Maṇimēkalai's Renunciation 28.35
Maṇimēkalai urai 28.35
- Language
- Tamil
28.35
சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
125
130
135 ¹வேற்றியல் பெய்தும் விபரீ தத்தால்
ஆதி யில்லாப் பரமா ணுக்கள்
தீதுற் றியாவதுஞ் சிதைவது செய்யா
² புதிதாய்ப் பிறந்தொன் றொன்றிற் புகுதா
முதுநீ ரணுநில வணுவாய்த் திரியா
ஒன்றிரண் டாகிப் பிளப்பதுஞ் செய்யா
அன்றியு மவல்போற் பரப்பதுஞ் செய்யா
உலாவுந் தாழு முயர்வதுஞ் செய்யும்
குலாமலை பிறவாக் கூடும் ³பலவும்
பின்னையும் பிரிந்துதந் தன்மைய வாகும்
மன்னிய வழிரமாய்ச் செறிந்துவற் பமுமாம்
வேயாய்த் துளைபடும் பொருளா முளைக்கும்
தேயா மதிபோற் செழுநில⁴ வரைப்பாம்
125
உரை
137
இவை ஆதியில்லாப் பரமாணுக்கள் இவ்வைவகையணுக்களும் அநாதியான பரமாணுக்களாதலால், வேற்றியல் பெய்தும் விபரீதத்தால் - வேறாகிய இயல்புகளையும் எய்தும் விகாரமுடைய வாயினும், தீதுற்று யாவதும் சிதைவது செய்யா - கேடுற்றுச் சிறிதும் இல்லையாமாறு அழிவது கிடையா, புதிதாய் ஒன்று பிறந்து ஒன்றிற் புகுதா - புதிதாக ஓரணுதுத் தோன்றி வேறோ ரணுவுக்குட் புகுவதுமில்லை; முதுநீர் அணுநில வணுவாய்த் திரியா-அநாதியான நீரணுக்கள் அத்தன்மையவான நிலவணுக்களாய் மாறுவதில்லை; ஒன்று இரண்டாகிப் பிளப்பதும் செய்யா - ஓரணு இரண்டணுக்களாய்ப் பிளந்து போவதும் கிடையாது; அன்றியும்-மேலும்; அவல் போல் பரப்பதும் செய்யா-நெல் முதலியவற்றைக் குற்றிப்பெறும் அவல்போல விரிவதுமில்லை; உலாவம் தாழும் உயர்வதும் செய்யும் -உலாவுவதும் தாழ்வதும் உயர்வதும் உண்டு; குலாம் மலை பிறவாக்கூடும் - நிலவணுக்களாற் பொருந்திய மலை கரைந்து மணலாகிப் பிறவற்றோடு கூடும்; பலவும் பின்னையும் பிரிந்து தம் தன்மையவாகும் - பலவாய்த் தம்மிற் செறிந்து கூடியிருக்குமவை பின்னரும் அக்கூட்டத்திற் பிரிந்து தனித்தனி யணுவாகவும் மாறும்; மரம் மன்னிய வயிரமாகச் செறிந்து வற்பமுமாம் - மரமாய்க் கூடிய அணுக்கள் திண்மையுறக்கூடி வயிரமாகி வன்மையுடைய மரமுமாம்; வேயாய்த் துளைபடும் - மூங்கிலாகி உள்ளே புழையுடையதாகும்; பொருளா முளைக்கும் - வித்தாகி முளைக்கும்; தேயாமதிபோல் செழுநில வரைப்பாம் - தேயாத முழுத் திங்கள் போல வட்டமான செழுமை பொருந்திய நிலப் பரப்பாகும் எ - று.
விபரீதம் - விகாரம். கூடுதற்குரிய இயல்பு பிரியுமிடத்து வேறுபடுதலின், "வேற்றியல் பெய்தும் விபரீத" மாயிற்று. வேற்றியல்பெய்தும் விபரீத முடைமையின் விகாரியாதலால் அணுக்கள் அழியுங்கொலென்னு மையமறுத்தற்கு, "ஆதியில்லாப் பரமாணுக்கள்" என்றார். ஆதியின்மையை விளக்கற்கு, "புதிதாய்ப் பிறந்தொன் றொன்றிற புகுதா" என்றும், ஒருவகையணு பிறிதொருவகை யணுவாய்த் திரியா மையை விளக்கலுற்று, "முது நீரணு நிலவணுவாய்த் திரியா" என்றும் கூறினான். முதுமையை நிலவணுவுக்கும் கூட்டுக. ஒன்று மற்றொன்றாதல் இல்லையென்பதையே வேறுபல ஏதுக்களால் விளக்குவானாய், ஒன்றிரண்டாகப் பிளத்தலும் நெல் முதலியவற்றைக் குற்றிப் பெறும் அவலைப்போலப் பரத்தலும் இல்லையென்றான். ஒருவகை யணுக்களே தம்மிற் கூடிச் செறிதலும் பிரிதலும் செய்யுமென்றும் அதனால் தந்தன்மை திரியாவென்றும் கூறியதனை, மலையியல்பும் மரத்தியல்பும் நிலப்பரப்பமைதியும் முறையே கூறி விளக்கினான். மரஞ் செடி கொடிகள் முதலியவற்றாள் விளையும் பொருள் வித்தாதலின், அவ் வித்தினைப் "பொருள்" என்றார். வயிரமேறிய மரம் நிலைபெறுதல் தானே யமை தலின், "மன்னிய" என்றான். மதி, முழுத்திங்கள் ; அதுதானும் மறுநாளே குறையலுறுதலின், அதனினீக்கத் "தேயாமதி" யென்று சிறப்பித்தார்.
(பாடம்) ¹வேற்றியலெய்தும். ²;புத்தாய்ப். ³;மலையும். ⁴வரைப்பால்.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil