Maṇimēkalai's Renunciation 30.23
Maṇimēkalai urai 30.23
- Language
- Tamil
30.23
தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை
140 ஏதமி றிட்டாந் தம்மிரு வகைய
சாதன் மியம்வை தன்மி யம்மெனச்
சாதன் மியமெனப் படுவது தானே
அநித்தங் கடாதி யன்னுவயத் தென்கை
வைதன் மியதிட் டாந்தஞ் சாத்தியம்
எய்தா விடத்தி லேதுவு மின்மை
இத்திற நல்ல சாதனத் தொத்தன
136
உரை
142
ஏதம்இல் திட்டாந்தம் - குற்றமில்லாத திட்டாந்தம்; சாதன்மியம் வைதன்மியம் என இருவகைய - சாதன்மிய திட்டாந்தமென்றும், வைதன்மிய திட்டாந்தமென்றும் இருவகைப்படுவனவாம்; சாதன்மிய மெனப்படுவது - அவற்றுள் சாதன்மிய திட்டாந்தமெனப்படுவது; அந்நுவயத்து - உடன்பாட்டு நெறிக் கண்; அநித்தம் கடாதி என்கை - சத்தம் அநித்தம், பண்ணப்படுதலால், கடாதிபோல என எடுத்துக் காட்டுதல்; வைதன்மிய திட்டாந்தம் - வைதன்மிய திட்டாந்தமாவது ; சாத்தியம் எய்தாவிடத்தில் ஏதுவும் இன்மை - சாத்திய தன்மம் இல்லாத பொருளிடத்தில் பக்க தன்மமாகிய ஏதுவும் இல்லையாயொழிதல்; இத்திறம் - நன் பக்கம் நல்லேது நற்றிட்டார்ந்தமென்ற இவ்வகைகள் மூன்றும்; நல்ல சாதனத்து ஒத்தன - வழுவின்றிச் சாதித்தற்கு ஒப்ப ஏற்புடையவாகும் எ - று.
முன்னே சபக்க விபக்கங்களைத் தனித்தனியே யெடுத்து இலக்கணங் கூறுதொழிந்தார், ஈண்டு இருவகைத் திட்டாந்தங்களில் சாதன் மியத்துக்கு எடுத்துக்காட்டுக் கூறியும் வைதன்மியத்துக்கு இலக்கணங் கூறியும் விளக்கஞ் செய்தார். சாதன்மியத்துக்கு¹ இலக்கணம், "எங்கு ஏதுவிற்குச் சபக்கத்தில் மாத்திரம் உண்மை சொல்லப்படுகிறதோ அது" என்றும், வைதன்மியத் திட்டாந்தத்துக்கு எடுத்துக்காட்டு, "யாதொன்று செய்யப்பட்டது அது அநித்தமாகக் காணப்பட்டது குட முதலியன போல" என்றும் நியாயப் பிரவேசம் கூறுகிறது. "பக்கமேது திட்டாந்தங்கள், ஒக்க நல்லவும்...உள" என்று முன்பு கூறினமையின், ஈண்டும் அதற்கேற்ப, "ஒத்தன" என்றார்.
¹ பதார்த்த.பக். 234.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil