Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 30.33

Maṇimēkalai urai 30.33

Language
Tamil

30.33

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

190 அப்பிர சித்த சம்பந்த மாவ
தெதிரிக் கிசைந்த பொருள்சா தித்தல்
மாறாம் பௌத்தற்குச் சத்த வநித்தங்
கூறி லவன்ன் கொள்கையஃ தாகலில்
வேறு சாதிக்க வேண்டா தாகும்

186

உரை

190

அப்பிரசித்த சம்பந்தமாவது அப்பிரசித்த சம்பந்த மென்று சொல்லப்படுவது;எதிரிக்கு இசைந்த பொருள் சாதித்தல்- பிரதிவாதிக்கு ஏற்றதாகிய பொருளை வாதியாகிய தானே சாதித் துக் கொடுத்தல்; மாறாம் பௌத்தற்கு-பிரதிவாதியாகிய பௌத்தனை நோக்கி; சத்த அநித்தம் கூறில் - சத்தம் அநித்தம் என்று சொன்னால்; அவன் கொள்கை அஃது ஆகலின் - அவனுடைய கொள்கையுமதுவே யாதாலால்; வேறு சாதிக்க வேண்டாதாகும் - வாதிக்கு வேறே சாதித்தற்கு இடமில்லையாய்ச் குற்றம் எ-று.

பிரதிவாதியாவான் இசைந்து மேற்கொண்டொழுகும் பொருளை ''இசைந்த பொருள்'' என்றும், அதனை மறுக்கும்குறிப்புடைய பொருளை யொடுத்தோதிச் சாதிக்கற்பாலனாகிய வாதி, அது செய்யாது அப்பிரதி வாதிக்குரிய பொருளையே சாதித்துக் கொடுக்குமாற்றால் தோல்வியுறு வதே யன்றி அவனோடொத்த கருத்துடையனாய் இயையும் இயைபு யாண்டும் காணப்படாமையின் ''அப்பிரசித்த சம்பந்த'' மென்றும், அச் செய்கை வாதிக்குக் குற்றமாமென்றும் இதனாற் கூறினார். பிரதிவாதி யாவானொருவன் தன் வாதந் தோற்று வாதி கூறும் வாதத்தை யேற்று அவனோடியையும் இயைபு ''பிரசித்த '' மேயன்றி வாதி தோற்றுப் பிரதி வாதி பக்கல் இயைதல் அப்பிசித்தமாமென வறிக, எடுத்துக்கூறும் பக்க வசனமே வாதிக்குத் தோல்வித் தானமும் பிரதிவாதிக்குத் சித்த சாதனமுமாதலின், பக்கபோலியுமாயிற்றென்க. நன் பக்கமாவது வெளிப்பட்டுள்ள தன்மியும் வெளிப்பட்டுள்ள சாத்தியதன்மத்திறமும் உடைத்தென்றார் ; அவற்றின் வெளிப்படை பிரதிவாதி யறிந்ததாயி னும், அதனை யுடன்படுதல் மறுத்தல் என்ற இரண்டனுள் ஒன்றைச் செய்தற்பொருட்டுப் பக்கவசனம் கூறப்படுதலின் அஃது இதனின் வேறாதல் அறிக ; என்னை, இஃது அப் பிரதிவாதி துணிந்து கொண்ட பொருளையே சாதித்துக் குற்றப்படுதலின். இனி, நியாயப்பிரவேசமுடையார், இவ்வாசிரியர் கூறியவாறு கூறாது பிரசித்த சம்பந்தமென்று கொண்டு அதற்கேற்பப் பிரசித்த சம்பந்தமென்பது சத்தம் செவிப் புலனாமென்பது என்றனர். இது பக்கப்போலி யாதற்குரிய அமைதி யில்லாதிருப்பதனை யாராய்ந்து கண்ட திரு. நாராயணையங்கார் இதனை அப்பிரசித்தா சம்பந்தம் எனத் திருத்திக் கொண்டுரைப்பர். திபேத்திய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூலில் அந்தப் பிரசித்த சம்பந் தத்துக்குத் தீ வெம்மையுடைய தென்றோரெடுத்துக்காட்டுக் காணப் படுவதாக ஆசிரியர் வித்தியாபூஷணர் மொழிபெயர்த்துள்ளார். இனி, திரு. விதுசேகரனார் இப் பிரசித்த சம்பந்தமென்னும் பக்கபோலியின் இயல்பை யாராய்ந்து,
நியாயப்பிரவேச சமஸ்கிருத மொழிபெயர்ப்பில் கோளாறுண்டெனத் துணிகின்றார். நியாப்பிரவேச பதிப்பாசிரிய ரான துருவனார் நியாயப்பிரவேச விருத்தியுரை முதல் பல நூல்களை யாராய்ந்து, இதன் சமஸ்கிருத மொழிபெயர்ப்பில் தவறில்லையென்று காட்டுகின்றார். எது எவ்வாறாயினும் நியாயப்பிரவேசமுடையார் கொண்ட பிரசித்த சம்பந்தமும் மணிமேகலையாசிரியர் கொண்ட அப்பிரசித்த சம்பந்தமும் வேறு வேறு நிற்பனவென்றும் இருநூல்களும் முறையே காட்டும் எடுத்துக்காட்டுகள் அவ்வற்றிற் கேற்பனவென்றும் துணிந்து கோடற்குரியனவாம். தமிழகத்தில் நிலவிய பௌத்தர்களிடையே பக்கப்போலி யொன்பது வகையாகப் பகுப்புண்டு நிலவிய காலத்தே வடநாட்டில் வடமொழிவாணரிடையே பிரத்தியக்க விருத்த முதலிய ஐந்துமே நிலவின; தமிழகத்திலிருந்து வடநாடு சென்ற பௌத்தர்கள் பக்கப்போலி யொன்பது வகையினையும் எடுத்துக் கூறினர். அங்ஙனம் கூறியோருள் நியாயப்பிரவேச முடையார் தாம்முதன் முதலில் நூல்வாயிலாக வடமொழியில் வெளிப்படுத்தினார். அப்பிரசித்த சம்பந்த மென மணிமேகலையாசிரியர் முதலிய அக்காலப் பௌத்த ஆசிரியன்மார் உரைத்த பக்கபோலியைப் பிரசித்த சம்பந்தமென பிறழக் கொண்ட பிறழ்ச்சி முன்னுக்குப்பின் முரண்விளைத்துநிற்கின்றதென்றும், நியாயப் பிரவேசத்திற் குறிக்கப்பட்ட பிழை, பின்னே தமிழகத்திற் புலனாகாது திபேத்துக்கும் சீனாவுக்கும் சென்று மறுபடியும் வடமொழிக்குள்ளே சுழலத் தொடங்கினமையின், அதன் விருத்தியுரைகாரராதல் அவரிற் பின்வந்தோராதல் ஒருவரும் தமிழ்நூல்களை யாராய்ந்து திருத்தஞ் செய்து கொள்ளாதொழிந்தனரென்றும் அறிக. இவ் வுண்மையை நுனித்துணரும் மதுகையில்லாதார் சிலர், நியாயப்பிரவேசத்தின் வழி வந்த தாகும் இம்மணிமேகலையென்று கொண்டு ஈண்டுக் கூறப்படும். அப்பிரசித்த சம்பந்த முதலியவற்றிக்குத்¹ தமிழ்நெறி யல்லாத முறை யிற் பொருள் கூற முயன்று குன்றுமுட்டிய குரீஇப்போல இடர்ப்படு வாராயினர்.

1 O. R. J. Vol. XI. P. 125-6.

Linked texts (1)