Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 4.13

Maṇimēkalai urai 4.13

Language
Tamil

4.13

மலர்வனம் புக்க காதை

65
உவவன மென்பதொன் றுண்டத னுள்ளது
விளிப்பறை போகாது மெய்புறத் திடூஉம்
பளிக்கறை மண்டப முண்டத னுள்ளது
தூநிற மாமணிச் சுடரொளி விரிந்த
தாமரைப் பீடிகை தானுண் டாங்கிடின்

62

உரை

66

அதன் உள்ளது-அச்சோலையின் உள்ளிடத்ததாகிய, விளிப்பு அறை போகாது மெய்புறத்து இடூஉம் பளிக்கறை மண்டபம் உண்டு - ஓசை வெளியே போகாமல் தன்னைச் சார்ந்தாருடம்பை மட்டும் புறத்தே தோற்றுவிக்கும் பளிக்குமண்டபம் ஒன்று உண்டு; அதன் உள்ளது - அம்மண்டபத்தின் உள்ளிடத்ததாகிய, தூநிற மாமணிச் சுடர்ஒளி விரிந்த தாமரைப்பீடிகை தான் உண்டு- தூய நிறமுடைய மாணிக்கத்தின் மிக்க ஒளிபரந்த பதுமபீடம் ஒன்றுண்டு ;

அதன் உள்ளதாகிய மண்டபம் என்றும், அதன் உள்ளதாகிய பீடிகை என்றும் ஒட்டுக. அறை போதல்-வெளியே போதல். தன்னுள் எய்தினவரது ஓசையை வெளிப்படுத்தாது, உருவினை மட்டும் வெளிப் படுத்துவதென்று பளிங்கு மண்டபத்தின் இயல்பு கூறியபடி. பளிக்கறை மண்டபம்-பளிங்கறையாகிய மண்டபம்; பளிங்குப் பாறையாலாகிய மண்டபமுமாம். தாமரைப் பீடிகை-புத்தன் பாதபீடம். "புத்தன் பாதத்தை மணிபத்மம் என்றலும், அதனை வழிபடுவோர் அதுபற்றி, 'ஓம் மணிபத்மே ஹும்' என்ற மந்திரத்தை ஜபித்தலும் பௌத்த சமய மரபு,"
என்பர்.

Linked texts (1)