Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 30.46.7

Maṇimēkalai urai 30.46.7

Language
Tamil

30.46.7

திருந்திய வேதுவாவது ஏதுவுக்குரிய இலக்கணத்திற்குறைபாடிலதாய்ச் சபக்கத்தின்கண் பல பொருளினும் சென்று பொருந்தும் செம்மையுடையது. இவ்வாறு பல பொருட்களிற் சென்று பொருந்தும் செம்மை குறைந்தது திருந்தா ஏதுவாம்; இஃது எடுத்துக்காட்டப்படும் சபக்கப்பொருளொன்றி னன்றிப்பிறவற்றிற் சென்று பொருந்தாதென வறிக. சத்தம் நித்தம் கேட்கப்படுதலின் என்ற பக்க வசனமும் ஏதுவாகிய இக் கூற்றின்கண், கேட்கப்படுதலாகிய ஏது பக்கப் பொருளாகிய சத்தத்தின் கண்ணும், சத்தத்துவம் என்று காட்டப்படும் சபக்கத்தின்கண்ணும் பொருந்துகின்றதேயன்றி, சத்தத்துவ மொழிந்த ஏனையவற்றின்கண் சென்று பொருந்தும் செம்மையில்லாமை யறிக; இது பற்றியே இது "திருந்தா வேது" எனப்பட்டது. திருந்தாமை, ஈண்டுப் பயிலப்படாமைமேற்று. விருத்த வேது, துணி பொருளைச் சாதியாது மறுதலை பயப்பது. பிரதிவாதி காட்டிய "செயலிடைத் தோன்றலின்" என்ற ஏது அநித்தமென்னும் பொருளைச் சாதித்து, வாதியின் துணிபொருளாகிய நித்தத்துவத்தைச்சாதியாமையின் விருத்த வேதுவாயிற்று. ஈண்டுக் கூறிய திருந்தா வேதவானது பிரதிவாதி கூறிய பக்கதன்ம வசனமாகிய "செயலிற் றோன்றலின்" என்ற விருத்தவேதுவுடன், சத்தமாகிய பொருளிடத்தே பொருந்தி உடங்கிருத்தலின் வியபிசாரியாயிற்று. ஆகவே, வாதி கூறும் திருந்தா ஏது வொன்று பிரதிவாதி கூறும் ஏதுவுடன் கூடியிருப்பது விருத்த வியபிசாரி யென்னும் ஏதுப்போலி என்றவாறாம். இவ்விருத்த வியபிசாரி யென்னுந் தொடர், மூன்றாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்க தொகை. "விருத்த வியபிசாரி திருந்தா வேதுவாய், விருத்த வேதுவிற்கும் இடங் கொடுத்த" லென்பது இலக்கணமும், "சத்தம் அநித்தம் செயலிடைத் தோன்றலின், ஒத்ததெனின் அச்செயலிடைத் தோன்றற்குச் சபக்கமாயுள்ள கடாதி நிற்கச் சத்த நித்தம் கேட்கப்படுதலின் சத்தத்தவம் போலெனச் சாற்றிடுதல்" என்பது எடுத்துக்காட்டு வாயிலாக விளக்கமுங் கூறியவாறு. இனி அடுத்து வரும் விருத்த வேதுப் போலிக்கு ஈண்டு விருத்தவேது கூறியது ஓராற்றல் தோற்றவாய் செய்தவாறுமாயிற்று. இவ்விளக்கத்தில் வரும் வாதி மீமாஞ்சகனென்றும், பிரதிவாதி வைசேடிகனென்றும் கொள்க; கொள்ளவே, சத்தம் நித்தத்துவ முடையதெனச் சாதிக்க முயலும் மீமாஞ்சகன் "கேட்கப்படுதலின்" என்ற ஏதுவைக் காட்டிச் சத்தத்துவத்தைச் சபக்கமாக நிறுத்தி வற்புறுத்தினானாயினும், சத்தம் அநித்தத்துவமுடைய தென்பதனை வைசேடிகன் "செயலி

Linked texts (1)