Maṇimēkalai's Renunciation 8.5
Maṇimēkalai urai 8.5
- Language
- Tamil
8.5
துயிலெழுப்பிய காதை
30
35
40
மாதவி தனக்கியான் வந்த வண்ணமும்
ஏதமில் நெறிமகள் எய்திய வண்ணமும்
உரையாய் நீயவன் என்திறம் உணரும்
திரையிரும் பௌவத்துத் தெய்வமொன் றுண்டெனக்
கோவலன் கூறியிக் கொடியிடை தன்னையென்
நாமஞ் செய்த நன்னாள் நள்ளிருள்.
காமன் கையறக் கடுநவை யறுக்கும்
மாபெருங் தவக்கொடி ஈன்றனை யென்றே
நனவே போலக் கனவகத் துரைத்தேன்
ஈங்கிங் வண்ணம் ஆங்கவட் குரையென்
றந்தரத் தெழுந்தாங் கருந்தெய்வம் போயபின்
30
உரை
40
மாதவி தனக்கு யான் வந்த வண்ணமும்-மாதவிக்கு யான் வந்த வகையையும், ஏதம்இல் நெறி மகள் எய்திய வண்ணமும்- மணிமேகலை குற்றமற்ற வழியிற் சேர்ந்த தன்மையையும், உரை யாய் நீ - நீ கூறுவாயாக, அவள் என் திறம் உணரும்-அம் மாதவி
என் வரலாற்றை உணருவாள், திரையிரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு எனக் கோவலன் கூறி இக்கொடியிடை தன்னை என் நாமஞ் செய்த நல்நாள் - கோவலன் அலைகளையுடைய பெரிய கடலினிடத்துத் தெய்வம் ஒன்று உண்டென்று கூறி இப் பெண் மகளுக்கு என் பெயரையிட்ட நல்லநாளில், நள்இருள்-இரவின் நடுயாமத்தே, காமன் கையறக் கடுநவை அறுக்கும் - காமன் செயலற்றுப்போகப் பெரிய துன்பங்களை அறுக்கவல்ல, மாபெருந் தவக்கொடி ஈன்றனை என்றே-மிகப் பெரிய தவமுடைய மகளைப் பெற்றனை என்று, நனவேபோலக் கனவகத்து உரைத்தேன் - நேரிற் கூறுவதைப்போலக் கனவின்கண் மொழிந்தேன், ஈங்கு இவ்வண்ணம் ஆங்கு அவட்கு உரை என்று - இவற்றையெல்லாம் மாதவிக்குக் கூறுவாயாக என்றுரைத்து அந்தரத்து எழுந்து ஆங்கு அருந்தெய்வம் போயபின் - விசும்பில் எழுந்து அவ்வரிய மணிமேகலா தெய்வம் போயின பின்னர் ;
ஏதம் இல் நெறி எய்தியது என்றது புத்தன் அறவழிப்படுதல் என்க; இதனை விசுத்திமார்க்கம் என்ப. தெய்வம்-என்குல முதல்வனைக் கேட்டினின்றும் நீக்கிப் பாதுகாத்த தெய்வம் என விரித்துரைத்துக் கொள்க. கொடியிடை தன்னை-கொடி யிடைக்கு; கொடியிடை: மணிமேகலை. நள்ளிருள் என்பது செறிந்த இருளையுடைய இரவினை யுணர்த்திற்று. கடுநவை - அவா முதலியன. நன்னாள் நள்ளிருட் கனவகத்து உரைத்தேன் என்க.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil