Maṇimēkalai's Renunciation 3
Maṇimēkalai urai 3
- Language
- Tamil
3.1
ஊரலருரைத்த காதை
5
நாவ லோங்கிய மாபெருந் தீவினுள்
காவற் றெய்வதந் தேவர்கோற் கெடுத்த
தீவகச் சாந்தி செய்தரு நன்னாள்
மணிமே கலையொடு மாதவி வாராத்
தணியாத் துன்பந் தலைத்தலை மேல்வரச்
சித்திரா பதிதான் சொல்லலுற் றிரங்கித்
தத்தரி நெடுங்கட் டன்மக டோழி
வயந்த மாலையை வருகெனக் கூஉய்ப்
பயங்கெழு மாநக ரலரெடுத் துரையென
1
உரை
9
நாவல் ஓங்கிய மா பெரும் தீவினுள் காவல் தெய்வதம் தேவர் கோற்கு எடுத்த - நாவல் எனப் பெயர் சிறந்த மிகப் பெரிய தீவினுள்ளே அதன் காவற்றெய்வமாகிய சம்பாபதியால் இந்திரனுக்கு எடுக்கப்பட்ட, தீவகச் சாந்தி செய்தரு நல்நாள் - தீவ சாந்தியாகிய இந்திர விழவினைச் செய்கின்ற நன்னாளில், மணிமேகலையொடு மாதவி வாரா - மணிமேகலையுடன் மாதவியும் வாராமையா லுண்டான, தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வர-ஆறுத்துயர் மேன் மேல் மிகாநிற்க, சித்திராபதிதான் செல்லல் உற்று இரங்கி - சித்திராபதி மிகவுந் துன்பமுற்று வருந்தி, தத்துஅரி நெடுங்கண் தன்மகள் தோழி-செவ்வரி படர்ந்து பாய்கின்ற நீண்ட கண்களையுடைய தன் புதல்வி மாதவியின் தோழியாகிய, வயந்த மாலையை வருக எனக் கூய்-வயந்தமாலையை வாவென்று அழைத்து, பயங்கெழு மா நகர் அலர் எடுத்து உரை என-நீ சென்று பயன் சிறந்த பெரிய நகரினுள்ளார் கூறும் அலரை மாதவிக்கு எடுத்துக் கூறு வாயாக என்று உரைப்ப ;
நாவல் மரம் ஓங்கியுள்ளமையால் அப் பெயர்பெற்ற தீவு
என்றுமாம். பெருந் தீவுகளுள் ஒன்றுதலின் இது மாபெருந் தீவு எனப்பட்டது. "நால்வகை மரபின் மாபெருந் தீவும்" (6:195) என்பர் மேலும். பண்டு எடுத்தமையால் தீவகச் சாந்தியெனப் பெயர்பெற்ற இந்திர விழாவைச் செய்யும் இந் நன்னாளில் என விரித்துரைக்க. விழாவிற்கு ஆடல் பாடல் நிகழ்த்த வாராமையால் என்க வாராத்துன்பம் தணியாமல் மேல்வர என்றுமாம். தத்துஅரி-அரி படர்ந்த எனலுமாம்.
3.2
ஊரலருரைத்த காதை
10
15
வயந்த மாலையும் மாதவி துறவிக்கு
அயர்ந்துமெய் வாடிய அழிவின ளாதலின்
மணிமே கலையொடு மாதவி யிருந்த
அணிமலர் மண்டபத் தகவயிற் செலீஇ
ஆடிய சாயல் ஆயிழை மடந்தை
வாடிய மேனி கண்டுளம் வருந்திப்
பொன்னே ரனையாய் புகுந்தது கேளாய்
உன்னோ டிவ்வூர் உற்றதொன் றுண்டுகொல
11
உரை
17
வயந்த மாலையும் மாதவி துறவிக்கு அயர்ந்து மெய்வாடிய அழிவினள் ஆதலின் - வயந்த மாலையும் மாதவியினது துறவிற்கு மனந்தளர்ந்து உடல் வாடிய வருத்த முடையவள் ஆகலான், மணிமேகலையோடு மாதவி இருந்த அணி மலர் மண்டபத்து அக வயின் செலீஇ - மணிமேகலையுடன் மாதவியிருந்த அழகிய மலர் மண்டபத்தின் உள்ளே சென்று, ஆடிய சாயல் ஆயிழை மடந்தை வாடிய மேனி கண்டு உளம் வருந்தி - அசைகின்ற மென்மையினையுடைய மாதவியினது தவத்தான் வாட்டமுற்ற யாக்கையைக் கண்டு மனம் வருந்தி, பொன்னேரனையாய் - திருமகள் போல் வாய், புகுந்தது கேளாய் - இப்பொழுது நேர்ந்தனைக் கேட்பா யாக, உன்னோடு இவ்வூர் உற்றது ஓன்று உண்டுகொல் - நின்னோடு இவ்வூர் உற்றதாகிய பகைமை ஓன்றுண்டோ;
துறவி - துறவு ; "¹ துறந்தோர் தம்முன் துறவி யெய்தவும்"
என்பது காண்க. பொன்-திருமகள். நேரனையாய் - நேரொப்பாய் ; உவமச் சொல் இரண்டிணைந்தது. ஊரார் அலர் தூற்றுவது பகைமையா லன்றென்பாள் 'உற்றதொன் றுண்டுகொல்' என்றாள்.
¹ சிலப். 27 : 95.
3.3
ஊரலருரைத்த காதை
20 25
30
35
வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்துக்
கூத்தும் பாட்டுந் தூக்குந் துணிவும்
பண்ணியாழ்க் கரணமும் பாடைப் பாடலும்
தண்ணுமைக் கருவியுந் தாழ்தீங் குழலும்
கந்துகக் கருத்தும் மடைநூற் செய்தியும்
சுந்தரச் சுண்ணமுந் தூநீ ராடலும்
பாயற் பள்ளியும் பருவத் தொழுக்கமும்
காயக் கரணமுங் கண்ணிய துணர்தலும்
கட்டுரை வகையுங் கரந்துறை கணக்கும்
வட்டிகைச் செய்தியும் மலராய்ந்து தொடுத்தலும்
கோலங் கோடலுங் கோவையின் கோப்பும்
காலத் கணிதமுங் கலைகளின் றுணிவும்
நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த
ஓவியச் செந்நூல் உரை நூற் கிடக்கையும்
கற்றுத் துறைபோகிய பொற்றொடி நங்கை
நற்றவம் புரிந்தது நாணுடைத் தென்றே
அலகின் மூதூர் ஆன்றவ ரல்லது
பலர்தொகு புரைக்கும் பண்பில் வாய்மொழி
நயம்பா டில்லை நாணுடைத் தென்ற
வயந்த மாலைக்கு மாதவி யுரைக்கும்
18
உரை
37
வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்துக் கூத்தும் - வேத்தியலும் பொதுவியலும் என்று இருவகைப்பட்ட கூத்தும், பாட்டும்-இசையும், தூக்கும் - தாளங்களின் வழிவரும் செந்தூக்கு முதலிய ஏழு தூக்குக்களும், துணிவும் - தாள வறுதியும், பண்ணியாழ்க் கரணமும்-பண்ணுடன் பொருந்திய யாழின் செய்கைகளும், பாடைப் பாடலும் - அகநாடகம் புறநாடகம் என்பவற்றிற்கு உரிய உருக்களும், தண்ணுமைக் கருவியும் - உத்தமத் தோற்கருவியாகிய மத்தளமும், தாழ் தீங் குழலும் - இனிமை பொருந்திய வேய்ங்குழலும், கந்துகக் கருத்தும்-பந்தாடும் தொழிலும். மடைநூற் செய்தியும் - பாக சாத்திர முறைப்படி அடுதற் றொழிலும், சுந்தரச் சுண்ணமும்-நிறமமைந்த நறுமணப் பொடியும், தூநீர் ஆடலும்-நன்னீராடலும், பாயற்பள்ளியும் - பாயலிடமும், பருவத்து ஒழுக்கமும்-காலங்கட்கேற்ப ஒழுகும் ஒழுக்கமும், காயக்கரணமும்-காயத்தாற் செய்யும் அறுபத்துநான்கு வகைக் கரணங்களும், கண்ணியது உணர்தலும்-பிறர் கருதியதை அறிந்து கொள்ளுதலும், கட்டுரை வகையும் - தொடுத்துக் கூறும் சொல் வன்மையும் கரந்துறை கணக்கும்-மறைந்துறையும் வகையும், வட்டிகைச் செய்தியும் - எழுதுகோலினால் எழில்பட வரையும் தொழிலும், மலர் ஆய்ந்து தொடுத்தலும் - பூக்களை ஆராய்ந்தெடுத்துக் கட்டுதலும், கோலம் கோடலும் - அவ்வப்பொழுதிற்கேற்ப ஒப்பனைசெய்து கொள்ளுதலும், கோவையின் கோப்பும் - முத்து முதலியவற்றைக் கோவையாகக் கோத்தலும், காலணிக்கணிதமும் - சோதிடமும்; கலைகளின் துணிவும் - மற்றமுள்ள கலைகளின் துணிந்த பொருளும், நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த - நாடகக் கணிகையர்க்கென நன்கு வகுக்கப்பட்ட, ஓவியச் செந்நூல் உரை நூற் கிடக்கையும் - செவ்விய நூலாகிய புகழமைந்த ஓவிய நூலிற் கூறப்பட்டனவும், கற்றுத் துறைபோகிய பொற்றொடி நங்கை-கற்று அவைகளிற் கைதேர்ந்த பொன்வளையணிந்த மாதவி, நற்றவும் புரிந்தது நாணுடைத்து என்றே - துறவு பூண்டு நற்றவும் செய்வது நாணமுடைத்தாகும் என்று, அலகில் மூதூர் ஆன்றவர் அல்லது-இம்மூதூரிலுள்ள அறிவானமைந்த அளவற்ற பெரியோர்கள் அல்லாமல், பலர் தொகுபு உரைக்கும் பண்பில் வாய்மொழி-பலருங்கூடிய கூறும் நலமில்லாத வாய்மொழி, நயம்பாடு இல்லை - இனிதாதல் இல்லை, நாண் உடைத்து என்ற - அதனால் நின்செய்கை நாணுந்தன்மை யுடைத்தாம் என்று கூறிய, வயந்த மாலைக்கு மாதவி உரைக்கும் - தோழியாகிய வயந்த மாலைக்கு மாதவி கூறூவான் ;
வேத்தியல் - அரசர்க்காடுங் கூத்து ; பொதுவியல் -
எல்லார்க்கும் ஒப்ப ஆடுங் கூத்து ; ¹"வேத்தியல் பொதுவிய லென்றிரு திறத்து... ஆடலும்," என்பது காண்க. தூக்கு எழினையும், "ஒருசீர்செந்தூக் கிரு சீர் மதலை, முச்சீர் துணிவு நாற்சீர் கோயில், ஐஞ்சீர் நிவப்பே யறுசீர் கழாலே, எழுசீர் நெடுந்தூக் கென்மனார் புலவர்," என்பதனாலறிக. யாழ்க்கரணம் - பண்ணல் முதலிய எட்டும், வார்தல் முதலிய எட்டுமாம்; இவற்றைச் சிலப்பதிகாரத்துக் கானல் வரியிற் காண்க. தாழ்தல் - தங்குதல். பருவம் - கார்முதலியன. காலக் கணிதம் - சோதிட மாதலை, ²"ஆயுள் வேதரும் காலக் கணிதரும்," என்பதனா லறிக. கலைகள் என்றது பரத்தையர்க் குரியவாகக் கூறப்படும் அறுபத்து நான்கு கலைகளுள் ஈண்டுக் கூறாதொழிந்தனவாகும். பரத்தையர்க்குரிய கலைகள் அறுபத்துநான்கு என்பதனை, ³"பண்ணுங் கிளியும் பழித்த தீஞ்சொல், எண்ணெண் கலையோர் இருபெரு வீதியும்," ⁴ "எண்ணான் கிரட்டி யிருங்கலை பயின்ற, பண்ணியன் மடந்தையர்," ⁵ "யாழ்முதலாக வறுபத் தொருநான், கேரிள மகளிர்க்கியற்கையென் றெண்ணிக், கலையுற வகுத்த காமக் கேள்வி," என்பவற்றானறிக. நன்கனம் - நன்றாக ; இச்சொல், "நன்கன நீத்து," (3 : 88) "நன்கன நவிற்றி" (13-24) "நன்கன மறிந்தபின்" (13 : 26) என இக் காப்பியத்துட் பயின்று வந்துளது. வாய்மொழி நாணுடைத் தெனினுமாம்.
¹ சிலப். 14 : 148-50. ² சிலப். 5 : 44. ³ சிலப். 14:164-7.
⁴ சிலப். 22 - 138-9. ⁵ பெருங். 1. 35 : 84-6.
3.4
ஊரலருரைத்த காதை
40
காதல னுற்ற கடுந்துயர் கேட்டுப்
போதல் செய்யா உயிரொடு நின்றே
பொற்கொடி மூதூர்ப் பொருளுரை யிழந்து
நற்றொடி நங்காய் நாணுத் துறந்தேன
38
உரை
41
காதலன் உற்ற கடுந்துயர் கேட்டு - என் காதலனாகிய கோவலன் அடைந்த கொடிய துனபத்தினைக் கேள்வியுற்று, போதல் செய்யா உயிரோடு நின்றே - உடலைவிட்டு நீங்காத உயிருடன் நின்று, பொற்கொடி மூதூர்ப் பொருளுரை இழந்து - அழகிய கொடிகளையுடைய இத் தொன்னகரத்தாருடைய புகழுரையை இழந்து, நற்றொடி நங்காய் - நல்ல வளையல்களுடைய வயந்தமாலையே, நாணுத் துறந்தேன் - நாணத்தையும் விட்டேன் ;
கடுந்துயர் - மிக்க துயர் ; என்றது கோவலன்
கொலையுண்டது ,் இக்காதையுள்ளே பின்னரும் (2 : 50-63) கடுந்துயர் என வருதல் காண்க. மூதூர்:ஆகுபெயர். பொருளுரை-புகழுரை. நங்காய் கேட்டு நின்று இழந்து துறந்தேன் என்றாளென்க.
3.5
ஊரலருரைத்த காதை
45
காதல ரிறப்பிற் கனையெரி பொத்தி
ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்கா(து)
இன்னுயி ரீவர் ஈயா ராயின்
நன்னீர்ப் பொய்கையின் நளியெரி புகுவர்
நளியெரி புகாஅ ராயின் அன்பரோ(டு)
உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர்
பத்தினிப் பெண்டிர் பரபபுநீர் ஞாலத்து
அத்திறத் தாளும் அல்லளெம் மாயிழை
42
உரை
49
காதலர் இறப்பின் - கற்புடை மகளிர்க்கு உயிரினுஞ் சிறந்த கணவன் இறந்தால், கனைஎரி பொத்தி - துயரமாகிய மிக்க நெருப்பு மூளப்பட்டு, ஊது உலைக் குருகின் உயிர்த்து - உலையில் ஊதும் துருத்தி மூக்கினைப்போல் வெய்தாக உயிர்த்து, அகத்து அடங்காது - துன்பம் உள்ளத்தே அடங்கப்பெறாது, இன்னுயிர் ஈவர்-உடன் தமது இனிய உயிரைக் கொடுப்பர் ; ஈயார் ஆயின் - அங்ஙனம் கொடாராயின், நல்நீர்ப் பொய்கையின் நளிஎரி புகுவர்- நல்ல குளிர்ந்த நீரினையுடைய பொய்கையில் ஆடுபவர்போலச் செறிந்த நெருப்பின்கட் புகுவர் ; நளிஎரி புகாஅர் ஆயின் - அவ்வாறு தீயிடைக் குளியாராயின், அன்பரோடு உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்பு அடுவர்-மறுமைக்கண் தம் அன்பரோடு உடன் உறையும் வாழ்க்கையின் பொருட்டுக் கைம்மை நோன்பினை நோற்று உடம்பினை வருத்துவர் ; பத்தினிப் பெண்டிர்-கற்புடை மகளிராவார். பரப்பு நீர் ஞாலத்து - கடல் சூழ்ந்த நிலவுலகிலே, அத்திறத்தாளும் அல்லன் எம் ஆயிழை - எம் கண்ணகியோ அவ்வகையிர் சேர்ந்தவளும் அல்லன் ;
பொத்தி-மூட்டி; மூளப்பட்டென்க. உயிர் ஈவர் -
உடனிறப்பர் என்றபடி; இதனை மூதானந்தம் என்பர்; ¹ "ஒருயிராக வுணர்க உடன், கலந்தோர்க், கீருயி ரென்ப ரிடைதெரியார்-போரில், விடனேந்தும் வேலோற்கும், வெள்வளையி னாட்கும், உடனே யுலந்த துயிர்," என்பது காண்க; பாண்டியன் நெடுஞ்செழியன் இறப்ப அவன் மனைவியாகிய பெருங்கோப்பெண்டு 'தன்னுயிர் கொண்டவ னுயிர்தே டினள்போல்,' உடனுயிர் நீத்த வரலாறு ஈண்டு அறிதற்குரியது. கணவரை யிழந்த பத்தினிப் பெண்டிர்க்குப் பொய்கையும் தீயும் ஒரு தன்மையினை வாதலை, பூதப்பாண்டியன்தேவி தீப்பாய்வாள் கூறிய, ²"பெருந்தோட் கணவன் மாயந்தென வரும்பற, வள்ளித ழவிழ்ந்த தாமரை, நள்ளிரும் பொய்கையுந் தீயுமோரற்றே," என்பதனானும் அறிக. கைம்மை நோன்பின் இயல்பு, ³"வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட, வேளை வெந்தை வல்சி யாகப், பாற்பெய் பள்ளிப் பாயின்று வதியும், உயவற் பெண்டிர்," என்பதனானறியப்படும். அத்திறத்தாளும் அல்லள் - அம்மூன்று திறத்தாருள் அடங்குபவளல்லள்; வேறு சிறப்புடையாள் என்றபடி. ஞாலத்துப் பத்தினிப் பெண்டிர் காதலர் இறப்பின் இன்னுயிரீவர், நளியெரி புகுவர், நோற்றுடம்படுவர்; எம் ஆயிழை அத்திறத்தாளுமல்லள் என்க.
¹ பு.வெ. 262. ² புறம். 245. ³ புறம். 246.
3.6
ஊரலருரைத்த காதை
50 55
கணவற் குற்ற கடுந்துயர் பொறாஅள்
மணமலி கூந்தல் சிறுபுறம் புதைப்பக்
கண்ணீ ராடிய கதிரிள வனமுலை
திண்ணிதிற் றிருகித் தீயழற் பொத்திக்
காவலன் பேரூர் கனையெரி யூட்டிய
மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை
அருந்தவப் படுத்தல் அல்ல தியாவதும்
திருந்தாச் செய்கைத் தீத்தொழிற் படா அள்
50
உரை
57
கணவற்கு உற்ற கடுந்துயர் பொறாஅள் - கொழுநனுக்கு நேர்ந்த கொடுந்துயரைப் பெறாதவளாய், மணமலி கூந்தல் சிறு புறம் புதைப்ப - மணம் நிறைந்த கூந்தல் பிடரிடத்தை மறைத்து விரிந்து கிடப்ப, கண்ணீர் ஆடிய கதிர் இள வனமுலை - கண்ணீரால் நனைந்த கதிர்த்த அழகிய இளங்கொங்கையை திண்ணிதில் திருகித் தீயழல் பொத்தி-திண்மையுடன் திருகி அழலை மூட்டி, காவலன் பேரூர் கனைஎரி ஊட்டிய - பாண்டியனது பேரூராகிய மதுரையை மிகுந்த நெருப்பினாலுண்பித்த, மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை - மிகச் சிறந்த தெய்வக் கற்பினையுடைய கண்ணகியின் மகளாகிய மணிமேகலை, அருந்தவப் படுத்தல் அல்லது - அரிய தவநெறியிற் சேர்க்கப்படுத லல்லது, யாவதும் -சிறிதும், திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள் - இழிந்த செய்கையையுடைய பரத்தமைத் தொழிலிற் சேர்க்ப்படாள் ;
சிறுபுறம் - பிடர் ; முதுகுமாம். சிறுபுறம் புதைப்ப
என்றதனால் கூந்தல் அவிழ்ந்து கிடந்ததென்றவாறாயிற்று. தீயழல் - ஒரு பொருளிரு சொல் : கொடிய அழலுமாம். அவள் மாபெரும் பத்தினியாவள் : அவள் மகள் மணிமேகலை தீத்தொழிற் படாள் ; என அறுத்துரைக்க. தன் மகளைக் கண்ணகியின் மகளென்று உரிமை பாராட்டிக் கூறினாள் ;அதனால் மணிமேகலையின் மாண்பு தெரித்தல் கருதியுமாம். தீத் தொழிற் படா அள் - தீத்தொழிற் படுத்தற்குரியளல்லள் என்க.
3.7
ஊரலருரைத்த காதை
60 65
ஆங்ஙன மன்றியும் ஆயிழை கேளாய்
ஈங்கிம் மாதவர் உறைவிடம் புகுந்தேன்
மறவணம் நீத்த மாசறு கேள்வி
அறவண வடிகள் அடிமிசை வீழ்ந்து
மாபெருந் துன்பங் கொண்டுள மயங்கிக்
காதல னுற்ற கடுந் துயர் கூறப்
பிறந்தோ ருறுவது பெருகிய துன்பம்
பிறவா ருறுவது பெரும்பே ரின்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோ ருறுவ தறிகென் றருளி
ஐவகைச் சீலத் தமைதியுங் காட்டி
உய்வகை இவைகொளென் றுரவோ னருளினன்
58
உரை
69
ஆங்ஙனம் அன்றியும் - அஃதன்றியும், ஆயிழை கேளாய் - வாய்ந்தமாலையே கேட்பாயாக, ஈங்கு இம்மாதவர் உறைவிடம் புகுந்தேன்-இங்கு இச்சங்கத்தார் உறையுமிடம் புகுந்த யான், மறவணம் நீத்த மாசறு கேள்வி - பாவத் தன்மைகளைத் துறந்த குற்றமற்ற மெய்யறிவுடையரான, அறவண வடிகள் அடிமிசை வீழ்ந்து-அறவணவடிகளின் திருவடிமீது விழுந்து, மாபெருந்துன்பங்கொண்டு உளம் மயங்கி-மிக்க பெருந்துன்பத்துடன் மணங்கலங்கி, காதலன்உற்ற கடுந்துயர் கூற-என் காதலன் அடைந்த கொடிய துயரத்தைக்கூற, பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் - உலகில் பிறந்தவர் அடைவது பெருகிய துன்பம், பிறவார் உறுவது பெரும் பேரின்பம்-பிறவாதவர் அடைவது மிக்க பற்றின்வருவது முன்னது-முதற்கண் கூறப்பட்ட பிறப்புப்பற்றினால் உண்டாவது, பின்னது அற்றோர் உறுவது - பின்னருரைத்த பிறவாமை பற்றினை அற்றோர் அடைதற்குரியது, அறிக என்று அருளி - இவற்றை அறிவாயாகவென்று நால்வகை வாய்மையையும் அருளிச் செய்து, ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி - காமம், கொலைகள், பொய்,. களவு என்னும் ஐந்தினையும் முற்றத் துறந்தலாகிய ஐவகைச் சீலங்களையும் உணர்த்தி, உய்வகை இவைகொள் என்று-உய்யும் வழி இவையே இவற்றைக் கொள்க என்று உரவோன் அருளினன்-திண்ணிய அறிவினையுடைய அவ்வடிகள் அருளினர்;
ஆங்ஙனமன்றியும் கேளாய் என்றது மணிமேகலை
பரத்தைமைக் குரியளல்லாக் காரணம் அதுவாம்; யாம் இருவேமும் தவநெறி நிற்றற்குரிய காரணத்தையும் கேள் என்றபடி, மாதவர்-பௌத்த சங்கத்தார். பாவங்கள் பத்துவகைப்படு மென்பர். இவற்றின் விரியை இந்நூலின் 24:30-ஆம் காதைகளானறிக. பிறவார்-பிறப்பினீங்கினோர்; வீடுபெற்றோர், 'பிறந்தோ ருறுவது பெருகிய துன்பம்', என்பது முதலியவற்றால் துக்கம், துக்க நிவாரணம், துக்கோற்பத்தி, துக்க நிவாரண மார்க்கம் என்னும் நான்கு வாய்மையும் முறையே கூறப்பட்டன; ¹"துன்பந் தோற்றம் பற்றே காரணம், இன்பம் வீடே பற்றிலி காரணம், ஒன்றிய வுரையே வாய்மை நான்காவது," என்பதுங் காண்க. சீலம் ஐந்தனையும், ²"கள்ளும் பொய்யுங் காமமுங் கொலையுங், உள்ளக் களவுமென் றுரவோர் துறந்தவை" என்பதனானறிக. உய்வகை இவை என்றமையால் வீட்டைவார்க்கு வாய்மையும் சீலமும் இன்றியமையாதன வென்ப தாயிற்று,. உரவோன் அருளினன் ஆதலால் யாம் தவநெறி நிற்றற்கே யுரியம் என விரித்துரைக்க.
¹ மணி. 3 : 186-8. ² மணி. 24 : 77-8.
3.8
ஊரலருரைத்த காதை
70 75
மைத்தடங் கணணார் தமக்குமெற் பயந்த
சித்திரா பதிக்குஞ் செப்பு நீயென
ஆங்கவ ளுரைகேட் டரும்பெறன் மாமணி
ஓங்குதிரைப் பெருங்கடல் வீழ்த்தோர் போன்று
மையல் நெஞ்சமொடு வயந்த மாலையும்
கையற்றுப் பெயர்ந்தனள் காரிகை திறத்தென்.
70
உரை
75
மைத்தடங் கண்ணார் தமக்கும்-மையணிந்த பெரிய கண்களையுடைய நம் ஆயத்தார்க்கும், எற் பயந்த சித்தராபதிக்கும் செப்புநீ என-என்னைப் பெற்ற சித்திராபதிக்கும் இச்செய்தியை நீ கூறுவாயாக என உரைக்க, ஆங்கவள் உரை கேட்டு-அவள் கூறிய மொழியைக் கேட்டு, அரும்பெறல் மாமணி ஓங்குதிரைப் பெருங்கடல் வீழ்த்தோர் போன்று-பெறற்கரிய பெருமை பொருந்திய மாணிக்கத்தை மிகுந்த அலைகளையுடைய பெரிய கடலில் வீழ்த்தியவர்களை ஒத்து, மையல் நெஞ்சமோடு-மயக்கமுற்ற உள்ளத்துடன் வயந்த மாலையும் கையற்றுப் பெயர்ந்தனள் காரிகை திறத்து-வயந்தமாலையும் மாதவி யிடத்தினின்றும், செயலற்று மீண்டனள் என்க.
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையின் துறவைக்குறிக்கு
மிடத்து, ¹ "ஆங்கது கேட்ட வரசனு நகரமும், ஓங்கிய நன்மணி யுறுகடல் வீழ்த்தோர், தம்மிற் றுன்பர் தாநனி யெய்த" என்று கூறியிருப்பது அறியற் பாலது.
நன்னாளில் மணிமேகலையொடு மாதவி வாராத் துன்பம்
மேல்வரச்சித்திராபதி இரங்கி வயந்தமாலையைக் கூவி அலரினை மாதவிக் குரையென்று கூற, அவன் மாதவியிருந்த மண்டபத்துச் சென்று கண்டு வருந்தி, பண்பில் வாய்மொழி நயம் பாடில்லை, நாணுடைத்து என்ன, அது கேட்ட மாதவி, நாணுத் துறந்தேன்; மணிமேகலை தீத்தொழிற் படாள்; உரவோன் அறிகென் றருளிக் காட்டி, இவற்றைக் கொள்ளென் றருளினன்; இதனை நீ செப்பென்று சொல்ல, வயந்தமாலையும் கேட்டுக் கையற்றுப் பெயர்ந்தனள் என முடிக்க. ஊரலருரைத்த காதை முற்றிற்று.
¹ சிலப். 30 : 29-31.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil