Maṇimēkalai's Renunciation 29.29
Maṇimēkalai urai 29.29
- Language
- Tamil
29.29
கச்சிமாநகர் புக்க காதை
235
240
245
செல்லுங் காலைத் தாயர் தம்முடன
அல்லவை கடிந்த வறவண வடிகளும்
மல்லன் மூதூர் மன்னுயிர் முதல்வி
நல்லறச் சாலை நண்ணினர் சேறலும்
சென்றவர் தம்மைத் திருவடி வணங்கி
நன்றென விரும்பி நல்லடி கழுவி
ஆசனத் தேற்றி யறுசுவை நால்வகைப்
போனக மேந்திப் பொழுதினிற் கொண்டபின
பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து
வாய்வ தாகவென் மனப்பாட் டறமென
மாயைவிட் டிறைஞ்சினள் மணிமே கலையென்.
235
உரை
245
தாயர் தம்முடன் அல்லவை கடிந்த அறவணவடிகளும்- மாதவியும் சுதமதியும் அறனல்லவற்றை நீக்கிய அறவணரும், மல்லல் மூதூர் மன்னுயிர் முதல்வி நல்லறச்சாலை நண்ணினர் சேறலும் - வளமிக்க பழைமை பொருந்திய நகரத்தின்கண் நிலைபெற்ற உயிர்களின் முதல்வியாகிய மணிமேகலை உணவளிக்கும் அறச்சாலையை வந்தடைதலும், நன்றென விரும்பிச் சென்று அவர் தம்மைத் திருவடி வணங்கி நல்லடி கழுவி - வரவுணர்ந்த மணிமேகலை நன்றென விரும்பி எழுந்து சென்று அவர்தம் திருவடிகளைப் பணிந்து நீரால் அவர் அடிகளை விளக்கி, ஆசனத்தேற்றி அறுசுவை நால்வகைப் போனகம் ஏந்தி - நற்றவிசிலிருத்தி அறுசுவையினை யுடைய நான்குவகைப்பட்ட திருவமுதினை ஏந்தி, பொழுதினிற் கொண்டபின் - உண்டற்குரிய காலமெய்த அவர்கள் உண்ட பின்னர்; பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து - பசிய வெற்றிலையும் பாக்கும் கருப்பூரமும் அளித்து, வாய்வதாக என் மனப்பாட்டு அறம் என மாயைவிட்டு இறைஞ்சினள் மணிமேகலை என் - என் மனத்தின்கணுளதாகிய அறமானது பலித்திடுக என்று கூறி வேற் றுருவினின்றும் நீங்கி அறவணவடிகளை மணிமேகலைவணங்கினள்.
காண்டல் வேட்கை மிக்குடையரா யிருந்தமையின், ''தாயர் தம்முடன்'' என்றார். மணிமேகலை வரவால் நகரம் அல்லல் நீங்கி மல்லலுற்றமை தோன்ற, ''மல்லல் மூதூர்'' என்றும், பசி மிகுதியால் உயிராகிய முதல் அது நின்றவுடம்பினின்றும் நீங்கும் நிலையிலிருப்ப, உண்டி தந்து நிற்கப்பண்ணிய மாண்புபற்றி, மணிமேகலையை, ''மன்னுயிர் முதல்வி'' யென்றும் சிறப்பித்தார். அறவணன் வரவு தன்னை நோக்கி அறமே வருவதாகக் கருதுகின்றாளாதலின், ''நன்றென விரும்பி'' எதிர்கொண்டாளெனவறிக. பின்னரும், ''வாயவதாக என் மனப்பாட்டறம்'' என்பது காண்க. மாதவனுருவம் மாயமெனப்பட்டது, மணிமேகலையின் உண்மை வடிவமன்மையின்.
மணிமேகலை, தாயரோடு அறவணர்த்தேர்ந்து, வஞ்சியின் புறக்குடி கடந்து, மறுகும் மன்றமுதலியனவும், விரைமரைக்காவும், இடங்களும் கண்டு மகிழ்வுற்று, கொண்ட வேடமொடு, பள்ளிபுக்கு, மாதவம் புரிந் தோன் பாதம் பணிந்து, சொல்லின ளாதலின், அவட்கு அருந்தவன் நின்கடன் என அருள, ஆயிழை, பாத்திரம் செங்கையினேந்தி, மூதூர்க் கணின்றோங்கி, வடதிசை மருங்கின் வானத்தியங்கி, நகர் புல்லென்றாயது கண்டு உளம் கசிந்த ஒண்டொடி, வலங்கொண்டு, இழிந்து நண்ணி' சேதியந் தொழுது, பொழில் சென்றெய்தலும், கஞ்சுகன் வேந்தற் குரைப்போன் வந்து தோன்றினள் என, மன்னனும் விரும்பிச் சென்று, அவ்விடம் காட்ட, காவகம் பொருந்தி, வருத்து, புனைந்து, இயற்ற, எத்தி, சரபியை வைத்து நின்று, வருகென, கிளவியின், காணார் முதலாகிய மாக்களும் விலங்கின் தொகுதியும், சுரப்பவுண்டு, எத்திச் செல்லுங்காலை, தாயரும் அடிகளும் நண்ணினர் சேறலும், விரும்பிச் சென்று, வணங்கி, கழுவி, ஏந்தி, கொண்டபின், படைத்து, வாய்வதாக என மாயை விட்டு இறைஞ்சினள் என, வினை முடிபுகொள்க.
கச்சிமாநகர் புக்க காதை முற்றிற்று.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil