Maṇimēkalai's Renunciation 30.46
Maṇimēkalai urai 30.46
- Language
- Tamil
30.46.1
தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை
30.46.2
270 விருத்த வியபிசாரி திருந்தா வேதுவாய்
விருத்த வேதுவிற் கும்மிடங் கொடுத்தல்
சத்த மநித்தஞ் செயலிடைத் தோன்றலின்
சபக்கமா யுள்ள கடாதி நிற்கச்
சத்த நித்தங் கேட்கப் படுதலிற்
சத்தத் துவம்போ லெனச்சாற் றிடுதல்
இரண்டினுஞ் சங்கயமா யேகாந்த மல்ல
30.46.3
267
30.46.4
உரை
30.46.5
274
30.46.6
விருத்த வியபிசாரி-விருத்த வியபிசாரி யென்னும் அநைகாந்திக வேதுப்போலியாவது; திருந்தா ஏதுவாய் - திருந்திய வேதுவன்றாய்; விருத்த வேதுவிற்கும் இடம் கொடுத்தல்-விருத்த வேதுவாகிய ஏதுப்போலிருக்கும் இடம் கொடுத்து அதனோடுறைவது; சத்தம் அநித்தம் செயலிடைத் தோன்றலின் - பிரதிவாதி யாவான் சத்தம் அநித்தம் செய்யபட்டுத் தோன்றுதலால் என்றும்; ஒத்தது எனின் - இஃது ஏதுவுக்குரிய இலக்கண முற்றும் பொருந்தியதென்றும் கூறுவானாயின்; சத்தம் நித்தம் கேட்கப்படுதலின் சத்தத்துவம்போல் எனச் சாற்றிடுதல் - சத்தம் நித்தம் செவியாற் கேட்கப்படுவதால் சத்தத் தன்மைபோல என வாதியாகிய தான் அவற்குச் சொல்லுவது; இரண்டினும் சங்கயமாய் - இவ்விரண்டேதுக்களையும் ஒருங்கு காண்பதால் இவை ஐய வேதுவாய்; ஏகாந்தமல்ல - அநைகாந்திகமாம் எ - று.
30.46.7
திருந்திய வேதுவாவது ஏதுவுக்குரிய இலக்கணத்திற்குறைபாடிலதாய்ச் சபக்கத்தின்கண் பல பொருளினும் சென்று பொருந்தும் செம்மையுடையது. இவ்வாறு பல பொருட்களிற் சென்று பொருந்தும் செம்மை குறைந்தது திருந்தா ஏதுவாம்; இஃது எடுத்துக்காட்டப்படும் சபக்கப்பொருளொன்றி னன்றிப்பிறவற்றிற் சென்று பொருந்தாதென வறிக. சத்தம் நித்தம் கேட்கப்படுதலின் என்ற பக்க வசனமும் ஏதுவாகிய இக் கூற்றின்கண், கேட்கப்படுதலாகிய ஏது பக்கப் பொருளாகிய சத்தத்தின் கண்ணும், சத்தத்துவம் என்று காட்டப்படும் சபக்கத்தின்கண்ணும் பொருந்துகின்றதேயன்றி, சத்தத்துவ மொழிந்த ஏனையவற்றின்கண் சென்று பொருந்தும் செம்மையில்லாமை யறிக; இது பற்றியே இது "திருந்தா வேது" எனப்பட்டது. திருந்தாமை, ஈண்டுப் பயிலப்படாமைமேற்று. விருத்த வேது, துணி பொருளைச் சாதியாது மறுதலை பயப்பது. பிரதிவாதி காட்டிய "செயலிடைத் தோன்றலின்" என்ற ஏது அநித்தமென்னும் பொருளைச் சாதித்து, வாதியின் துணிபொருளாகிய நித்தத்துவத்தைச்சாதியாமையின் விருத்த வேதுவாயிற்று. ஈண்டுக் கூறிய திருந்தா வேதவானது பிரதிவாதி கூறிய பக்கதன்ம வசனமாகிய "செயலிற் றோன்றலின்" என்ற விருத்தவேதுவுடன், சத்தமாகிய பொருளிடத்தே பொருந்தி உடங்கிருத்தலின் வியபிசாரியாயிற்று. ஆகவே, வாதி கூறும் திருந்தா ஏது வொன்று பிரதிவாதி கூறும் ஏதுவுடன் கூடியிருப்பது விருத்த வியபிசாரி யென்னும் ஏதுப்போலி என்றவாறாம். இவ்விருத்த வியபிசாரி யென்னுந் தொடர், மூன்றாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்க தொகை. "விருத்த வியபிசாரி திருந்தா வேதுவாய், விருத்த வேதுவிற்கும் இடங் கொடுத்த" லென்பது இலக்கணமும், "சத்தம் அநித்தம் செயலிடைத் தோன்றலின், ஒத்ததெனின் அச்செயலிடைத் தோன்றற்குச் சபக்கமாயுள்ள கடாதி நிற்கச் சத்த நித்தம் கேட்கப்படுதலின் சத்தத்தவம் போலெனச் சாற்றிடுதல்" என்பது எடுத்துக்காட்டு வாயிலாக விளக்கமுங் கூறியவாறு. இனி அடுத்து வரும் விருத்த வேதுப் போலிக்கு ஈண்டு விருத்தவேது கூறியது ஓராற்றல் தோற்றவாய் செய்தவாறுமாயிற்று. இவ்விளக்கத்தில் வரும் வாதி மீமாஞ்சகனென்றும், பிரதிவாதி வைசேடிகனென்றும் கொள்க; கொள்ளவே, சத்தம் நித்தத்துவ முடையதெனச் சாதிக்க முயலும் மீமாஞ்சகன் "கேட்கப்படுதலின்" என்ற ஏதுவைக் காட்டிச் சத்தத்துவத்தைச் சபக்கமாக நிறுத்தி வற்புறுத்தினானாயினும், சத்தம் அநித்தத்துவமுடைய தென்பதனை வைசேடிகன் "செயலி
30.46.8
சாதாரணம் முதல் விருத்த வியபிசாரி யீறாகக் கூறிய அறுவகை ஏதுப் போலிகளுட் சில, நையாயிகர் வைசேடிகர் முதலியோர் நூல்களினும் காணப்படுகின்றன. அநைகாந்திகம் சவ்வியபிசாரியென்றும் சந்தித்த வேதுப்போலி யென்றும் அநிச்சித வேதுப்போலி யென்றும் வழங்கும். சாதாரணம் அசாதாரணம் என்பன பிரசத்தபாதரால் மேற் கொள்ளப்பட்டிருக்கின்றன. அவர் சாதாரண மொன்றே ஐய வேதுப் போலியாமென்று கூறி, அதன்கண் சபக்கைகதேச விருத்தி விபக்க வியாபி, விபக்கைகதேச விருத்தி சபக்க வியாபி, உபயைகதேச விருத்தி யென்ற மூன்றும் அடங்குமாறு கூறுகின்றார். மேலும், அவர் அசாதாரணம் ஐயவேதுப்போலியாகாதென்று சொல்லி, அதனை அனத்தியாவசித்தம் என்று பெயரிட்டுத் தனியாகக் கொள்வர்; விருத்த வியபிசாரி யேதுப்போலி ஐய வேதுப்போலியாகாதென மறுப்பர். குமரிலபட்டர் சாதாரணம் அசாதாரணம் விருத்த வியபிசாரி என்ற மூன்றையும் மேற்கொண்டு, விருத்த வியபிசாரிக்குக் "காற்று உருவமுடைத்து, பரிசிக்கப்படுவதால்; காற்று அருவமானது, நிறமின்மையால்" என்று எடுத்துக்காட்டும் கூறுவர். இவ்வாறு பலரும் கூறுவனவற்றை யெல்லாம் நோக்குமிடத்து அநைகாந்திக முதலிய வேதுப்போலியைப் பலவகையாக வகுத்துக் கூறிய முதன்மை பௌத்தர்கட்கே யுரியதென்று இனிது தோன்றுகிறது. மேலும், இப்பாகுபாடு திக்கநாகரால் முதற்கண் விளக்கிக் கூறப்பட்டதென்று ஆராய்ச்சியாளர் பலரும் ஒரு முகமாக வுரைப்பதனாலும், அத் திக்க நாகர் தொடக்கத்தில் தமிழகத்துக் காஞ்சியம்பதியிலிருந்து புலமை சிறந்த பின்பே வடநாடு சென்றனரென அவர் வரலாறு கூறுவதனாலும், அவருக்கு இத்தெளிவினை நல்கிய நியாயநூற்புலவர் தமிழகத்தே அவர் நாளிலும் அதற்கு முற்காலத்தும் இருந்தமை புலனாதலின், இம்மணிமேகலை யாசிரியர் இவற்றைத் தம் தமிழாசிரியன்மார் கூறிப் போந்த முறையே கூறுகின்றாரென்பது மனங் கொள்ளற்பாற்று திக்க நாகர்க்குப் பிற்போந்த தரும கீர்த்தி முதலாயினோர் சாதாரணம் அசாதாரணமென்ற இரண்டையுமே மேற்கொண்டு, பிறவற்றை வேறுவகை யிற் றொகுத்துக்கொண்டனர். அவ்வாறு தாம் தொகுத்தும் வகுத்தும் மேற்கோடல் பற்றிக் கூறியவற்றை ஈண்டு விரிப்பிற் பெருகுமாதலின் அவற்றை அவரவர் நூல்களிற் கண்டுகொள்க.
30.46.9
இனி, சைவாகமங்கள், அநைகாந்திகத்தைச் சவ்வியபிசாரி யென்றும், அது சாதாரணம், அசாதாரணம், அணத்தியாவசித்தமென மூவகைப்படுமென்றும் உரைக்கின்றன. (பௌஷ். பாடி. சு. 890-1)
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil