Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 30.43

Maṇimēkalai urai 30.43

Language
Tamil

30.43

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

235

240
சபக்கைக தேச விருத்தி விபக்க
வியாபி யாவ தேதுச் சபக்கத்
தோரிடத் தெய்தி விபக்கத் தெங்கும்
உண்டாத லாகுஞ் சத்தஞ் செயலிடைத்
தோன்றா தாகு மநித்த மாகலின்
என்றா லநித்த மென்ற வேதுச்
செயலிடைத் தோன்றா மைக்குச் சபக்க
மின்னினு மாகா சத்தினு மின்னின்
நிகழ்ந்தா காசத்திற் காணா தாகலின்
அநித்தங் கடாதியி னொத்தலிற் கடம்போல்
அழிந்து செயலிற் றோன்றுமோ மின்போல்
அழிந்து செயலிற் றோன்றா தோவெனல்

231

உரை

242

¹சபக்கைக தேசவிருத்தி விபக்க வியாபியாவது-சபக்க ஏகதேச விருத்தி விபக்க வியாபியென்னும் ஏதுப்போலியென்பது; சபக்கத்து ஓர் இடத்து எய்தி-சபக்கப் பொருள்களில் ஏதேனும் ஒன்றிற் பொருந்தி; விபக்கத்து எங்கும் உண்டாதலாகும் - விபக்கப் பொருள்கள் எல்லாவற்றிலும் பொருந்தி யிருப்பதாகும்: சத்தம் செயலிடைத் தோன்றாதாகும் - சத்தம் செயலிடத்துத் தோன்றுவ தன்றெனப் பக்க வசனமும்; அநித்தமாகலின் என்றால் - அநித்தமாதலால் என எதுவும் சொன்னால்; செயலிடைத் தோன்றாமைக்குச் சபக்கம் - செயலிடத்துத் தோன்றாமையாகிய சாத்தியதன்மம் நிலவுதற்குரிய சபக்கமான; மின்னினும் ஆகாசத்தினும் - மின்னும் ஆகாசமுமாகிய இவற்றினுள்; மின்னின் நிகழ்ந்து-மின்னிடத்தே பொருந்தி; ஆகாசத்திற் காணாதாகலின்- ஆகாசத்தினிடத்தே பொருந்தாமையால்; அநித்தம்-அநித்தமென்னும் ஏது; கடாதியின் ஒத்தலின்-விபக்கமான கட முதலிய அநித்தப் பொருள்களில் முழுதும் பொருந்துவதால்; கடம்போல் அழிந்து செயலில் தோன்றுமோ - அக் கட முதலியவை போல அழிதலால் செயலிடத்தே தோன்றுமோ; மின்போல் அழிந்து செயலில் தோன்றாதோ - மின்னுவானது அழிந்து செயலிடத்துத் தோன்றாமை போல அழிதலால் தோன்றாதொழியுமோ; எனல் - என ஐயுற்றுத் துணிவெய்தா தொழிவதாம் எ - று.

சபைக்கைகதேச விருத்தி விபக்க வியாபி யென்பதன் இலக்கணம் இதுவென்பார், "ஏது சபக்கத் தோரிடத் தெய்தி விபக்கத் தெங்கு முண்டாதலாகு"மென்றார். எங்கும் உண்டாதலாவது எல்லாப் பொருளிடத்தும் ஒக்க வியாத்தி யுடையதாதல். ஏக தேசப் படர்ச்சியை வியாத்தியென்னாராதலின், "ஏக தேச விருத்தி" யென்றார். விருத்தி2 "படங் குடிலாவதுபோல் விரிவது," இனி, இவ்வேதுப் போலி சபக்கத்து ஏகதேச விருத்தியுடைத்தாதலை விளக்கலுற்று, "அநித்தமென்ற வேது செயலிடைத் தோன்றாமைக்குச் சபக்கம் மின்னினும் ஆகாசத்தினும் மின்னினிகழ்ந்து ஆகாசத்திற் காணாதாகலின்" என்றார். சத்தம் செயலிடைத் தோன்றாது என்ற பக்க வசனத்துச் செயலிடைத்தோன்றாமை சாத்தியதன்மம்; அத்தன்மம் மின்னினும் ஆகாயத்தினும் பொருந்துதலின் அவை யிரண்டும் சபக்கமாதல் தெள்ளிதாதலால், "செயலிடைத் தோன்றாமைக்குச் சபக்க மின்னினும் ஆகாசத்தினும்" என்றார்; என்றது மின்னும் ஆகாசமும் செயப்படுபொருளல்ல வென்றவாறு. பக்கதன்மமாகிய அநித்தியத்துவம் சபக்க மிரண்டனுள் மின்னிடத்துளதாதலாலும் ஆகாசத்தில் இல்லையாதலாலும், "மின்னினிகழ்ந் தாகாசத்திற் காணாதாகலின்"என்றார். இது சபக்கைக தேச விருத்தி கூறியது. இனி, சபக்கத்துக்குரிய செயலிடைத் தோன்றாமையாகிய தன்மத்தின் மறுதலையான செயலிடைத் தோன்றுவதைத் தன்மமாகவுடைய விபக்கப் பொருள் இவையென்பார் கடம் முதலியனவென்று கூறி, அக் கட முதலியவற்றில், சபக்கத்தேகதேச விருத்தியாய் நிற்கும் அநித்தத்துவமாகிய பக்கதன்மம் முழுதும் வியாபித்திருக்கின்ற தென்பார், "அநித்தம் கடாதியின் ஒத்தலின்" என்றார். இதனால் விபக்க வியாபகம் கூறியவாறாயிற்று. இவ்வாறு சபக்கத்தேக தேச விருத்தியும் விபக்கத்து வியாத்தியுடைமையும் கூறியவர், இவ்வேது அநைகாந்திக வேதுப்போலியாவதும் கூறுவார், "கடம்போலழிந்து செயலிற் றோன்றுமோ மின்போலழிந்து செயலிற் றோன்றாதோ வெனல்" என்றார். விபக்கத்து முழுதும் வியாத்தியுடையதாதலின் அதுபற்றி, 'கடம்போலழிந்து செயலிற் றோன்றுமோ" என்றும், சபக்கத்தேகதேசப் பொருத்தம்பற்றி, "மின்போல் அழிந்து செயலிற் றோன்றாதோ" வென்றும் கூறினார். இவ்வாறு இருதலையும் ஐயத்துக் கிடமாதல் தோன்றவே அநைகாந்திகமாதல் விளங்கிற்று. அழிந்தென்னும் செய்தெனெச்சம் காரணப் பொருட்டு.

¹ நியா. பிர. பக் 4-2--10. ² விருத்தியைச் சூக்கும பரிணாமமென்றும் கூறுப

Linked texts (1)