Maṇimēkalai's Renunciation 30.67.10
Maṇimēkalai urai 30.67.10
- Language
- Tamil
30.67.10
இனி, நியாயப் பிரவேசமுடையார், இவ் வாசிரியர் கூறியதுபோல இலக்கணங் கூறாது உதாரணமட்டிற் கூறுவர். இதனைப் பிரசத்தபாதர் விபரீத வியாவிருத்த மென்றனர். இதுகாறுங் கூறியவாற்றால், மணிமேகலை யாசிரியர் காலத்தே தமிழகத்து நிலவிய பௌத்தரிடையே பக்கப்போலி ஒன்பதும், ஏதுப்போலி பதினான்கும் திட்டாந்தப்போலி பத்துமாக முப்பத்துமூன்று போலிகள் நிலவின வென்பதும், இவற்றையே நியாயப் பிரவேசமுடையார் மேற்கொண்டு வடநாட்டுப் புத்தரிடையே பரப்ப,அவர்கள் ஏனையோர் கூறியவற்றோடு இயைத்துப் பிற்காலத்தே தமக்கேற்றவாறு பெருக்கிக் கொண்டனரென்பதும்உணரற் பாலனவாம். காட்சி, கருத்து என்ற இருவகை அளவைகளையும்கூறற்கு முன், அளவையின் இன்றியமையாமை, அளத்தற்குரிய கருவிகள், அவை பொருள்களை யளக்குந்திறம், அறிவ, அறியாமை, ஐயம், வழு முதலியனவும், அளவைக்குப் பின் கூறப்படும் வாதவியல், தோல்வி வகை முதலியனவும் இந் நூற்கண் கூறப்படவில்லை. நியாயப் பிரவேசமுடையார். தம் நூற்கண் கூறற்குரியன, முறையே, சாதனாபாசம், சுவார்த்தப் பிரமாணம்,பிரத்தியக்கம், அனுமானம்,பிரத்தியக்காபாசம், அனுமானாபாசம், தூஷணம், தூஷணாபாசம் என எட்டு வகையாகக் கூறுதலால், இவ் வெட்டும், மணிமேகலை யாசிரியர் காலத்தே நம் தமிழகத்தே நிலவின வென்பது துணிபாம்.ஆயினும்,இவர் ஈண்டு அளவை நூல் கூறவந்தா ரல்லராகலின், உண்மை யுணர்வுக்கு இன்றியமையாவெனக் கொண்ட அளவை யிரண்டையுமே கூறலுற்று, அவற்றுட் காட்சியைச்சிறிதும் கருத்தளவையைப் பெரிதுமாகக்கூறினார். மேலும், அளவை நூல் கூறும் கருத்துக்களுட் சிலவற்றைச் சமயக்கணக்கர்தம் திறங்கேட்ட காதைக்கண் அளவை வாதிகூற்றில் வைத்துக்கூறியிருப்பதும் குறிக்கத் தக்கதாம். அவன் கூறிய காட்சியுங் கருத்தும் தமக்கு உடன்பாடாகலின், அவற்றுள் தம் சமயநூற் கருத்துக்கேற்ப விளக்கத் தகுவனவற்றை இக் காதைக்கண் தொடக்கத்தே விளக்கி விடுகின்றார். காட்சிபற்றி அளவைவாதி கூறியவற்றைத் தழீஇக் கொள்பவர், அவற்றைச் "சுட்டுணர்வைப் பிரத்தியக்கமெனச் சொலிவிட்டனர்நாமசாதிக் குணக் கிரியைகள், மற்றவை யனுமானத்தும் அடையும் என"' என்பதனால் செம்மை செய்துகொள்வதும்,கருத்துப்பற்றி அவன் கூறுவனவற்றைத் தழீஇக் கொள்பவர், கருத்தளவை பற்றியும் அதன் பக்க முதலிய உறுப்புக்களைப்பற்றியுங் கூறுவனவற்றால் தூய்மை செய்துகொள்வதும் ஈண்டு நினைவுகூரத் தகுவனவாம். எதிரி கூறும் கூற்றிலுள்ள குற்றங்களைக் காட்டுதல் தூடணமென்றும, அவற்றைக் காட்டுமிடத் துண்டாகுங் குற்றங்களைத் தூடணாபாசமென்றும் கூறுப. அத் தூடணாபாசந்தானும் ஆறுவகைப்படும் என்றும், அவை "குறையில்லாத சாதனங்களிற் குறைகூறுதல்,குற்றமற்ற பக்கவுறுப்பிற் பக்கக் குற்றங்கூறுதல், சித்தித்திருக்கும் ஏதுவை அசித்தவேலு வென்றல், ஏகாந்த வேதுவை அநேகாந்த வேதுவென்றல், அவிருத்தவேதுவை விருத்தவேது வென்றல், குற்றமற்ற திட்டாந்தத்தைக் குற்றமுடையதென்றல்" என்றும் கூறுப. ஈண்டு, கூற்று நிகழ்த்தும் அறவணவடிகள் மணிமேகலைக்கு உண்மையுணர்ந்துகோடற்கேற்ற கருவியாக இவற்றைக் கூறுகின்றாரேயன்றி, பிறரோடு சொற்போர் நிகழ்த்தற் பொருட்டன்மையின், இவற்யைக் கூறாராயினார்.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil