Maṇimēkalai's Renunciation 30.24
Maṇimēkalai urai 30.24
- Language
- Tamil
30.24
தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை
145
150
தீய பக்கமுந் தீய வேதுவுந்
தீய வெடுத்துக் காட்டு மாவன
பக்கப் போலியு மேதுப் போலியுங்
திட்டாந்தப் போலியு மாஅ மிவற்றுட்
பக்கப் போலி யொன்பது வகைப்படும்
பிரத்தி யக்க விருத்த மனுமான
விருத்தஞ் சுவசன விருத்த முலோக
விருத்த மாகம விருத்த மப்பிர
சித்த விசேடண மப்பிர சித்த
விசேடிய மப்பிர சித்த வுபயம்
அப்பிர சித்த சம்பந் தம்மென
143
உரை
153
தீயபக்கமும் தீயஏதுவும் தீயஎடுத்துக்காட்டுமாவன - குற்றமுடைய பக்கமும் ஏதுவும் எடுத்துக்காட்டு மென்பவை; பக்கப் போலியும் ஏதுப்போலியும் திட்டாந்தப் போலியுமாம் - பக்கப்போலி ஏதுப்போலி திட்டாந்தப்போலி என வழங்கும்; இவற்றுள்-இம் மூன்றனுள்; பக்கப்போலி என்பது - பக்கப்போலி என்று வழங்குவது; பிரத்தியக்க விருத்தம்...என - பிரத்தியக்க விருத்தமெனவும் அனுமான விருத்தமெனவும், சுவசன விருத்தமெனவும் உலோக விருத்தமெனவும் ஆகமவிருத்த மெனவும் அப்பிரசித்த விசேடண மெனவும் அப்பிரசித்த விசேடிய மெனவும் அப்பிரசித்தவுபயமெனவும் அப்பிரசித்த சம்பந்தமெனவும்; ஒன்பது வகைப்படும்-ஒன்பது வகையாகக் கூறப்படும் எ - று.
போலிகளை முறையே தீயபக்கம் தீயவேது தீயவெடுத்துக் காட்டென முன்னர்க் கூறியது, பக்கப்போலி முதலியவற்றிற்கு இலக்கணம்; அஃதாவது பக்கப் போலியாவது தீயபக்கம் என்றும், ஏதுப்போலி தீய வேது என்றும் திட்டாந்தப்போலி தீயஎடுத்துக்காட்டென்றும் கொள்க வென்பதாம். நியாயப் பிரவேசம் தீயபக்கம் முதலிய மூன்றையும் முறையே பக்ஷாபாசம் ஏதுவாபாசம் திருஷ்டாந்தாபாசம் என்று கூறி அவற்றிற்கு இலக்கணமாகப் பக்ஷாபாசம் பிரத்தியக்ஷ விருத்த முதலாயினவா மென்றும், ஏதுவாபாசம் அசித்தம் அநைகாந்திக முதலாயினவாமென்றும் திருஷ்டாந்தாபாசம் சாதன்மியம் வைதன்மியமென விருவகைத்தாய்ச் சாதன்மியம் சாதனதன்மாசித்தம், சாத்திய தன்மா சித்தம் உபயதன்மாசித்தம் அநந்நுவயம் விபரீ தாந்நுவயம் என்பனவாமென்றும், வைதன்மியம் ஐவகைத்தாய்ச் சாத்தியா வியாவிருத்தி சாதனா வியாவருத்தி உபயா வியாவிருத்தி அவ்வியதிரேகம், விபரீத வியதிரேகமென்பனவா மென்றும் கூறுகிறது. இப் பக்கப்போலி ஏனைத் தருக்கநூல்களில் பிரதிஞ்ஞாபாசம் என்றும் வழங்கும். ஆராய்ச்சியாளர் பக்கப்போலி முதலிய மூன்றனுள், ஏதுப்போலி யொன்றே பழமையானதென்றும். ஏனையிரண்டும் வாற்சாயனரை யுள்ளிட்ட அறிஞர் காலத்தனவல்லவென்றும் கூறுப, உத்யோதகரர் இவ் விரண்டையும் மறுப்பர். 'சிலர் பக்கப்போலி திட்டாந்தப்போலி என்பவற்றைப் பொருளாகக் கொள்ளவில்லை. பிரசத்தபாதர் தம்முடைய பதார்த்ததரும சங்கிரகத்தில் பக்கப்போலிஐந்துவகைப்பட்டு, முறையேபிரத்தியக்க விருத்தம், அநுமான விருத்தம், உலக விருத்தம், ஆகம விருத்தம், சுவவசன விருத்த மென்றியலும் என்பர். மணிமேகலை யாசிரியர் அவ்வைந்தனோடு அப்பிரசித்த விசேடண முதலிய நான்கையும் கூட்டி ஒன்பதாகக் கூறினாராக, அவற்றையே நியாயப்பிரவேச முடையாரும் மேற்கொண்டுள்ளனர். இனி சுலோக வார்த்திக முடையார் இவற்றின் வேறாகக்¹ கூறுவர்.
¹ அனுமான பரிச்சேதம் சு, 52-75
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil