Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 30.2

Maṇimēkalai urai 30.2

Language
Tamil

30.2

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

நின்னுயிர்த் தந்தை நெடுங்குலத் துதித்த

15 மன்னுயிர் முதல்வன் மகர வேலையுள்
முன்னிய வங்க முங்கிக் கேடுறப்
பொன்னி னூசி பசுங்கம் பளத்துத்
துன்னிய தென்னத் தொடுகட லுழந்துழி

14

உரை

18

நின் உயிர்த் தந்தை நெடுங்குலத்து உதித்த - உனக்கு உயிர் போன்ற தந்தையாகிய கோவலனது நெடியகுலத்திற் பிறந்த, மன்னுயிர்முதல்வன்-மிக்க உயிர்கட்கெல்லாம் அருள்செய்யும் முன்னோனொருவன், மகர வேலையுள் முன்னிய வங்கம்-மகரமீன் வாழும் கடலில் தான் செலுத்திச் சென்ற மரக்கலம், பசுங் கம்பளத்து பொன்னின் ஊசி துன்னிய தென்ன - பசுமையான கம்பளத்தில் இரும்பாற் செய்த ஊசியொன்று எளிதிற்றைத்து இடந் தெரியாது மறைந்தாற்போல, முங்கிக் கேடுற - மூழ்கிக் கெட்டதாக, தொடு கடல் உழந்துழி-ஆழ்ந்த கடற்கண்ணே வருந்தினகாலத்து
எ-று.

கப்பளத்து ஊசி துன்னியதென்ன, கடலிடத்தே வங்கம் கேடுற என இயைக்க. கோவலன் பெயர் கேட்ட மாத்திரையே உள்ளம் உருகும் பான்மையளாதலின், "நின்னுயிர்த் தந்தை" யென்றும், அவன் குலத்து முன்னோன் எவ்வுயிர்க்கும் அருள் மேவிய அறவோனாதலின் "மன்னுயிர் முதல்வன்" என்றும் சிறப்பித்தார். பிறாண்டும் அவனை, "ஆதி முதல்வன் போதி மூலத்து, நாதனாவோன்" (29:23-4) என்பர். இரும்பைக் கரும்பொன்னென வழங்கும் வழக்குப்பற்றி, "பொன்" னென்றார். பசுங் கம்பளங் கருங் கடற்கும், பொன்னினூசி வங்கத்துக்கும் உவமை. கடலலையால் உதைப்புண்டு ஏழுநாள்காறும் மிதந்து வருந்தினமையின், "தொடுகடல் உழந்துழி" என்பாராயினர்.

Linked texts (1)