Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 26.29

Maṇimēkalai urai 26.29

Language
Tamil

26.29

ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை

205

கடவுண் மாநகர் கடல்கொளப் பெயர்ந்த
வடிவேற் றடக்கை வானவன் போல
விரிதிரை வந்து வியனகர் விழுங்க
ஒருதனி போயின னுலக மன்னவன்
அருந்தவன் றன்னுட னாயிழை தாயரும்
வருந்தா தேகி வஞ்சியுட் புக்கனர்
பரப்புநீர்ப் பௌவம் பலர்தொழக் காப்போள்
உரைத்தன கேட்க வுருகுவை யாயினின்

201

உரை

208

கடவுள்மாநகர் கடல்கொளப் பெயர்ந்த வடிவேல் தடக்கை வானவன்போல-பெருமை-பொருந்திய தனது தேவ நகரம் கடல் கோட்பட ஆண்டுநின்றும் நீங்கிய கூரிய வச்சிரப் படை பொருந்திய பெரிய கையையுடைய இந்திரன்போல், விரிதிரை வந்து வியன் நகர் விழிங்க - விரிகின்ற அலைகளையுடைய கடல்வந்து தனது அகன்ற நகரத்தை விழிங்க, ஒருதனி போயினன் உலக மன்னவன்- உலக மன்னவனாகிய நெடுமுடிக்கிள்ளி அங்கிருந்து துணையின்றிச் சென்றனன், அருந்தவன் தன்னுடன் ஆயிழை தாயரும் - அரிய தவமுடைய அறவண வடிகளுடன் நின் தாயாராகிய மாதவியுஞ் சுதமதியும், வருந்தாது ஏகி வஞ்சியுட் புக்கனர் - வருத்தம் ஒன்று மின்றிச் சென்று வஞ்சி நகரம் புகுந்தனர், பலப்புநீர்ப் பௌவம் பலர் தொழக் காப்போள் உரைத்தன - பரந்த நீரினையுடைய கடலைப் பலரும் வணங்குமாறு காக்கின்ற மணிமேகலா தெய்வத்தால் இவை எனக்கு உரைக்கப்பட்டன; "கடவுண்மாநகர்......வானவன்போல" என்றது இல்பொருளுவமம்;

"¹வளமலர்ப் பூம்பொழில் வானவர் மகளிரொடு
விளையாட்டு விரும்பிய விறல்வேல் வானவன்
பொலம்பூங் காவும் புனல்யாற்றுப் பரப்பும்
இலங்குநீர்த் துருத்தியும் இளமரக் காவும்
அரங்கும் பள்ளியும் ஒருங்குடன் பரப்பி
ஒருநூற்று நாற்ப தியோசனை விரிந்த
பெருமால் களிற்றுப் பெயர்வோன் போன்று"

என உவமங் கூறியிருத்தலும் ஈண்டு அறியற்பாலது.

¹ சிலப். 25: 106.

Linked texts (1)