கேளாய்
175
உரை
177
பலர் தொழு பாத்திரம் கையின் ஏந்திய-பலரும் வணங்குந் தகுதியுடைய அமுதசுரபியைக் கையில் ஏந்தியுள்ள, மடவால் நல்லாய் - மடப்பம் பொருந்திய மெல்லியலே, நின்றன் மாநகர் - நின்னுடைய பெரிய நகரம், கடல் வயிறு புக்கது - கடலின் வயிற்றிற் புகுந்தது, காரணம் கேளாய்-அதன் காரணத்தைக் கேட்பாயாக; மாநகர் - காவிரிப்பூம் பட்டினம்.
26.26
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
180
நாக நன்னா டாள்வோன் றன்மகள்
பீலிவளை யென்பாள் பெண்டிரின் மிக்கோள்
பனிப்பகை வானவன் வழியிற் றோன்றிய
புனிற்றிளங் குழவியொடு பூங்கொடி பொருந்தியித்
தீவகம் வலஞ்செய்து தேவர்கோ னிட்ட
மாபெரும் பீடிகை வலங்கொண் டோத்துழிக்
178
உரை
183
நாகநன்னாடு ஆள்வோன்தன் மகள் பீலிவளையென்பாள் பெண்டிரின் மிக்கோள்-நாகநன்னாட் டரசன் புதல்வியாகிய மகளிருள் எழில் மிகுந்தோளாய பீலிவளை என்பவள், பனிப்பகை வானவன் வழியில் தோன்றிய - ஞாயிற்றுப் புத்தேள் மரபில் உதித்த, புனிற்றிளங் குழவியோடு பூங்கொடி பொருந்தி - மிக்க இளமையுடைய குழவியுடன் அவளும் வந்து, இத் தீவகம் வலஞ்செய்து - இத் தீவினை வலம் வந்து, தேவர்கோன் இட்ட மாபெரும் பீடிகை வலங்கொண்டு ஏத்துழி-இந்திரனா லிடப்பட்ட பெருமை பொருந்திய இவ் வறத் தவிசினை வலஞ்செய்து துதிக்கும்பொழுது;
ஆள்வோன் - வளைவணன். பீலிவளை யென்பாளாகிய பூங்கொடிகுழவியொடு பொருந்தி யென்க.
26.27
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
185 190
கம்பளச் செட்டி கலம்வந் திறுப்ப
அங்கவன் பாற்சென் றவன்றிற மறிந்து
கொற்றவன் மகனிவன் கொள்கெனக் கொடுத்தலும்
பெற்ற வுவகையன் பெருமகிழ் வெய்திப்
பழுதில் காட்சிப் பைந்தொடி புதல்வனைக்
தொழுதனன் வாங்கித் துறைபிறக் கொழியசக்
கலங்கொண்டு பெயர்ந்த வன்றே காரிருள்
இலங்குநீ ரடைகரை யக்கலங் கெட்டது
184
உரை
191
கம்பளச்செட்டி கலம் வந்திறுப்ப - கம்பளச் செட்டியினுடைய மரக்கலம் ஈண்டுவந்து தங்க, அங்கவன்பாற் சென்று அவன் திறம் அறிந்து-அவ் வணிகனிடம் போய் அவன் காவிரிப்பூம் பட்டினஞ் செல்லுதலை அறிந்து, கொற்றவன் மகன் இவன் கொள் கெனக் கொடுத்தலும்-இவன் அரசன் புதல்வன் இவனைக்கொண்டு செல்க என்று கொடுத்தலும், பெற்ற உவகைநன் பெருமகிழ் வெய்தி - உவகைமிக்குடையனாய அவ் வணிகன் அப் புதல்வனைப் பெற்றதனாற் பெருமகிழ்ச்சி யுற்று, பழுதில் காட்சிப் பைந்தொடி புதல்வனை - பீலிவளை தன் குற்றமற்ற காட்சியினையுடைய அப் புதல்வனை, தொழுதனன் வாங்கி - வணங்கி வாங்கிக்கொண்டு, துறை பிறக்கு ஒழிய - இக் கடற்றுறை பின்னொழியுமாறு, கலங்கொண்டு பெயர்ந்த அன்றே - மரக்கலத்திற் கொண்டுசென்ற அன்றைக்கே, கார் இருள் - நள்ளிரவின் இருளில், இலங்குநீர் அடைகரை அக் கலங் கெட்டது - விளங்குகின்ற நீரினையுடைய கரையருகில் அவ் வங்கங் கவிழ்ந்தது;
கம்பளச் செட்டி, பெயர்; கம்பள வாணிகஞ் செய்யும் செட்டியுமாம்.அரசகுமாரனாகலின் தொழுது வாங்கினான் என்க. பிறக்கு - பின். கெட்டது - சிதைந்தது என்றுமாம்.
26.28
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
195 200
கெடுகல மாக்கள் புதல்வனைக் கெடுத்தது
வடிவேற் கிள்ளி மன்னனுக் குரைப்ப
மன்னவன் மகனுக் குற்றது பொறாஅன்
நன்மணி யிழந்த நாகம் போன்று
கானலுங் கடலுங் கரையுந் தேர்வுழி
வானவன் விழாக்கோள் மாநக ரொழிந்தது
மணிமே கலாதெய்வம் மற்றது பொறாஅள்
அணிநகர் தன்னை யலைகடல் கொள்கென
விட்டனள் சாபம் பட்ட திதுவால்
192
உரை
200
கெடுகல மாக்கள் - அழிந்த மாக்கலத்திலிருந்து மீண்டோர், புதல்வனைக் கெடுத்தது-அரசகுமாரனை இழந்த செய்தியை, வடிவேற்கிள்ளி மன்னனுக்கு உரைப்ப - கூரிய வேலினையுடைய கிள்ளியாகிய அரசனுக்கு மொழிய, மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன்-வேந்தன் புதல்வனுக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறாதவனாய், நன்மணி இழந்த நாகம் போன்று - நல்ல மாணிக்கத்தை இழந்த பாம்பைப்போல வருந்தி, கானலும் கடலும் கரையும் தேர்வுழி -கடற் கானலிலும் கடலிலும் கடற்கரையிலும் தேடிக்கொண்டிருக்குமிடத்து, வானவன் விழாக்கோள் மாநகர் ஒழிந்தது - காவிரிப்பூம்பட்டினம் இந்திரவிழா வெடுத்தலை ஒழிந்தது, மணிமேகலா தெய்வம் மற்றது பொறாஅள்-மணிமேகலா தெய்வம் அக்குற்றத்தினைப் பொறாமல், அணிநகர்தன்னை அலைகடல் கொள்கென இட்டனள் சாபம் - அழகிய நகரத்தை அலைகள் செறிந்த கடல்கொள்வதாக என்று சாபமிட்டனள், பட்டது இதுவால் - கடல் கோள் நேர்ந்த செய்தி இதுவாகும்;
1 'நன்மணி இழந்த நாகம்போன்று' என்னும் இவ் வுவமை முன்னரும் இந்நூலுட் போந்தமை காண்க. காரணங்கேளாய் இட்டனள் சாபம் பட்டது இது என ஒட்டுக.
¹ மணி. 7: 131.
26.29
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
205
கடவுண் மாநகர் கடல்கொளப் பெயர்ந்த
வடிவேற் றடக்கை வானவன் போல
விரிதிரை வந்து வியனகர் விழுங்க
ஒருதனி போயின னுலக மன்னவன்
அருந்தவன் றன்னுட னாயிழை தாயரும்
வருந்தா தேகி வஞ்சியுட் புக்கனர்
பரப்புநீர்ப் பௌவம் பலர்தொழக் காப்போள்
உரைத்தன கேட்க வுருகுவை யாயினின்
201
உரை
208
கடவுள்மாநகர் கடல்கொளப் பெயர்ந்த வடிவேல் தடக்கை வானவன்போல-பெருமை-பொருந்திய தனது தேவ நகரம் கடல் கோட்பட ஆண்டுநின்றும் நீங்கிய கூரிய வச்சிரப் படை பொருந்திய பெரிய கையையுடைய இந்திரன்போல், விரிதிரை வந்து வியன் நகர் விழிங்க - விரிகின்ற அலைகளையுடைய கடல்வந்து தனது அகன்ற நகரத்தை விழிங்க, ஒருதனி போயினன் உலக மன்னவன்- உலக மன்னவனாகிய நெடுமுடிக்கிள்ளி அங்கிருந்து துணையின்றிச் சென்றனன், அருந்தவன் தன்னுடன் ஆயிழை தாயரும் - அரிய தவமுடைய அறவண வடிகளுடன் நின் தாயாராகிய மாதவியுஞ் சுதமதியும், வருந்தாது ஏகி வஞ்சியுட் புக்கனர் - வருத்தம் ஒன்று மின்றிச் சென்று வஞ்சி நகரம் புகுந்தனர், பலப்புநீர்ப் பௌவம் பலர் தொழக் காப்போள் உரைத்தன - பரந்த நீரினையுடைய கடலைப் பலரும் வணங்குமாறு காக்கின்ற மணிமேகலா தெய்வத்தால் இவை எனக்கு உரைக்கப்பட்டன; "கடவுண்மாநகர்......வானவன்போல" என்றது இல்பொருளுவமம்;
"¹வளமலர்ப் பூம்பொழில் வானவர் மகளிரொடு
விளையாட்டு விரும்பிய விறல்வேல் வானவன்
பொலம்பூங் காவும் புனல்யாற்றுப் பரப்பும்
இலங்குநீர்த் துருத்தியும் இளமரக் காவும்
அரங்கும் பள்ளியும் ஒருங்குடன் பரப்பி
ஒருநூற்று நாற்ப தியோசனை விரிந்த
பெருமால் களிற்றுப் பெயர்வோன் போன்று"
என உவமங் கூறியிருத்தலும் ஈண்டு அறியற்பாலது.
¹ சிலப். 25: 106.
26.30
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
210
உரைத்தன கேட்க வுருகுவை யாயினின்
மன்னுயிர் முதல்வனை மணிமே கலாதெய்வம்
முன்னா ளெடுத்தது மந்நர் ளாங்கவன்
அறவர சாண்டது மறவணன் தன்பால்
மறுபிறம் பாட்டி வஞ்சியுட் கேட்பையென்று
அந்தரத் தீவகத் தருந்தெய்வம் போயபின்
208
உரை
213
கேட்க உருகுவையாயின் - இன்னும் கேட்க விரும்பினையாயின், நின் மன்னுயிர் முதல்வனை - நின் தந்தை மரபில் முந்தை யோனாய ஒரு வணிகனை, மணிமேகலா தெய்வம் முன்னாள் எடுத்ததும் - மணிமேகலை தெய்வம் மரக்கலமுடைந்த நாளில் கடலினின்றும் எடுத்துக் காப்பாற்றியதும், அந்நாள் ஆங்கவன் - அந்நாளில் அவ்வணிகன், அறவரசாண்டதும்-புண்ணியதானஞ் செய்தனையும், அறவணன் தன்பால் - அறவண அடிகளிடம், மறுபிறப் பாட்டி வஞ்சியுட் கேட்பை என்று-மறுபிறப் புணர்ந்தோளாகிய நீ வஞ்சி நகரத்தின்கண் கேட்டுணர்வை என்று கூறி, அந்தரத் தீவகத்து அருந்தெய்வம் போயபின் - மணிபல்லவத் தீவினுட் காவல்புரியும் அரிய தெய்வமாகிய தீவதிலகை சென்றபின்னர்;
உயிர் என்றது குடியை உணர்த்திற்று. அறவரசு - புண்ணிய தானம். மறுபிறப்பாட்டி-மறுபிறப்பினை அறியும் பெற்றியள். அந்தரத் தீவு - சிறு தீவு.
26.31
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
215 220
மன்னவ னிரங்கி மணிமே கலையுடன்
துன்னிய தூமண லகழத் தோன்றி
ஊன்பிணி யவிழவு முடலென் பொடுங்கித்
தான்பிணி யவிழாத் தகைமையை தாகி
வெண்சுதை வேய்ந்தவ ணிருக்கையி னிருந்த
பண்புகொள் யாக்கையின் படிவ நோக்கி
மன்னவன் மயங்க மணிமே கலையெழுந்து
214
உரை
220
மன்னவன் இரங்கி-அரசன் வருத்தமுற்று, மணிமேகலையுடன் துன்னிய தூமணல் அகழ-மணிமேகலையுடன் புன்னை நீழலில் நெருங்கிய தூய மணலைத் தோண்ட; தோன்ற - வெளிப்பட்டு, ஊன்பிணி அவிழவும் உடல்என்பு ஒடுங்கித்தான்பிணி அவிழாத் தகைமையதாகி-தசையினது பிணிப்பு நீங்கவும் யாக்கையின் எலும்புகள் ஒடுக்கமுற்றுத் தான் கட்டவிழாத தன்மையுடையதாய், வெண்சுதை வேய்ந்து அவண் இருக்கையின் இருந்த பண்புகொள் யாக்கையின் படிவம் நோக்கி - வெள்ளிய சுண்ணத்தினால் வேயப்பட்டு அவ்விடத்து இருத்தலைப் போன்றிருந்த மாண்புமிக்க முற்பிறப்பின் வடிவத்தைப் பார்த்து, மன்னவன் மயங்க - புண்ணிய ராசன் கலக்க மெய்த;
தூ - தூய்மை. பிணி - கட்டு. தோன்றித் தகைமயதாகி இருந்தயாக்கையின் படிவமென்க.
26.32
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
220
225
230
மன்னவன் மயங்க மணிமே கலையெழுந்து
என்னுற் றனையோ விலங்கிதழ்த் தாரோய்
நின்னா ட்டைந்தியான் நின்னையீங் கழைத்தது
மன்னா நின்றன் மறுபிறப் புணர்த்தி
அந்தரத் தீ்வினு மகன்பெருந் தீவினும்
நின்பெயர் நிறுத்த நீணில மாளும்
அரசர் தாமே யருளறம் பூண்டால்
பொருளு முண்டோ பிறபுரை தீர்த்தற்கு
அறமெனப் படுவ தியாதெனக் கேட்பின்
மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியு முடையு முறையுளு மல்லது
கண்ட தில்லெனக் காவல னுரைக்கும்
220
உரை
231
மணிமேகலை எழுந்து - மணிமேகலை உடனே எழுந்து, என்னுற்றனையோ இலங்கிதழ்த் தாரோய் - விளங்குகின்ற இதழ்கள் பொருந்திய மலர்மாலையினையுடைய மன்னவனேநீ என்ன துன்பம் எய்தினையோ, நின்நாடு அடைந்து யான் நின்னைஈங்கு அழைத்தது - யான் நின்நாட்டினை யடைந்து நின்னை இத் தீவிற்கு அழைத்தது, மன்னா நின்றன் மறுபிறப்பு உணர்த்தி - அரசே நின்னுடைய பழம் பிறப்பினை நினக்கு அறிவித்து, அந்தரத் தீவினும் அகன்பெருந் தீவினும் நின்பெயர் நிறுத்த-இரண்டாயிரஞ் சிற்றிடைத் தீவுகளிலும் நான்கு பெருந் தீவுகளிலும் நினது புகழை நிலைபெறுத்துவதற்கே யாகும், நீணிலமாளும் அரசர் தாமே அருளறம் பூண்டால்- பெரிய நிலவுலகினை ஆள்வோராகிய அரசர்களே அருளாகியஅறத்தினை, மேற்கொண்டால் பொருளும் உண்டோ பிற புரை தீர்த்தற்கு - உலகில் குற்றந் தீர்த்தற்குப் பொருளும் உண்டோ, அற மெனப்படுவது யாது எனக் கேட்பின் மறவாது இதுகேள்-அறம் என்று கூறப்படுவது யாது என்று கேட்பின் யான் கூறுகின்ற இதனை மறவாது கேட்பாயாக, மன்னுயிர்க்கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்லென - நிலைபெற்ற உயிர்கட்கெல்லாம் உணவும் ஆடையும் தங்குமிடமும் அளித்த லல்லது வேறு யாம் கண்டதில்லை என்று கூற;
மறுபிறப்பு என்றது, ஈண்டுச் சென்ற பிறப்பினை. அந்தரத்தீவுபெருந் தீவு என்பவற்றை முன் ¹"நால்வகை மரபின் மாபெருந் தீவும், ஓரீ ராயிரஞ் சிற்றிடைத் தீவும்" என உரைத்தமையா னறிக. பொருளு முண்டோ புரைதீர்த்தற்கு என்றது, அரசர் அருளறம் பூண்டால் எல்லா வுயிர்களும் தாமே குற்றமற்றனவா மாதலின், உலகிலே குற்றந் தீர்த்தல் என்பதற்குப் பொருளே யிராதென்பெடி. பிற; அசைச்சொல்; பிறவற்றின் என்றுமாம். உண்டியும் உடையும் உறையுளும் அளித்தலல்லது என விரித்துரைக்க. ²"அற்றார்கட்கு, உண்டியுறையு ளுடுக்கை யிவை யீந்தார்" என்பது அறியற்பாலது.
¹ மணி. 4 : 195 - 4. ² ஏலாதி. 9.
26.33
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
235
கண்ட தில்லெனக் காவல னுரைக்கும்
என்னாட் டாயினும் பிறர்நாட் டாயினும்
நன்னுத லுரைத்த நல்லறஞ் செய்கேன்
என்பிறப் புணர்த்தி யென்னைநீ படைத்தனை
நீன்றிறம் நீங்க லாற்றேன் யானெனப்
புன்கண் கொள்ளனீ போந்ததற் கிரங்கிநின்
மன்பெரு நாடு வாயெடுத் தழைக்கும்
வங்கத் தேகுதி வஞ்சியுட் செல்வனென்று
அந்தரத் தெழுந்தன ளணியிழை தானென்.
231
உரை
239
காவலன் உரைக்கும் - அரசன் கூறுவான், என் நாட்டாயினும் பிறர் நாட்டாயினும் நன்னுதல் உரைத்த நல்லறம் செய் கேன் - நன்னுதால் என்னுடைய நாட்டிலும் பிறருடைய நாடுகளிலும் நீ மொழிந்த நல்லறங்களைச் செய்வேன், என் பிறப்பு உணர்த்தி என்னை நீ படைத்தனை - என் பழம் பிறப்பினை அறிவித்து அறிவுடையவனாக்கினமையின் நீ என்னைப் படைத்தோயாவை, நின்றிறம் நீங்கல் ஆற்றேன் யான் என - ஆகலின் யான் நின்னிடத்தினின்றும் பிரிதலை ஆற்றேன் என்றுரைக்க, புன்கண் கொள்ளல் - துன்பமெய்தாதே, நீ போந்ததற்கு இரங்கி-நீ ஈண்டு வந்ததற்கு வருந்தி, நின்மன்பெரு நாடு வாயெடுத்து அழைக்கும்-நினது மிகப்பெரிய நாடு ஓலமிட்டு நின்னையழைக்கும் ஆகலின், வங்கத்து ஏகுதி - மரக்கலத்தினிடமாகச் செல்வாய், வஞ்சியுட் செல்வேன் என்று-யான் வஞ்சிமாநகரஞ் செல்வேன் என்று கூறி, அந்தரத்து எழுந்தனள் அணியிழை தானென்-மணிமேகலை விசும்பின் வழியாக எழுந்துனள் என்க.
ஆயினும்: எண்ணிடைச் சொல். பழம்பிறப் புணர்ந்து நல்லறம்பூண்டற்குரிய சிறப்புணர்வினனாதற்குக் காரணமா யிருந்தமையின் 'என்னை நீ படைத்தனை' என்றான்; ¹"நானவன்றன் மகள்" என்பது போன்றதிது. நின்னாடு வாயெடுத்தழைக்கும் என்னுங் கருத்து 'நீ யொழி காலை ... கூஉம்' என முன் இக் காதையுள் வந்திருத்தல் காண்க.
அரசன், புகுந்து வணங்கிக் கேட்டு, 'இவள் யார்' என்னக் கஞ்சுகன்,'அன்றே உரைத்தேன்; அவள் ஈங்கு வந்தனள்;' என்றலும், இளங்கொடி, 'ஆங்கு வருவாய்' என்று புகன்று எழுந்து இழிந்து போகி வலங்கொண்டு பீடிகையைக் காண்டலும், தொழுது அவள் வலங் கொள்ள, அப் பீடிகை உணர்த்த, பணிந்து, 'அன்றே போன்றது' என்று ஏத்தி வலங்கொண்டு இன்னணமாக, இறைவனும் விட்டுப் புக்குக் கேட்டு எய்தி நினைந்து கள்ளாட்டிகழ்ந்து சாற்றி, 'வித்து இன்று விளைந்து' என்று கூற, மந்திரி சனமித்திரன், தொழுதேத்தி, 'மன்னவ, மதிமாறோர்ந்தனை' என்று முதுமொழி கூற, முதல்வன் கேட்டு, 'வேட்கை தணித்தற்குரியது; காத்தல் நின்கடன்' என்று கூறிக் கூஉய்க் கரையெய்தி ஏறினேன்; அக் கலம் சென்று சார்ந்து இருத்தலும், பூங்கொடி பொருந்தி மகிழ்வெய்தி வலஞ்செய்து, 'பீடிகை இது' எனக் காட்ட, மன்னவன் வலங்கொண்டு ஏத்தினன்; அவனுக்கப் பீடிகை பிறவியைக் காட்ட, மன்னவன் 'மறந்து வாழேன்' என்று எத்தி, மணிமேகலையுடன் எழுந்து சென்று இருப்ப, தெய்வதம் கண்டு வந்தெய்தி, 'பெரியோய், வந்தனை; உடலென்பு இவைகாண்; என்பு மிவை காண்; காணாய்; கொன்றாய்; கொன்றாய்; கொற்றவனாயினை; மட வரல்நல்லாய், நகர் கடல் வயிறு புக்கது, காரணங் கேளாய்; மணிமேகலா தெய்வம் சாபமிட்டனள்; இது பட்டது; உலக மன்னவன் போயினன்; தாயரும் புக்கனர்; கேட்க உருகுவையாயின், அறவணன்றன்பால் வஞ்சியுட் கேட்பை' என்று தெய்வம்' போயபின், மன்னவன் இரங்கிப் படிவம் நோக்கி மயங்க, மணிமேகலை எழுந்து 'கண்டது இல்' என காவலன் உரைக்கும்; அங்ஙனம் உரைப்பவன், 'நீங்கலாற்றேன் யான்' என, அணியிழை. 'ஏகுதி; செல்வன்' என்று எழுந்தனள் என, வினை முடிவு செய்க.
¹ சிலப். 24. தென்னவன்.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil