Maṇimēkalai's Renunciation 28.33
Maṇimēkalai urai 28.33
- Language
- Tamil
28.33
சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
110
115
எல்லையில் பொருள்களி லெங்குமெப் பொழுதும்
புல்லிக் கிடந்து புலப்படு கின்ற
வரம்பி லறிவ னிறைநூற் பொருள்களைந்
துரந்தரு முயிரோ டொருநால் வகையணு.
அவ்வணு வுற்றுங் கண்டு முணர்ந்திடப்
பெய்வகை கூடிப் பிரிவதுஞ் செய்யும்
நிலநீர் தீக்காற் றெனநால் வகையின
மலைமர முடம்பெனத் திரள்வதுஞ் செய்யும்
வெவ்வே றாகி விரிவதுஞ் செய்யும்
அவ்வகை யறிவ துயிரெனப் படுமே
110
உரை
119
[ ஆசீவகவாதி ]
எல்லையில் பொருள்களில்-எல்லையில்லாத பொருள்களின் இடத்தில், எங்கும் எப்பொழுதும் புல்லிக்கிடந்து புலப்படுகின்ற - எவ்விடத்தும் எப்பொழுதும் நீங்காமற் பொருந்திக் கிடந்து விளங்குவனவாகிய, வரம்பில் அறிவன் இறை-எல்லையில்லாத அறிவினையுடைய மற்கலியாகிய எங்கள் இறைவன் உரைத்த, நூற் பொருள்கள் ஐந்து - நூற்பொருள்கள் ஐந்து வகைப்படும், உரந்தரும் உயிரோடு அணுநால்வகை - (அவை) திண்மைபொருந்திய உயிரும் நால்வகை யணுவகையுமாம், அவ்வணு உற்றும் கண்டும் உணர்ந்திட-அவ்வணுக்கள் தாம் தம்மை உற்றும் கண்டும் உணர்ந்திடுமாறு, பெய்வகை கூடிப் பிரிவதும் செய்யும்-ஒன்று ஒன்றினுட் புகுமாறு செறித்த வழியும் ஒன்றாகாவகையிற் கூடுதலும் பிரிதலும் செய்யும், நிலம் நீர் தீ காற்று என நால்வகையின - நிலவணுவும் நீரணுவும் தீயணுவும் காற்றணுவுமென நான்கு வகைப்படுவன வாகிய அவை, மலைமரம் உடம்பு எனத் திரள்வதும் செய்யும் - மலையாகவும் மரமாகவும் உடம்பாகவும் திரண்டு உருவாவது முண்டு, வெவ்வேறாகி விரிவதும் செய்யும் - அவை வேறுவேறாகப் பிரிந்து விரிவதும் உண்டு, அவ்வகை அறிவது உயிர் எனப்படும் - திரள்வதும் விரிவதுமாகிய அணுக்களின் அக்கூறபாடுகளை யறிவது உயிரென்று கூறப்படும் எ - று.
பொருள்கள் எல்லையில்லாதனவாதலின், அவற்றால் விளக்கமுறும் அறிவும் எல்லையில்லாது விரிதலின், "வரம்பில் அறிவன்" என்றான். மற்கலி, ஆசீவகநெறியைக்கண்டவர். இவரை, மற்கலி கோசலர் என்றும் கூறுப. இவரெழுதிய நூல் நவகதிர் என்று கூறப்படும். ஆசீவகர்க்கு இறைவன் மற்கலி என்பதை, "மற்கலி நூலின் வகையிது" (மணி.27 : 165) என்பதனால் அறிக. நீலகேசி யுடையாரும், ஆசீவகன் கூற்றில் வைத்து, "மற்கலிதானே இறைஇனி, ஒன்பதுவாங் கதிர்நூல் யாமுடையன, மண்பெறு நுண்பொரு ளைந்து" (671) என்று கூறுவது காண்க. உணர்வுடைமைபற்றி, உயிரை வேறுவைத்து, "உரந்தரு முயிரோ டொருநால் வகையணு" என்றார். ஓரணு மற்றோரணுவிலடங்கினும், ஒன்று மற்றொன்றினுட்புகுந்தொன்றாகாதென்றும், ஒன்றினொன்றடங்கிக் கூடுவதும் பிரிவதும் செய்யுமென்பவாகலின், "பெய்வகை" யென்றும் "கூடிப் பிரிவதும் செய்யு" மென்றும் கூறினான் பிறரும், "குழுவும் பிரியும்" உணல்மேயினும் உள்புகுதல் உரையேம்" (நீலகே. 677) என்றார். "உயிரோடொரு நால்வகையணு" (மணி.27:113) என்று தொகுத்தோதியதை விரித்துரைத்தலின், நிலநீர் தீக்காற்றென நால்வகையின என்று விரித்துரைத்தார். நால்வகையணுவும் கூடிப் பிரியுமென்ற விடத்துக் கூடிநிற்குந் திறத்தை விளக்கற்கு, "மலைமரம் உடம்பெனத் திரள்வதும் செய்யும்" என்றும், பிரியுந் திறத்தை, "வெவ்வேறாகி விரிவதும் செய்யும்" என்றும் கூறினான். உயிர் எனப்படும் எனச் சிறப்பித்தான், அஃது உணர்வதும் பிறர்க் குணர்த்துவதும் செய்யும் சிறப்புப்பற்றி. பிறரும், "அறித்தலறிதலவை தாமுயிராம்" (நீல. 676) என்றார். அறித்தல்-அறிவித்தல். உயிரெனப் பிரித்துக் கூறினா னாயினும், அதுவும் அணுவென்றே கருதப்படும். "உடங்கே யணுவைந் துருவா யுளதே" (நீல. 674) என்பது காண்க. "அவ்வணு" வென்றது உயிரணுவென்றும், "உற்றுங்கண்டு முணர்ந்திடப் பெய்வகைக் கூடிப் பிரிவதும் செய்யும்" என்றது அவ்வுயிரணுவின் இலக்கணமென்றும் கூறுவாருமுளர். வேறுவேறென்பது வெவ்வேறென மரீஇயிற்று.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil