Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 3.6

Maṇimēkalai urai 3.6

Language
Tamil

3.6

ஊரலருரைத்த காதை

50 55

கணவற் குற்ற கடுந்துயர் பொறாஅள்
மணமலி கூந்தல் சிறுபுறம் புதைப்பக்
கண்ணீ ராடிய கதிரிள வனமுலை
திண்ணிதிற் றிருகித் தீயழற் பொத்திக்
காவலன் பேரூர் கனையெரி யூட்டிய
மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை
அருந்தவப் படுத்தல் அல்ல தியாவதும்
திருந்தாச் செய்கைத் தீத்தொழிற் படா அள்

50

உரை

57

கணவற்கு உற்ற கடுந்துயர் பொறாஅள் - கொழுநனுக்கு நேர்ந்த கொடுந்துயரைப் பெறாதவளாய், மணமலி கூந்தல் சிறு புறம் புதைப்ப - மணம் நிறைந்த கூந்தல் பிடரிடத்தை மறைத்து விரிந்து கிடப்ப, கண்ணீர் ஆடிய கதிர் இள வனமுலை - கண்ணீரால் நனைந்த கதிர்த்த அழகிய இளங்கொங்கையை திண்ணிதில் திருகித் தீயழல் பொத்தி-திண்மையுடன் திருகி அழலை மூட்டி, காவலன் பேரூர் கனைஎரி ஊட்டிய - பாண்டியனது பேரூராகிய மதுரையை மிகுந்த நெருப்பினாலுண்பித்த, மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை - மிகச் சிறந்த தெய்வக் கற்பினையுடைய கண்ணகியின் மகளாகிய மணிமேகலை, அருந்தவப் படுத்தல் அல்லது - அரிய தவநெறியிற் சேர்க்கப்படுத லல்லது, யாவதும் -சிறிதும், திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள் - இழிந்த செய்கையையுடைய பரத்தமைத் தொழிலிற் சேர்க்ப்படாள் ;

சிறுபுறம் - பிடர் ; முதுகுமாம். சிறுபுறம் புதைப்ப

என்றதனால் கூந்தல் அவிழ்ந்து கிடந்ததென்றவாறாயிற்று. தீயழல் - ஒரு பொருளிரு சொல் : கொடிய அழலுமாம். அவள் மாபெரும் பத்தினியாவள் : அவள் மகள் மணிமேகலை தீத்தொழிற் படாள் ; என அறுத்துரைக்க. தன் மகளைக் கண்ணகியின் மகளென்று உரிமை பாராட்டிக் கூறினாள் ;அதனால் மணிமேகலையின் மாண்பு தெரித்தல் கருதியுமாம். தீத் தொழிற் படா அள் - தீத்தொழிற் படுத்தற்குரியளல்லள் என்க.

Linked texts (1)