Maṇimēkalai's Renunciation 28.52
Maṇimēkalai urai 28.52
- Language
- Tamil
28.52
சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
அறிதற் கெளிதாய் 1முக்குண மன்றிப்
பொறியுணர் விக்கும் 2பொதுவு மன்றி
எப்பொரு ளுந்தோன் றுதற்கிட மன்றி
அப்பொரு ளெல்லா மறிந்திடற் குணர்வாய்
ஒன்றா யெங்கும் பரந்துநித் தியமாய்
நின்றுள வுணர்வாய் நிகழ்தரும் புருடன்
227
உரை
232
அறிதற்கு எளிதாய் - எளிதில் அறியப்படுவதாய்; முக்குணமின்றி - முக்குணங்களு மல்லாததாய் ; பொறியுணர்விக்கும் பொதுவு மன்றி-மூலப் பகுதியோடு ஒருவகைப் பொதுத் தன்மையுமின்றி; எப்பொருளும் தோன்றுதற்கு இடமன்றி-எவ்வகையான பொருளும் தோன்றுதற் கிடமல்லாததாய்; அப்பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய் - அப்பொருள்வகை யெல்லாவற்றையும் அறிந்துகோடற்குரிய உணர்வாய் ; ஒன்றாய் - ஏகமாய்; எங்கும் பரந்து நித்தியமாய் நின்று - எவ்விடத்தும் வியாபித்து நிற்பதும் நித்தியமானதுமாய் நின்று; உளவுணர்வாய்-உள்ளத்துணர்வு வடிவாய ; புருடன் நிகழ்தரும் - புருடதத்துவம் நிலவும் எ - று.
உடற் கூறுகளைப் பகுத்து நோக்குமிடத்து உடலின் வேறாய் உணர்வு வடிவாய்ப் புருடனதுண்மை எளிதில் உணரப்படுமாறு பற்றி, "அறிதற் கெளிதாய்" என்றும், குணங்கள் மூலப்பகுதியின் இயைபுடையவாதலின், அதனின் வேறாய புருடனை, "முக்குணமன்றி" என்றும், மூலப்பகுதி அசேதனமும் தான் சேதனமுமாதலின், அதற்கும் தனக்கும் பொதுத் தன்மை ஏதுமின்மை தோன்ற, "பொதுவுமின்றி" யென்றும், தானொன்றிற் றோன்றுவதும் தன்னினொன்று தோன்றுவது மின்றி இருத்தலால், "எப்பொருளுந் தோன்றுதற்கிடமின்றி" யென்றும், உணருந் தன்மைத் தென்பது தோன்ற, "அப்பொருளெல்லா மறிந்திடற்குணர்வாய்" என்றும், அவயவப் பகுப்பில்ல தென்றற்கு, "ஒன்றாய்" என்று, எங்கும் பரந்து நில்லாவழி உணர்வு செல்லாமையின், "எங்கும் பரந்" தென்றும், உடம்பழியினும் தான் அழியாமையின் "நித்தியமாய்" என்றும், உள்ளத்தோடு கூடாவழிச் செயலறுதலின் "உளவுணர்வாய்" என்றும் புருடனைச் சிறப்பித்துக் கூறினார். இவ்வாறே சாங்கிய காரிகையும் சாங்கிய பிரவசன பாடியமும் விளக்கிக் கூறுகின்றன. இனி, நீலகேசியுடையார், "எத்திறத் தின்னும்செய்யான்குணமொன்றிலன், தத்துவ னின்பனபேதனலேபகன், நித்தியனெங்கு முளனெடுங் காட்சியன், துத்த னுடையனென் றோன்றலுமென்றான்: (736) என்று கூறுகின்றார். இவர் கூறுவனவற்றுள் சில சாங்கியநூற் கருத்துக்கு மாறாகக் கூறப்பட்டுள்ளன ; அவற்றின் இயல்பை விரிந்த நூல்களுட் கண்டுகொள்க.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil