Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 4.21

Maṇimēkalai urai 4.21

Language
Tamil

4.21

மலர்வனம் புக்க காதை

135

140

145 விழவாற்றுப் படுத்த கழிபெரு வீதியிற்
பொன்னாண் கோத்த நன்மணிக் கோவை
ஐயவி யப்பிய நெய்யணி முச்சி
மயிர்ப்புறஞ் சுற்றிய கயிற்கடை முக்காழ்
பொலம்பிறைச் சென்னி நலம்பெறத் தாழச்
செவவாய்க் குதலை மெய்பெறா மழலை
சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப
அற்றங் காவாச் சுற்றுடைப் பூந்துகில்
தொடுத்தமணிக் கோவை உடுப்பொடு துயல்வரத்
தளர்நடை தாங்காக் கிளர்பூட் புதல்வரைப்
பொலந்தேர் மீமிசைப் புகர்முக வேழத்
திலங்குதொடி நல்லார் சிலர்நின் றேற்றி
ஆலமர் செல்வன் மகன்விழாக் கால்கோள்
காண்மி னோவெனக் கண்டுநிற் குநரும்

132

உரை

145

விழுவு ஆற்றுப்படுத்த கழிபெரு வீதியில் - அழவினைக் கொண்டாடிய மிகப்பெரிய வீதியில், பொன் நாண் கோத்த நன் மணிக் கோவை-பொன்னாலாகிய கயிற்றிற் கோத்த நல்ல மணிக் கோவையாகிய, ஐயவி அப்பிய நெய் அணி முச்சி-வெண் சிறு கடுகினை அப்பிய நெய் யணிந்த உச்சியில், மயிர்ப்புறம் சுற்றிய கயிற்கடை முக்காழ்-மயிர்ப்புறத்திற் சுற்றப்பட்ட கொக்கியினையுடைய மூன்று சரங்கள், பொலம்பிறைச் சென்னி நலம்பெறத் தாழ - அழகிய பிறை போன்ற அணியினை யணிந்த சென்னியில் அழகு பெறத் தொங்கவும், செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை - வடிவு திருந்தாத மழலையாகிய் இளஞ் சொல்லை யுடைய சிவந்த வாயினின்றும், சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப-சிறிதாகிய நீர்சிந்தி மார்பிலணிந்த ஐம்படைத் தாலியை நனைக்கவும், அற்றம் காவச்சுற்றுடைப் பூந்துகில் - அற்றத்தினை மறைக்காமற் சுறறப்பட்ட அழகிய ஆடை, தொடுத்த மணிக்கோவை உடுப்பொடு துயல்வர தொடுக்கப்பட்ட மணிகளின் கோவையாகிய உடுப்பொடு அசையவும், தளர்நடை தாங்காக் கிளர்பூண் புதல்வரை-தளர்ந்த நடையையும் பொறுக்கலாத ஒளி பொருந்திய அணிகலன் அணிந்த புதல்வரை, பொலந்தேர் மீமிசைப் புகர்முக வேழத்து- பொற்றேரின் மீதுள்ள புள்ளி பொருந்திய முகத்தினை யுடைய யானையின் மேல், இலங்குதொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி-விளங்குகின்ற வளையல்களை யணிந்த மகளிர் சிலர் நின்று ஏற்றி, ஆல் அமர் செல்வன் மகன் விழைக் கால்கோள் காண்மினோ என்-ஆலின் கிழமர்ந்த சிவபெருமான் திருமைந்தனாகிய முருகவேளின் விழாக் கால்கொள்ளுதலைக் காண்பீராக என்று கூற, கண்டு நிற்குநரும்-அதனைக் கண்டு நிற்போரும் ;

கோவையாகிய முக்காழ் என்க. பேய் தீண்டாவண்ணம் குழந்தைகளின் முடியில் நெய்யணிந்து வெண்சிறு கடுகை அப்புதல் மரபு ; அதனாலே வெண்சிறு கடுகிற்குக் கடிப்பகை என்பதும் பெயராயிற்று ; கடி-பேய். கயிற்கடை-கொக்கி ; கொக்கின் வாய்போல்வதாகலின் கொக்கி எனப்பட்டது. பிறைச் சென்னி-பிறைவடுவாகிய அணியின் இரு கோடுகளில் என்றுரைப்பாருமுளர். மெய் - சொல்லின் வடிவு, குதலை-இளஞ்சொல்; ¹"குதலைச் செவ்வாய்க் குறுந்தொடி மகளிர், முதியோர் மொழியின் முன்றி னின்றழ" என்பது காண்க. சிறிதாய நீரைச் சின்னீர் என்றல் ஓர் இலக்கணை வழக்கு. ஐம்படை - காத்தற் கடவுளான திருமாலின் சங்கு, சக்கரம், கதை, வாள், வில் என்னும் ஐந்து படைகளின் வடிவாகிய அணி ; இது தாலி என்றும் வழங்கும் ; இதனைச் சிறுவர்க்கு அணிதல் மரபு;²தாலி களைந்தன்று மிலனே பால்விட், டயினியு மின்றயின்றனனே" என்பது காண்க. தேர்மிசை யானையை வைத்து ஊர்தல் ³"பொற்சிறு தேர்மிசைப் பைம்பொற் போதகம், நற்சிறா ரூர்தலின்" என்பதனானும் அறியப்படும் கால்கோள்- தொடக்கம். வீதியில் நல்லார் சிலர், கோவையையும் முச்சியையும் குதலையையும் மழலையையும் பூணையுமுடைய புதல்வரை வேழத்து முக்காழ் தாழச் சின்னீர் நனைப்பத் துகில் துயல்வர ஏற்றி எனக் கூட்டி யுரைப்பாருமுளர்

¹ சிலப். 30 ; 114-5. ² புறம். 77. ³ சீவக. 89.

Linked texts (1)