Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 30.42

Maṇimēkalai urai 30.42

Language
Tamil

30.42

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

225

230
என்ன லசாதா ரணமா வதுதான்
உன்னிய பக்கத் துண்டா மேதுச்
சபக்க விபக்கந் தம்மிலின் றாதல்
சத்த நித்தங் கேட்கப் படுதலின்
என்னிற் கேட்கப் படலெனு மேதுப்
பக்கத் துள்ள தாயி னல்லது
சபக்க விபக்கத்து மீட்சித் தாதலிற
சங்கய மெய்தி யநேகாந் திகமாஞ்

223

உரை

230

¹அசாதாரணமாவது-அசாதாரண மென்னும் அநைகாந்திக வேதுப் போலியாவது; உன்னிய பக்கத்து உண்டாம் ஏது - சாதிக்கக் கருதிச் சபக்க சொல்லும் பக்க வசனத்துக்குப் பொருந்தி நிற்கும் ஏதுவானது; சபக்க விபக்கம் தம்மில் இன்றாதல் - அப்பக்க தன்மி யொழிய ஏனைச் சபக்க விபக்கங்கலில் முற்றும் பொருந்தா தொழிவதாம்; சத்தம் நித்தம் கேட்கப்படுதலின் என்னில்-சத்தம் நித்தம் என்று பக்க வசனமும் அதனிடத்துள்ள கேட்கப்படுதலா லென்னும் ஏதுவம் எடுத்துக் கூறினால்; கேட்கப்படலெனும் ஏது - செவியாற் கேட்கப்படுதலென்னும் ஏது; பக்கத்து உள்ளதாயின் அல்லது - பக்க தன்மியாகிய சத்தத்தின்கண் உளதாவதேயன்றி; சபக்க விபக்கத்து மீட்சித்து - சபக்க விபக்கங்களில் இல்லையாய்; சங்கயமெய்தி-ஐயத்துக் கிடமாய்; அநைகாந்திகமாம் - அநைகாந்திகமென்னும் குற்றமாம் எ - று.

"உன்னிய பக்கத்து" என்பதற்கு, "உன்னிய ஏது" என்புழி உரைத்தது போல வுரைத்துக் கொள்க. "பக்கத்து உண்டாமேது" என்றது அவ்வசாதாரண வேது சபக்க விபக்க மிரண்டினும் பொருந்தாது பக்க தன்மி யிடத்து மட்டிற் பொருந்தி யிருப்பதை யுணர்த்தி நின்றது. "கேட்கப்படுதலின்" என்புழிச் செவியாலென்பது அவாய் நிலையான் வந்தது. மீட்சி: எதிர்மறை; ஈண்டு இன்மை குறித்து நின்றது. சங்கயமாவது: நித்தமும் அநித்தமுமுடைய பொருள்களுள் சத்த மொழிந்த பிற எப்பொருளைத் துணிதற்குச் செவியாற் கேட்கப்படுவது ஏதுவாம் என ஐயுறுதல். இவ்வாறே² நியாயப் பிரவேசமுடையாரும், "கிம் பூதஸ்ய ஸ்ராவணத்வம்" எனக் கூறுதல் காண்க; ஈண்டும் இவ்வடநூலாசிரியர் அசாதாரணத்துக்கு இலக்கணம் கூறிற்றிலர். இனி, இவ் வசாதாரணம் பிரசத்தபாதரால் அனத்திய வசித்தம் என்று கூறப்படுகிறது. "உன்னிய பக்கத் துண்டா மேது சபக்க விபக்கந் தம்மில் இன்றாதல்" என ஈண்டு மணிமேகலை யாசிரியர் கூறிய இலக்கணமே பிரசக்தபாதரால் அந்த அனத்திய வசித்தத்துக்கும் கூறப்படுகிறது; ஆனால் அவர் "சங்கயமெய்தி அநைகாந்திகமாம்" என்பதை மறுத்து இதன்பால் ஐயத்துக் கேதுவாகிய பொதுத் தன்மை கிடையாதெனக் காட்டுவர்³ சத்தபதார்த்தி யென்னும் நூலில் இந்த அனத்தியா வசித்தத்தைக் கூறுமிடத்துப் பாடவேறுபாடாகச் சந்திக்தா சித்தமும் காணப்படுவதை நோக்கின், அனத்தியாவசித்தத்தின்கண் ஐயத்துக் கிடமுண்டெனக் கருதுவோரு முளரென்றற் கெண்ண முண்டாகிறது; பிரசத்தபாதர் நிகழ்த்தும் தடைவிடைகளும் அவ்வெண்ணத்தை வற்புறுத்துகின்றன. ஆதலால், மணிமேகலை யாசிரியர் "சங்கய மெய்தி யநைகாந்திகமாம்" என்பது ஒருசாராசிரியர்க் குடன்பாடென்பது இனிது விளங்கும். ஆயினும் பக்கத்துண்டாமேது, சபக்க விபக்கங்களில் ஒப்பவோ மிக்கோ குறைந்தோ இருந்தாலன்றி, ஐயம் பிறவாதாகலின், பிரசத்தபாதர் கூறுவது பொருத்தமாமென வறிக. பக்க தன்மியின்கண் உள்ள தன்மம் பொதுத் தன்மமாகாது அதற்கே சிறப்பாக வுரியதாயின் அதனிடத்தே ஐயம் நிகழாதென்பர். செவியால் கேட்கப்படுவதாகிய தன்மம் சத்தமொன்றிற் கன்றிப் பிறவெவற்றிற்கும் இல்லாமையும் அறிக.

¹ நியா. பிர. பக். 3-4. செந்தமிழ் XXXII. பக். 235-9. ² நியா. பிர. பக். 4-2. 3 பிரசத் பாடி. பக்த. 238-9.

Linked texts (1)