Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 8

Maṇimēkalai urai 8

Language
Tamil

8.1

துயிலெழுப்பிய காதை

5

மணிமே கலைதனை மணிபல் லவத்திடை,
மணிமே கலாதெய்வம் வைத்து நீங்கி
மணிமே கலைதனை மலர்ப்பொழிற் கண்ட
உதய குமரன் உறுதுய ரெய்திக்
கங்குல் கழியிலென கையகத் தாளெனப்
பொங்குமெல் லமளியிற் பொருந்தா திருந்தோன்
முன்னர்த் தோன்றி மன்னவன் மகனே

1

உரை

7

மணிமேகலைதனை மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி-மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்ல வத்தின்கண் வைத்து அதனைவிட்டு நீங்க, மணிமேகலைதனை மலர்ப்பொழிற் கண்ட உதயகுமரன் - மணிமேகலையைப் பூஞ்சோலையிற் கண்ட உதயகுமரன், உறுதுயர் எய்தி - மிக்க துன்ப முற்று, கங்குல் கழியில்என் கையகத்தாள் என - இரவு நீங்கினால் மணிமேகலை என் கையினிடத்தே உள்ளாள் என்று, பொங்கு மெல் அமளியில் பொருந்தாது இருந்தோன் முன்னர்த் தோன்றி- சிறந்த மெல்லிய படுக்கையிடத்துக் கண்டுயிலாது இருக்கின்றவன் முன்னே தோன்றி,

மணிமேகலையை எய்தப் பெறாமையான் உறுதுயர் எய்தினான் என்க. பொருந்தாது-கண் பொருந்தாது : உறங்காது. இருந்தோன் முன்னர்த் தோன்றி என்க.

8.2

துயிலெழுப்பிய காதை

10

கோல்நிலை திரிந்திடிற் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்
மாரிவறங் கூரின் மன்னுயி ரில்லை
மன்னுயி ரெல்லாம் மண்ணாள் வேந்தன்
தன்னுயி ரென்னுந் தகுதியின் றாகும்
தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த
அவத்திறம் ஒழிகென் றவன்வயி னுரைத்தபின்

8

உரை

14

மன்னவன் மகனே-அரசன் புதல்வனே, கோல் நிலை திரிந்தி டின் கோள் நிலை திரியும்-அரசனது கோல் கோடுவதாயின் கோட் களின் நிலை வேறுபடும், கோள்நிலை திரிந்திடின் மாரி வறம்கூரும்- அங்ஙனம் கோட்கள் நிலை தவறினால் மழை பொய்யாமற் கழியுங்காலம் மிகும், மாரி வறங் கூரின் மன்னுயிர் இல்லை - மழை வளங் குறைந்தால் நிலைபெற்ற உயிர்கள் இல்லையாம், மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன் தன்உயிர் என்னும் தகுதி இன்று ஆகும்- நிலைபெற்ற உயிர்கள் அனைத்தும் மண்ணுலகத்தை ஆள்கின்ற மன்னவனது உயிர்என்று கூறப்படும் தகைமைஇலதாம் ஆகலின், தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த - தவத்தின் கூறுபாட்டினை மேற்கொண்ட மணிமேகலைபால் வைத்த, அவத்திறம் ஒழி கென்று அவன் வயின் உரைத்தபின்-தீய விருப்பின் தன்மையை ஒழிவாயாக என்று உதயகுமரனிடம் மொழிந்த பின்னர் ;

கோல்நிலை திரியின் கொள்நிலை திரிதல் முதலியன நிகழுமென்

¹பதனை, "கோணிலை திரியாக் கோலோ னாகுக,' ²"கோணிலைதிரிந்து நாழி குறைபடக் பகல்கண் மிஞ்சி, நீணில மாரி யின்றி விளைவஃகிப் பசியு நீடிப், பூண்முலை மகளிர் பொற்பிற் கற்பழிந் தறங்கண் மாறி, ஆணையிவ் வுலகு கேடா மரசுகோல் கோடி னென்றான்" என்பவற்றானும் அறிக. அவத்திறம் - கேடு செய்யும் தீய விழைவு.

¹ மணி. 1 : 34. ²சீவ. 1 : 255.

8.3

துயிலெழுப்பிய காதை

15 20

உவவனம் புகுந்தாங் குறுதுயில் கொள்ளும்
சுதமதி தன்னைத் துயிலிடை நீக்கி
இந்திர கோடணை இந்நகர்க் காண
வந்தே னஞ்சல் மணிமே கலையான்
ஆதிசான் முனிவன் அறவழிப் படுஉம்
ஏது முதிர்ந்த திளங்கொடிக் காதலின்
விஞ்சையிற் பெயர்த்துநின் விளங்கிழை தன்னையோர்
வஞ்சமில் மணிபல் லவத்திடை வைத்தேன்

15

உரை

22

உவவனம் புகுந்து ஆங்கு உறுதுயில் கொள்ளும்-உவவனத்திற் புகுந்து ஆண்டு மிகுந்த உறக்கத்துடனிருக்கும், சுதமதி தன்னைத் துயிலிடை நீக்கி - சுதமதியை உறக்கத்தினின்றும் எழுப்பி, இந்திரகோடனை இந்நகர்க் காண வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான்-யான் மணிமேகலா தெய்வம் அஞ்சாதே இந்நகரின் இந்திர விழாக்காண வந்தேன், ஆதிசான் முனிவன் அற வழிப்படுஉம்-புத்த தேவனின் அறநெறியிற் செல்லும், ஏது முதிர்ந்தது இளங்கொடிக்கு ஆதலின் ஏது நிகழ்ச்சி மணி மேகலைக்கு முற்றியதாகலின் விஞ்சையிற் பெயர்ந்நு நின் விளங்கிழைதன்னை-நின் மெல்லியலை என் வித்தையினாலே பெயர்த்து, ஓர் வஞ்சம் இல் மணிபல்லவத்திடை வைத்தேன்-ஒரு வகையான வஞ்சனையும் இல்லாத மணிபல்லவத்தின்கண் வைத்துளேன் ;

துயிலிடை : உருபு மயக்கம், கோடணை - முழக்கம் ; பல்வகை முழக்கத்தினையுடைய விழாவிற்காயிற்று வினைகள் தம் பயனையூட்ட எதிர்ப்படுவதனை, ஏது நிகழ்ச்சி அல்லது ஏது என்பது பௌத்தநூல் வழக்கு.

8.4

துயிலெழுப்பிய காதை

25

பண்டைப் பிறப்பும் பண்புற உணர்ந்தீங்
கின்றேழ் நாளில் இந்நகர் மருங்கே
வந்து தோன்றும் மடக்கொடி நல்லான்
களிப்புமாண் செல்வக் காவற் பேரூர்
ஒளித்துரு வெய்தினும் உன்திற மொளியாள்
ஆங்கவள் இந்நகர் புகுந்த அந்நாள்
ஈங்கு நிகழ்வன ஏதுப் பலவுள

23

உரை

29

பண்டைப் பிறப்பும் பண்புஉற உணர்ந்து-முற்பிறவியையும் நன்கறிந்து, ஈங்கு இன்று ஏழுநாளில் இந்நகர் மருங்கே- இற்றைக்கு ஏழாம் நாளிலே இவ்விடத்து இந்நகரத்தின்கண், வந்து தோன்றும் மடக்கொடி நல்லான் - மடப்பம் பொருந்திய கொடிபோலும் மணிமேகலை வந்து தோன்றுவள், களிப்புமாண் செல்வக் காவற் பேரூர் - செல்வக் களிப்பாற் சிறந்த காவலையுடைய இப் பெரிய நகரத்தில். ஒளித்து உருவு எய்தினும் உன் திறன் ஒளியாள் - தன் வடிவத்தை மறைத்து வந்தாலும் நின்னிடம் மறையாள், ஆங்கு அவள் இந்நகர் புகுந்த அந்நாள் - மணிமேகலை இந்நகரத்திற்கு மீளவந்த அந்நாளில் ஈங்கு நிகழ்வன ஏதுப் பலவுள - ஈண்டு நிகழ்வனவாகிய ஏது நிகழ்ச்சிகள்
பலவுண்டு;
தோன்றும்: முற்று. களிப்புமாண் செல்வம் என்பதற்குக்

களிப்பு மாட்சி யுறுதற்குக் காரணமாய செல்வம் என உரைப்பினும் அமையும். புகுந்த என்பது கால வழுவமைதி.

8.5

துயிலெழுப்பிய காதை

30

35

40

மாதவி தனக்கியான் வந்த வண்ணமும்
ஏதமில் நெறிமகள் எய்திய வண்ணமும்
உரையாய் நீயவன் என்திறம் உணரும்
திரையிரும் பௌவத்துத் தெய்வமொன் றுண்டெனக்
கோவலன் கூறியிக் கொடியிடை தன்னையென்
நாமஞ் செய்த நன்னாள் நள்ளிருள்.
காமன் கையறக் கடுநவை யறுக்கும்
மாபெருங் தவக்கொடி ஈன்றனை யென்றே
நனவே போலக் கனவகத் துரைத்தேன்
ஈங்கிங் வண்ணம் ஆங்கவட் குரையென்
றந்தரத் தெழுந்தாங் கருந்தெய்வம் போயபின்

30

உரை

40

மாதவி தனக்கு யான் வந்த வண்ணமும்-மாதவிக்கு யான் வந்த வகையையும், ஏதம்இல் நெறி மகள் எய்திய வண்ணமும்- மணிமேகலை குற்றமற்ற வழியிற் சேர்ந்த தன்மையையும், உரை யாய் நீ - நீ கூறுவாயாக, அவள் என் திறம் உணரும்-அம் மாதவி
என் வரலாற்றை உணருவாள், திரையிரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு எனக் கோவலன் கூறி இக்கொடியிடை தன்னை என் நாமஞ் செய்த நல்நாள் - கோவலன் அலைகளையுடைய பெரிய கடலினிடத்துத் தெய்வம் ஒன்று உண்டென்று கூறி இப் பெண் மகளுக்கு என் பெயரையிட்ட நல்லநாளில், நள்இருள்-இரவின் நடுயாமத்தே, காமன் கையறக் கடுநவை அறுக்கும் - காமன் செயலற்றுப்போகப் பெரிய துன்பங்களை அறுக்கவல்ல, மாபெருந் தவக்கொடி ஈன்றனை என்றே-மிகப் பெரிய தவமுடைய மகளைப் பெற்றனை என்று, நனவேபோலக் கனவகத்து உரைத்தேன் - நேரிற் கூறுவதைப்போலக் கனவின்கண் மொழிந்தேன், ஈங்கு இவ்வண்ணம் ஆங்கு அவட்கு உரை என்று - இவற்றையெல்லாம் மாதவிக்குக் கூறுவாயாக என்றுரைத்து அந்தரத்து எழுந்து ஆங்கு அருந்தெய்வம் போயபின் - விசும்பில் எழுந்து அவ்வரிய மணிமேகலா தெய்வம் போயின பின்னர் ;

ஏதம் இல் நெறி எய்தியது என்றது புத்தன் அறவழிப்படுதல் என்க; இதனை விசுத்திமார்க்கம் என்ப. தெய்வம்-என்குல முதல்வனைக் கேட்டினின்றும் நீக்கிப் பாதுகாத்த தெய்வம் என விரித்துரைத்துக் கொள்க. கொடியிடை தன்னை-கொடி யிடைக்கு; கொடியிடை: மணிமேகலை. நள்ளிருள் என்பது செறிந்த இருளையுடைய இரவினை யுணர்த்திற்று. கடுநவை - அவா முதலியன. நன்னாள் நள்ளிருட் கனவகத்து உரைத்தேன் என்க.

8.6

துயிலெழுப்பிய காதை

வெந்துய ரெய்திச் சுதமதி எழுந்தாங்

41

உரை

வெந்துயர் எய்திச் சுதமதி எழுந்தாங்கு-சுதமதி கொடிய துன்ப மடைந்து எழுந்து ;

8.7

துயிலெழுப்பிய காதை

45

ககன்மனை யரங்கத் தாசிரியர் தம்மொடு
வகைதெரி மாக்கட்கு வட்டணை காட்டி
ஆடல் புணர்க்கும் அரங்கியன் மகளிரில்
கூடிய குயிலுவக் கருவிகண் துயின்று
பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ்த் தீந்தொடை
கொளைவல் லாயமோ டிசைகூட் டுண்டு
வளைசேர் செங்கை மெல்விர லுதைத்த
வெம்மைவெய் துறாது தன்மையிற் றிரியவும்

42

உரை

49

அகல்மனை அரங்கத்து ஆசிரியர் தம்மொடு- அகன்ற வீடாகிய அரங்கின்கண் ஆசிரியன்மாரொடு நின்று, வகை தெரி மாக் கட்கு வட்டணை காட்டி-அவினய முதலிய கூறுபாடுகளையறிகின்ற மக்களுக்குக் கமலவர்த்தனை காட்டி, ஆடல் புணர்க்கும் அரங்கியல் மகளிரில்-ஆடல்புரியும் நாடக மகளிரைப்போல, கூடிய குயிலுவக் கருவி கண் துயின்று-ஒருங்கியைந்த குரல்யாழ் முதலிய குயிலுவக் கருவிகளெல்லாம் கண்டுயின்று, பண்ணுக் கிளைபயிரும் பண்ணி யாழ்த் தீந்தொடை-பண்ணின் வகைகளை இசைக்கும் யாழின் இனிய நரம்புகள், கொளைவல் ஆயமோடு இசை கூட்டுண்டு- பாட்டில் வல்ல மகளிருடன் இசையைச் சேர்ந்தனுபவித்து, வளை சேர் செங்கை மெல்விரல் உதைத்த-வளைகளுடன் கூடிய சிவந்த கைகளின் மெல்லிய விரல்களால் தெறித்த, வெம்மை வெய்துறாது தன்மையில் திரியவும்- வெம்மை நன்கு உறாமையால் இயல்பி னின்று திரியாநிற்கவும்;

ஆசிரியர்-இயலாசிரியன், ஆடலாசிரியன், யாழாசிரியன், இசையா சிரியன், குழலாசிரியன், தண்ணுமை யாசிரியன் என்போர். வட்டணை- வர்த்தனை; கமல. வர்த்தனை; ஆவது கைத்தலங் காட்டல். கிளை-திறமு மாம். தீந்தொடை திரியவும் என்க.

8.8

துயிலெழுப்பிய காதை

50

பண்பில் காதலன் பரத்தமை நோனாது
உண்கண் சிவந்தாங்கு ஒல்குகொடி போன்று
தெருட்டவுந் தெருளா தூடாலொடு துயில்வோர்
விரைப்பூம் பள்ளி வீழ்துணை தழுவவும்

50

உரை

53

பண்பில் காதலன் பரத்தமை நோனாது. குணமற்ற காதலனுடைய பரத்தமையைப் பொறாமல், உண் கண் சிவந்தாங்கு ஒல்கு கொடிபோன்று - அசைகின்ற கொடிபோல மையுண்ட கண்கள் சிவந்து, தெருட்டவும் தெருளாது ஊடலொடு துயில்வோர்-தெளி விக்கவும் தெளியாமல் ஊடலுடன் துயில்கின்ற மகளிர், விரைப் பூம்பள்ளி வீழ்துணை தழுவவும் - மணம் பொருந்திய மலரணையில் தம்மால் விரும்பப்படுகின்ற கொழுநரைத் தழுவவும் ;

பண்பு - ஈண்டு அன்பு. பரத்தமை-பரத்தன் தன்மை;பரத்தையை மருவி யொழுகுவோன் பரத்தன்; ¹"பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற் பொதுவுண்பர், நண்ணேன் பரத்தநின் மார்பு" என்பது காண்க. ஊடலொடு துயில்வோர் தாமே துணையைத் தழுவவு மென்க.

¹ குறள். 1311.

8.9

துயிலெழுப்பிய காதை

55

தளர்நடை யாயமொடு தங்கா தோடி
விளையாடு சிறுதேர் ஈர்த்துமெய் வருந்தி
அமளித் துஞ்சும் ஐம்படைத் தாலிக்
குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வர்க்குக்
காவற் பெண்டிர் கடிப்பகை யெறிந்து
தூபங் காட்டித் தூங்குதுயில் வதியவும்

54

உரை

59

தளர்நடை ஆயமொடு தங்காது ஓடி விளையாடு சிறுதேர் ஈர்த்து மெய்வருந்தி - தளர்நடைச் சிறார்களுடன் ஓரிடத்தில் தங்காமல் ஓடி விளையாடுஞ் சிறு தேரினை இழுத்து உடல்வருந்தி, அமளித் துஞ்சும்-படுக்கையில் உறங்குகின்ற, ஜம்படைத் தாலிக் குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வர்க்கு - ஜம்படைத் தாலி யணிந்த மார்பும் மழலைச் செவ்வாயும் தளர்நடையுமுடைய இளம் புதல்வர்க்கு, காவற்பெண்டிர் கடிப்பகை எறிந்து தூபம் காட்டித் தூங்கு துயில் வதியவும் - செவிலித்தாயர் கடிப்பகை வீசிப் புகை காட்டித் தூங்குகின்ற உறக்கத்திற் பொருந்தவும்;

ஐம்படை - திருமாலின் பஞ்சாயுத வடிவமுடைய அணிகலன் ; "சிந்துபு சின்னீ ரைம்படை நனைப்ப" (3; 138) என்புழி உரைத்தமை நோக்குக. கடிப்பகை - பேய்க்குப் பகை ; வேம்பும், வெண்சிறு கடுகும்; இக் காதையுள் மேல்வருதல் காண்க. காவற்பெண்டிர் துயில் வதியவும் என்க.

8.10

துயிலெழுப்பிய காதை

60

இறையுறை புறவும் நிறைநீர்ப் புள்ளும்
காவுறை பறவையும் நாவு ளழுந்தி
விழவுக்களி யடங்கி முழவுக்கண் துயின்று
பழவிறன் மூதூர் பாயல்கொள் நடுநாள்

60

உரை

63

இறையுறை புறவும் நிறைநீர்ப் புள்ளும் - இறப்புகளில் வாழ் கின்ற புறாக்களும் நிறைந்த நீரிலுள்ள பறவைகளும், கா உறை பறவைகளும நா உள் அழுந்தி-பொழில்களில் உறைகின்ற புட்களும் நா உள்ளே அழுந்தி, விழவுக்களி அடங்கி முழவுக்கண் துயின்று- விழாவினாலுண்டாகிய களிப்பு அடங்கி முழவுகளின் கண் துயின்று, பழவிறல் மூதூர் பாயல் கொள் நடுநாள் - பழைய வலி யினையுடைய தொன்னகரம் துயிலினைக்கொண்ட இடையா மத்தில்;

நாவுள்ளழுந்தலாவது : ஒலியாதிருத்தல். அழுந்தி, அடங்கி, துயின்று என்னும் இடத்து நிகழ்பொருளின் றொழில்கள் இடத்தின் மேல் நின்றன ; அழுந்தி முதலியவற்றைச் செயவனெச்சமாகத்
திரித்தலுமாம்.

8.11

துயிலெழுப்பிய காதை

65 கோமகன் கோயிற் குறுநீர்க் கன்னலின்
யாமங் கொள்பவர் ஏத்தொலி யரவமும்

64

உரை

65

கோமகன் கோயில் குறுநீர்க் கன்னலின் - அரசன் மாளிகையில் குறிய நீரினைக் கொண்ட நாழிகை வட்டிலால், யாமம் கொள்பவர் ஏத்துஒலி அரவமும்-நாழிகைக் கணக்கிடுவோர் ஏத்துகின்ற ஒலியாகிய முழக்கமும்;

அரசனை ஏத்தி நாழிகை கூறுவராகலின் 'ஏத்தொலியரவமும்' என்றார். ஒலியாகிய அரவமென்க ; அரவம் தமிழ்ச்சொல்லே.

8.12

துயிலெழுப்பிய காதை

உறையுணின் றொடுங்கிய உண்ணா உயக்கத்து
நிறையழி யானை நெடுங்கூ விளியும்

66

உரை

67

உறையுள் நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்து-தங்குமிடத்தில் நின்று ஒடுங்கிய உண்ணாமையா னுண்டாகிய வருத்தத்தினால், நிறை அழியானை நெடுங்கூவிளியும் - நிறையழிந்த யானையினது நெடிய கூப்பீடாகிய முழக்கமும் ;

8.13

துயிலெழுப்பிய காதை

தேர்வழங்கு தெருவுஞ் சிற்றிடை முடுக்கரும்
ஊர்காப் பாளர் எறிதுடி ஓதையும்

68

உரை

69

தேர்வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும் - தேர்கள் செல்லுகின்ற பெரியவீதிகளிலும் சிறிய இடங்களையுடைய முடுக் குத் தெருக்களிலும், ஊர்காப்பாளர் எறிதுடி ஓதையும் - ஊர் காவலர் அடிக்கின்ற துடியொலியும் ;

8.14

துயிலெழுப்பிய காதை

70 முழங்குநீர் முன்றுறைக் கலம்புணர் கம்மியர்
துழந்தடு கள்ளின் றோப்பியுண் டயர்ந்து
பழஞ்செருக் குற்ற அனந்தர்ப் பாணியும்

70

உரை

72

முழங்கு நீர் முன்றுறைக் கலம்புணர் கம்மியர் - ஒலிக்கின்ற நீரினையுடைய கடற்றுறைகளில் மரக்கலத்திற் சேர்ந்து தொழில் புரிவோர், துழந்தடு கள்ளின் தோப்பியுண்டு அயர்ந்து - துழாவிச் சமைத்த கள் வகைகளில் நெல்லாற் சமைத்த கள்ளையுண்டு தம்மை மறந்து, பழஞ்செருக்குற்ற அனந்தர்ப் பாணியும் - பழைய செருக்கினையடைந்த மயக்கத்துடன் பாடும் பாட்டினோசையும்;

கள்ளாகிய தோப்பி யென்றுமாம். தோப்பி - நெல்லாற் சமைத்த கள். பழஞ்செருக்கு-முதிர்ந்த களிப்பு. அனந்தர்-கள்ளுண்ட மயக்கம்.

8.15

துயிலெழுப்பிய காதை

75

அரவாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை
விரவிய மகளிர் ஏந்திய தூமத்துப்
புதல்வரைப் பயந்த புனிறுநீர் கயக்கம்
தீர்வினை மகளிர் குளனா டரவமும்

73

உரை

76

அரவாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை விரவிய மகளிர் ஏந்திய தூமத்து-அரத்தின் வாய்போன்ற வேம்பாகிய கடிப்பகையும் வெண்சிறுகடுகாகிய கடிப்பகையும் கலந்து இடப்பட்டு மகளிரால் ஏந்தப்பட்ட புகையுடன் சென்று, புதல்வரைப் பயந்த புனிறு தீர் கயக்கம் தீர்வினை மகளிர் குளன் ஆடு அரவமும் - புதல்வரைப் பெற்ற புனிறு தீருமாறு கயங்குதல் தீர்க்கின்ற மகளிர் குளங்களில் நீராடுகின்ற ஒலியும் ;

கடிப்பகை-பேய்க்குப் பகையென்னும் பொருளது, மகளிர்

ஏந்திய அரவாய்க் கடிப்பகையுடனும் ஐயவிக் கடிப்பகை விரவிய தூமத் துடனும் என்றுரைத்தலுமாம். புனிறு தீர்ந்த மகளிர் மயக்கந்தீர்ந்த மகளிர் எனத் தனித்தனி முடித்தலுமாம். புதல்வர்ப் பயந்த புனிறு தீர்ந்த மகளிர் இரவிற்சென்று குளத்தில் நீராடுதல் ¹"கணவ ருவப்பப் புதல்வர்ப் பயந்து, பணைத்தேந் திளமுலை யமுதமூறப், புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு, வளமனை மகளிர் குளநீ ரயர" என்பதனாலும் அறியப்படும். பத்தாவது இரவில் நீராடவேண்டும் என்பர்.

¹ மதுரை, 400-3.

8.16

துயிலெழுப்பிய காதை

80
அவலித்த நெஞ்சின் ஆடவ ரின்றியும்
புலிக்கணத் தன்னோர் பூத சதுக்கத்துக்
கொடித்தேர் வேந்தன் கொற்றங் கொள்கென
இடிக்குரன் முழக்கத் திடும்பலி யோதையும்

77

உரை

80

வலித்த நெஞ்சின் ஆடவர் இன்றியும் - பகைமையைக் கருதிய உள்ளமுடைய வீரர் இல்லாதிருக்கவும், புலிக்கணத்து அன்னோர்-புலிக்கூட்டத்தினை யொத்த வீரர்கள், தசதுக்கத்துக்
கொடித்தேர் வேந்தன் கொற்றம் கொள்க என-பூதத்தையுடைய நாற்சந்தியிலே கொடியணிந்த தேரினையுடைய எம் அரசன் வெற்றிபெறுக என்று, இடிக்குரல் முழக்கத்து இடும்பலி ஓதையும்
இடியனைய குரல் முழக்கத்துடன் பலியிடுகின்ற ஓசையும் ;

வலித்த-போரினைக் கருதிய என்றுமாம். ஆடவர்-ஈண்டுப்பகைவர்.

8.17

துயிலெழுப்பிய காதை

85 ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்
கடுஞ்சூன் மகளிர் நெடும்புண் உற்றோர்
தந்துயிர் கெடுக்கும் மந்திர மாக்கள்
மன்றப் பேய்மகள் வந்துகைக் கொள்கென
நின்றெறி பலியின் நெடுங்குர லோதையும்

73

உரை

76

ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் - ஈன்றணிமையை யுடைய இளமகளிர் ஆற்றாச் சிறுவர், கடுஞ்சூல் மகளிர் நெடும்புண் உற்றோர் - முதற் சூலையுடைய மங்கையர் பெரிய புண்களால் வருந்தினோர், தம் துயர் கெடுக்கும் மந்திரமாக்கள் - ஆகிய
இவர்களின் துன்பங்களை நீக்குகின்ற மந்திரவாதிகள், மன்றப் பேய் மகள் வந்து கைக்கொள்க என-மன்றத்தின்கணுள்ள பேய்மகள் வந்து பெறுக என்றுகூறி, நின்று எறி பலியின் நெடுங்குரல் ஓதையும்-நின்று பலி எறிகின்ற நீண்ட குரல் முழக்கமும் ;

கடுஞ்சூல் - முதற்சூல்; ¹"கடுஞ்சூன் முண்டகம் கதிர்மணி கழாஅலவும்" என்றார் பிறரும். பலியிடும்பொழுது நெடுங்குர லெடுத்துக்கூப்பிடுவராகலின் 'பலியினெடுங்குரல்' என்றார்:

¹ சிறுபாண். 148.

8.18

துயிலெழுப்பிய காதை

பல்வே றோதையும் பரந்தொருங் கிசைப்பக்

86

உரை

பல்வேறு ஓதையும் பரந்து ஒருங்கிசைப்ப - ஆகிய பலவேறு வகைப்பட்ட ஓசையும் பரந்து ஒன்றாக முழங்க ;

8.19

துயிலெழுப்பிய காதை

90 கேட்டுளங் கலங்கி ஊட்டிரு ளழுவத்து
முருந்தேர் இளநகை நீங்கிப் பூம்பொழில்
திருந்தெயிற் குடபாற் சிறுபுழை போகி
மிக்கமா தெய்வம் வியந்தெடுத் துரைத்த
சக்கர வாளக் கோட்டத் தாங்கண்
பலர்புகழ் திறந்த பகுவாய் வாயில்
உலக அறவியின் ஒருபுடை இருத்தலும்

87

உரை

93

கேட்டு உளம் கலங்கி ஊட்டிருள் அழுவத்து-அவற்றை யெல்லாங் கேட்டு மனங்கலங்கி ஊட்டினாற்போன்ற இருட்பரப் பிலே, முருந்து ஏர் இளநகை நீங்கிப் பூம்பொழில் - மயிற்பீலியின் முளைபோன்ற அழகிய பற்களையுடைய சுதமதி உவவனத்தினின்றும் நீங்கி, திருந்து எயிற் குடபால் சிறு புழை போகி - திருந்திய மதிலின் மேற்றிசையிலுள்ள சிறிய வாயிலின் வழியே சென்று, மிக்க மாதெய்வம் வியந்து எடுத்து உரைத்த-பெருமைபொருந்திய
மணிமேகலாதெய்வம் வியந்து எடுத்துக்கூறிய, சக்கரவாளக் கோட்டத் தாங்கண் - சக்கரவாளக் கோட்டத்திண்கண், பலர் புகத் திறந்த பகுவாய் வாயில்-பலருஞ் செல்லுமாறு திறக்கப்பட்டிருக்கின்ற பெரிய வாய்போலும் வாயிலையுடைய, உலக அறவியின் ஒருபுடை இருத்தலும்-ஊரம்பலத்தில் ஒருபக்கத்தில் இருத்தலும்;

ஊட்டுதல் - பூசுதல். அறவி - அம்பலம் சுதமதி எழுந்து பல் வேறு ஓதையும் ஒருங்கிசைப்பக் கேட்டு உளங்கலங்கி நீங்கிப்போகி ஒருபுடை யிருத்தலும் என்க.

8.20

துயிலெழுப்பிய காதை

95

இகந்துடை நெடுநிலைக் காரணம் காட்டிய
அந்தி லெழுதிய அற்புதப் பாவை
மைத்திடங் கண்ணான் மயங்கினள் வெருவத்
திப்பிய முரைக்குந் தெய்வக் கிளவியின்

94

உரை

97

கந்துடை நெடுநிலைக் காரணம் காட்டிய அந்தில் எழுதிய அற்புதப் பாவை - நெடிய தோற்றத்தையுடைய தூணாகிய அவ் விடத்தே பழவினையாகிய காரணத்தை அனைவருக்கும் அறிவிக்கும் பொருட்டு மயன் என்னும் தெய்வத் தச்சனால் எழுதப்பட்டு
அனைவருக்கும் வியப்பை யுண்டுபண்ணும் பாவையானது, மைத்தடங் கண்ணாள் மயங்கினள் வெருவ-சுதமதி அஞ்சி மயங்குமாறு, திப்பியம் உரைக்கும் தெய்வக் கிளவியின் -எதிர்காலத்தில் நிகழ் வனவற்றையும் கூறும் திப்பியமாகிய தெய்வக் கிளவியினாலே ;

நெடுநிலை யுடைக் கந்தாகிய அந்தில் எனக் கூட்டுக. அந்தில்-ஆங் கென்னும் பொருட்டு. காட்டிய : செய்யியவென்னும் வினையெச்சம். வருவதனை உரைப்பது தெய்வத் தன்மையாம் என்று கொண்டு 'திப்பிய முரைக்கும்' என்றார். தெய்வக்கிளவி - தெய்வத்தின் மொழி.

8.21

துயிலெழுப்பிய காதை

100

105 இரவி வன்மன் ஒருபெரு மகளே
தூரகத் தானைத் துச்சயன் றேவி
தயங்கிணர்க் கோதை தாரை சாவுற
மயங்கி யானைமுன் மன்னுயிர் நீத்தோய்
காராளர் சண்பையிற் கௌசிகன் மகளே
மாருத வேகனோ டிந்நகர் புகுந்து
தாரை தவ்வை தன்னொடு கூடிய
வீரை யாகிய சுதமதி கேளாய்

98

உரை

105

இரவிவன்மன் ஒரு பெருமகளே - அசோதர நகரத்தரசனாகிய இரவிவன்மனது ஒரு பெருமகளே, துரகத் தானைத் துச்சயன்தேவி - குதிரைச் சேனைகளை யுடையனும் கச்சய நகரத் தரசனுமாகிய துச்சயனுடைய மனைவியே, தயங்கு இணர்க்கோதை தாரை சாவுற-விளங்குகின்ற பூங்கொத்தினாலாய மாலையையுடைய தாரை இறக்குமாறு, மயங்கி யானைமுன் மன்னுயிர் நீத்தோய்- யானையின் முன்னே மயங்கி உயிர் துறந்தோய், காராளர் சண்பையில் கௌசிகன் மகளே - காராளருடைய சண்பை நகரத்தில் உள்ள கௌசிகன் என்பவனுடைய புதல்வியே, மாருதவேகனோடு இந்நகர் புகுந்து - மாருதவேகன் என்னும் விஞ்சையனுடன் இந் நகரத்திற் சேர்ந்து, தாரை தவ்வை தன்னொடு கூடிய - தமக்கை யாகிய தாரையுடன் கூடிய, வீரையாகிய சுதமதி கேளாய் - வீரை யாகிய சுதமதியே கேட்பாயாக ;

இரவின்மன் - சுதமதியின் முற்பிறப்பிலே தந்தையாயிருந்தவன். துச்சயன் - சுதமதியின் முற்பிறப்பிற் கணவனாயிருந்தவன். தாரை- சுதமதியின் முற்பிறப்பின் தமக்கையாயிருந்தவள். வீரை யானையால் இறந்தது கேட்டு இவள் இறந்தமையால் 'தாரை சாவுற' என்றாள் ; சாவுற : எதிர்காலத்தில் வந்தது. காராளர் - வேளாளர் ; சண்பை - சீகாழி ; சண்பை யென்பது அங்கநாட்டிற் கங்கைக் கரையிலுள்ளதாகிய சம்பா நகரம் என்றும், காராளர் என்பது கராளர் என்பதன் திரிபென்றும் கூறுவாருமுளர் ; தாரை, வீரை, இலக்குமி என்னும் மூன்று சகோதரிகளுள், தாரை மாதவியாகவும், இலக்குமி மணிமேகலை யாகவும் காவிரிப்பூம் பட்டினத்திற் பிறந்திருத்தலானும், இந்திரவிழாக் காண்டற்கு வந்த மாருதவேகன் என்னும் விஞ்சையன் தான் பூக் கொய்யும்பொழுது தன்னை எடுத்தேகினனென்று மேல் (3:28-39) சுதமதி கூறுதலானும் புகார் நகருக்கு அணித்தாகிய சீகாழியென்று கொள்வதே பொருத்தமாம். கௌசிகன் - சுதமதியின் தந்தை.

8.22

துயிலெழுப்பிய காதை

110 இன்றேழ் நாளில் இடையிருள் யாமத்துத்
தன்பிறப் பதனோடு நின்பிறப் புணர்ந்தீங்கு
இலக்குமி யாகிய நினக்கிளை யாள்வரும்
அஞ்சலென் றுரைத்த தவ்வுரை கேட்டு
நெஞ்சம் நடுக்குறூஉம் நேரிழை நல்லாள்

106

உரை

110

இன்றேழ் நாளில் இடையிருள் யாமத்து - இற்றைக்கு ஏழாவது நாளில் இருளையுடைய இடையாமத்தில்தன் பிறப்பதனொடு நின் பிறப்பு உணர்ந்து ஈங்கு இலக்குமியாகிய நினக்கு இளையாள் வரும் - தனது முற்பிறப்புடன் நினது முற்பிப்பினையும்
அறிந்துகொண்டு நினக்கு இளையாளும் இலக்குமியும் ஆகிய மணிமேகலை ஈண்டு வருவாள், அஞ்சல் என்று உரைத்தது - நீ அஞ்சாதே என்று கூறியது, அவ்வுரை கேட்டு - அம்மொழி
கேட்டு, நெஞ்சம் நடுக்குறூஉம் நேரிழை நல்லாள் - உள்ளம் நடுங்கிய நேரிழையாகிய சுதமதி ;

பாவை தெய்வக் கிளவியின் உரைத்தது என்க.

8.23

துயிலெழுப்பிய காதை

115

120

125 காவ லாளர் கண்டுயில் கொள்ளத்
தூமென் சேக்கைத் துயில்கண் விழிப்ப
வலம்புரிச் சங்கம் வறிதெழுந் தார்ப்பப்
புலம்புரிச் சங்கம் பொருளோடு முழங்கப்
புகர்முக வாரணம் நெடுங்க விளிப்பப்
பொறிமயிர் வாரணங் குறுங்கூ. விளிப்பப்
பணைநிலைப் புரவி பலவெழுந் தாலப்
பணைநிலைப் புள்ளும் பலவெழுந் தாலப்
பூம்பொழி லார்கைப் புள்ளொலி சிறப்பப்
பூங்கொடி யார்கைப் புள்ளொலி சிறப்பப்
கடவுட் பீடிகைப் பூப்பலி கடைகொளக்
கலம்பகர் பீடிகைப் பூப்பலி கடைகொளக்
குயிலுவர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழக்
கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழ
ஊர்துயி லெடுப்ப உரவுநீ ரழுவத்துக்
காரிருள் சீத்துக் கதிரவன் முளைத்தலும்

87

உரை

93

காவலாளர் கண் துயில்கொள்ள - ஊர்காவலருடைய கண்கள் உறக்கத்தைப் பொருந்த, தூமென் சேக்கைத்துயில்கண் விழிப்ப - தூய மெல்லிய படுக்கையில் துயில்கின்ற ஆடவர் மகளிருடைய கண்கள் விழிப்படைய, வலம்புரிச்சங்கம் வறிது எழுந்து ஆர்ப்ப-வலம்புரியாகிய சங்குகள் பொருளின்றி, முழங்க, புலம் புரிச் சங்கம் பொருளொடு முழங்க-அறிவின்மிக்க புலவர் கூட்டம் பொருளொடும் முழங்க, புகர்முக வாரணம் நெடுங்கூவிளிப்ப - புள்ளி பொருந்திய முகத்தையுடைய யானைகள் நீண்ட கூப்பீட் டினைச் செய்ய, பொறி மயிர் வாரணம் குறுங்கூ விளிப்ப-பொறிப் பொறியாகிய மயிர்களையுடைய கோழிகள் குறிய கூவுதலைச்செய்ய, பணைநிலைப் புரவி பல எழுந்து ஆல - பந்தியில் நிற்றலையுடைய குதிரைகள் பல எழுந்து ஆட, பணை நிலைப் புள்ளும் பல எழுந்து ஆல-கிளைகளிலுள்ள பல புட்களும் எழுந்து ஒலிக்க, பூம்பொழில் ஆர்கைப் புள்ஒலி சிறப்ப-பூஞ்சோலையில் மதுவுண்ணுதலையுடைய வண்டுகளின் ஒலிமிக, பூங்கொடியார் கைப்புள் ஒலிசிறப்ப - பூங்கொடி போன்ற மகளிருடைய கையிலணிந்த வளைகளின் ஒலி மிக, கடவுட் பீடிகை பூப்பலி கடைகொள - கடவுளர்க்குரிய பீடங் களிற் கொடுக்கப்படும் பொலிவுபெற்ற பலிகள் முற்றுப்பெற, கலம்பகர் பீடிகைப் பூப்பலி கடைகொள-அணிகலங்கள் விற்கப் படுகின்ற ஆவண வீதியில் மலரால் செய்யப்படும் பூசனையைக் கடையிடங்கள் கொள்ள, குயிலுவர் கடைதொறும் பண்இயம் பரந்து எழ-தோற் கருவிகளைப் பயில்வோர் வாயில்தோறும் இசையுடன் கூடிய இயங்களின் ஒலி பரவி மேம்பட, கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்து எழ - கொடையாளர்களுடைய வாயில்தோறும் கொடுத்தற்குரிய பல பண்டங்களும் பரந்து நிறைய, ஊர்துயில் எடுப்ப-ஊரினைத் துயில் எழுப்புமாறு, உரவு நீர் அழுவத்துக் கார்இருள் சீத்துக் கதிரவன் முளைத்தலும்-கடற் பரப்பிலே கரிய இருளைக் கெடுத்து ஞாயிறு தோன்றுதலும் ;

காவலாளர் இரவிடை விழித்தோராகலின் விடியலில் துயில்வா ராவர். புலம்புரியாகிய சங்கமென்க. புகர்முக வாரணம் கவளம் வேண்டிக் கூப்பிடாநிற்கும். புள்-பறவை. வண்டு, வளையல், தெய்வங் கட்கு இரவிற் பலி கொடுப்பாராகலின் அது முடிவுற்றதென்றார், பூ - பொலிவு. இல்லுறை தெய்வத்தின் பொருட்டுக் காலையில் பூவிடுதல் மரபாகலின் 'கலம்பகர் பீடிகைப் பூப்பலி கடைகொள' என்றார் ; கடை வாயிலுமாம் ; ¹"பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி" என்பது காண்க. பண்இயம்-பண்ணப்பட்ட வாத்தியம் என்றுமாம்.

¹ சிலப். 28 : 231.

8.24

துயிலெழுப்பிய காதை

130 ஏவுறு மஞ்ஞையின் நினைந்தடி வருந்த
மாநகர் வீதி மருங்கிற் போகிப்
போய கங்குலிற் புகுந்ததை யெல்லாம்
மாதவி தனக்கு வழுவின் றுரைத்தலும்
நன்மணி இழந்த நாகம் போன்றவன்
தனமகன் வாராத் தனித்துய ருழப்ப
இன்னுயி ரிழந்த யாக்கையி லிருந்தனள்
துன்னிய துரைத்த சுதமதி தானென்.

127

உரை

134

ஏவுறு மஞ்ஞையின் இனைந்து - அம்பு பட்டுருவிய மயிலைப்போல உள்ளம் நைந்து, அடி வருந்த மாநகர் வீதி மருங்கில் போகி - அடிகள் வருந்தக் கடந்து பெரிய நகரத்தின் வீதிவழியே சென்று, போய கங்குலில் புகுந்ததை எல்லாம்-சென்ற இரவில் நிகழ்ந்தவற்றை எல்லாம், மாதவி தனக்கு வழுவின்று உரைத் தலும்-மாதவிக்கு வழுவாது கூறுதலும், நன்மணி இழந்த நாகம் போன்று அவள்-மாதவி நல்ல மணியை இழந்த அரவினைப்போல, தன்மகள் வாராத் தனித்துயர் உழப்ப - தன் மகள் வாராத ஒப்பற்ற துன்பத்தால் வருந்த, இன்உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள் துன்னியது உரைத்த சுதமதிதான் என் - அவட்கு நேர்ந்ததைக் கூறிய சுதமதிதான் இனிய உயிரையிழந்த உடலைப்போல் அசைவற்றிருந்தனள் என்க.

புகுந்ததையெல்லாம் : ஒருமையிற் பன்மை. 'நன்மணி யிழந்த நாகம் போன்று' (25 ; 195) என மேல் இந்நூலுள்ளும், ¹"இரு நிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும், அருமணி யிழந்த நாகம் போன்றதும்" எனச் சிலப்பதிகாரத்திலும் மணியிழந்த நாகமும், ²"இன்னுயி ரிழந்த யாக்கை யென்னத், துன்னிய சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும்" எனச் சிலப்பதிகாரத்தில் உயிரிழந்த யாக்கையும் உவமமாக வருதல் காண்க.

மணிமேகலா தெய்வம் நீங்கித் தோன்றி அவன்வயி னுரைத்த பின் புகுந்து நீக்கி உரையென்று போயபின், சுதமதி எழுந்து பல் வேறு ஓதையும் இசைப்பக் கேட்டு உளங்கலங்கி நீங்கிப்போகி ஒரு புடை இருத்தலும், பாவை தெய்வக்கிளவியின் "வரும், அஞ்சல்" என் றுரைத்தது ; அதனைக் கேட்டு நடுக்குறு நல்லாள் கதிரவன் முளைத்தலும் போகி, மாதவிக் குரைத்தலும், அவள் துயருழப்பத் தான் உயிரிழந்த யாக்கைபோல் இருந்தனள் என வினை முடிக்க.

¹ சிலப் 13; 57-8. ²சிலப். 13; 59-60.

Linked texts (1)