Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 30.46.8

Maṇimēkalai urai 30.46.8

Language
Tamil

30.46.8

சாதாரணம் முதல் விருத்த வியபிசாரி யீறாகக் கூறிய அறுவகை ஏதுப் போலிகளுட் சில, நையாயிகர் வைசேடிகர் முதலியோர் நூல்களினும் காணப்படுகின்றன. அநைகாந்திகம் சவ்வியபிசாரியென்றும் சந்தித்த வேதுப்போலி யென்றும் அநிச்சித வேதுப்போலி யென்றும் வழங்கும். சாதாரணம் அசாதாரணம் என்பன பிரசத்தபாதரால் மேற் கொள்ளப்பட்டிருக்கின்றன. அவர் சாதாரண மொன்றே ஐய வேதுப் போலியாமென்று கூறி, அதன்கண் சபக்கைகதேச விருத்தி விபக்க வியாபி, விபக்கைகதேச விருத்தி சபக்க வியாபி, உபயைகதேச விருத்தி யென்ற மூன்றும் அடங்குமாறு கூறுகின்றார். மேலும், அவர் அசாதாரணம் ஐயவேதுப்போலியாகாதென்று சொல்லி, அதனை அனத்தியாவசித்தம் என்று பெயரிட்டுத் தனியாகக் கொள்வர்; விருத்த வியபிசாரி யேதுப்போலி ஐய வேதுப்போலியாகாதென மறுப்பர். குமரிலபட்டர் சாதாரணம் அசாதாரணம் விருத்த வியபிசாரி என்ற மூன்றையும் மேற்கொண்டு, விருத்த வியபிசாரிக்குக் "காற்று உருவமுடைத்து, பரிசிக்கப்படுவதால்; காற்று அருவமானது, நிறமின்மையால்" என்று எடுத்துக்காட்டும் கூறுவர். இவ்வாறு பலரும் கூறுவனவற்றை யெல்லாம் நோக்குமிடத்து அநைகாந்திக முதலிய வேதுப்போலியைப் பலவகையாக வகுத்துக் கூறிய முதன்மை பௌத்தர்கட்கே யுரியதென்று இனிது தோன்றுகிறது. மேலும், இப்பாகுபாடு திக்கநாகரால் முதற்கண் விளக்கிக் கூறப்பட்டதென்று ஆராய்ச்சியாளர் பலரும் ஒரு முகமாக வுரைப்பதனாலும், அத் திக்க நாகர் தொடக்கத்தில் தமிழகத்துக் காஞ்சியம்பதியிலிருந்து புலமை சிறந்த பின்பே வடநாடு சென்றனரென அவர் வரலாறு கூறுவதனாலும், அவருக்கு இத்தெளிவினை நல்கிய நியாயநூற்புலவர் தமிழகத்தே அவர் நாளிலும் அதற்கு முற்காலத்தும் இருந்தமை புலனாதலின், இம்மணிமேகலை யாசிரியர் இவற்றைத் தம் தமிழாசிரியன்மார் கூறிப் போந்த முறையே கூறுகின்றாரென்பது மனங் கொள்ளற்பாற்று திக்க நாகர்க்குப் பிற்போந்த தரும கீர்த்தி முதலாயினோர் சாதாரணம் அசாதாரணமென்ற இரண்டையுமே மேற்கொண்டு, பிறவற்றை வேறுவகை யிற் றொகுத்துக்கொண்டனர். அவ்வாறு தாம் தொகுத்தும் வகுத்தும் மேற்கோடல் பற்றிக் கூறியவற்றை ஈண்டு விரிப்பிற் பெருகுமாதலின் அவற்றை அவரவர் நூல்களிற் கண்டுகொள்க.

Linked texts (1)