Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 30.3

Maṇimēkalai urai 30.3

Language
Tamil

30.3

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

எழுநா ளெள்லை யிடுக்கண்வந் தெய்தா

20 வழுவாச் சீலம் வாய்மையிற் கொண்ட
பான்மையிற் றனாது பாண்டு கம்பளந்
தானடுக் குற்ற தன்மை நோக்கி
ஆதி முதல்வன் போதி மூலத்து
நாத னாவோ னளிநீர்ப் பரப்பின்

25 எவ்வமுற் றான்றன தெய்வந் தீரெனப்
பவ்வத் தெடுத்துப் பாரமிதை முற்றவும்
அறவர சாளவு மறவாழி யுருட்டவும்
பிறவிதோ றுதவும் பெற்றய ளென்றே
சாரண ரறிந்தோர் காரணங் கூற

19

உரை

29

ஏழு நாள் எல்லை-இவ்வாறு ஏழுநாள்காறும் வருந்தி, இடுக்கண் வந்து ய்தா-உயிரிழக்குந் துன்பம் வந்து நெருங்கிய எல்லையில், சீலம் வாய்மையின் வழுவாக் கொண்ட பான்மையின்-ஐவகைச் சீலமும் நால்வகை வாய்மையும் குற்றமற மேற்கொண்டொழுகும் இயல்பின னாதலால், தனாது பாண்டு கம்பளம்-இந்திரன் தான் வீற்றிருக்கும் பாண்டு கம்பளமிட்ட இருக்கை, நடுக்குற்ற தன்மை நோக்கி - அசையத் தொடங்கிய வமைதி கண்டு, போதி மூலத்து ஆதிமுதல்வன் நாதனாவோன்-இவ்வணிகன் போதியின் அடியிலிருந்து நோற்ற ஆதி முதல்வனும் நாதனுமாகிய போதி சத்துவனாகும் தகுதியுடையவனாவான், நளி நீர்ப்பரப்பின்-பெரிய கடற் பரப்பிலே, எவ்வமுற்றான் தனது எவ்வம்தீர் என - துன்ப முற்ற இவனது துன்பத்தைப் போக்குவாயாக என ஆங்கிருந்த மணிமேகலா தெய்வத்தைப் பணிக்கவும், அறவரசாளவும்-உலகில் அறம்புரியும் வேந்தரே அரசாளவும், அறவாழிஉருட்டவும்-அவரது அறவாணையே நிலவவும், பிறவிதோறு உதவும் பெற்றியன் - எடுத்த பிறப்புத்தோறும் அவர்கட்குஉதவிபுரியும் தன்மையுடையவளாகிய அவள், பவ்வத்து எடுத்து - கடலினின்றும் அவனை யெடுத்து, பாரமிதை முற்றவும் - கரை சேரவும், உதவும் பெற்றியன்-உதவிய செய்கையுடையளாவாள், என்று - என, அறிந்தோர் சாரணர் - அந்நிகழ்ச்சியை யறிந்த சாரணர் வந்து, காரணம் கூற - நினக்கு மணிமேகலை யென்ற பெயர் வைத்தற்குரிய காரணமிது வென்று கூறவே எ - று.

ஏழு நாள் வரையிற் கடலிடை யுழந்தவன் உயிர் இழக்கும் நிலை யெய்திய செய்தியை "இடுக்கண் வந்தெய்தா" என்று குறித்தார். அக்காலமே இந்திரன் இருக்கும் பாண்டு கம்பளம் அசைந்து அவற்கு இவனுறுந் துன்பத்தை யறிவிக்குங் காலம். உலகத்தில் அறவோர் அறச்செயலின் மிகுதியையும் அவர்க்குற்ற கெடுதியையும் பாண்டு கம்பளம் அசைந்து அவ்விந்திரற் கறிவிக்குமென்பது புத்தர் சமணர்களின் கொள்கை. உடனே இந்திரன் அருகு நின்ற மணிமேகலா தெய்வத்தை நோக்கி, "நீ சென்று அவன் இறப்புத் துன்பத்தைப் போக்குக" வென்று பணிப்பவன். அவன் இயல்பை விரியக் கூறுங் கால மன்மையின் சுருக்கமாக, "ஆதி முதல்வன் போதி மூலத்து நாதனாவோன்" என்று அறிவுறுத்தி, "நளிநீர்ப் பரப்பி னெவ்வ முற்றான்றன் எவ்வந்தீர்" என்று பணித்தான். நாதனாவோரைப் போதிசத்துவர் என்ப- போதி - உண்மை ஞானம்; சத்துவரென்பது பாலி மொழியடியாக வந்து வீரனென்னும் பொருள் படுவது. எனவே, போதி சத்துவ ரென்பது ஞானமே வடிவாக முயலும் சான்றோ ரென்பதாம். நாதனாவோ னென்பதும் இக்கருத்தையே வற்புறுத்துமாறு காண்க. இனி மணிமேகலா தெய்வத்தின் இயல்பினை, அறவரசாளவும் அறவாழியுருளவும் மக்கட்குதவும் மாண்புடையளென்று கூறினான். உதவும் பெற்றியள் என்பதை "பாரமிதை முற்றவும்" என்புழியும் கூட்டுக. பாரமிதை - கரை; இதனின் வேறாக உயிர்நிலை யென்றும் சால்பென்றும் பொருள் கூறுதலுமுண்டு. "நின்னுயிர்த் தந்தை" யென்பது முதல் "பிறவி தோறுதவும் பெற்றியள்" என்பது வரை, சாரணர் கோவலற் குரைத்த கூற்றினைக் கொண்டு கூறியது.

Linked texts (1)