Maṇimēkalai's Renunciation 9.2
Maṇimēkalai urai 9.2
- Language
- Tamil
9.2
மணிபல்லவத்துத் துயருற்ற காதை
15
10
15
காதற் சுற்றம் மறந்து கடைகொள
வேறிடத்துப் பிறந்த உயிரே போன்று
பண்டறி கிளையொடு பதியுங் காணாள்
கண்டறி யாதன கண்ணிற் காணா
நீல மாக்கடல் நெட்டிடை யன்றியுங்
காலை ஞாயிறு கதிர்விரித்து முளைப்ப
உவவன மருங்கினில் ஓரிடங் கொல்லிது
சுதமதி ஒளித்தாய் துயரஞ் செய்தனை
நனவோ கனவோ என்பதை அறியேன்
மனநடுக் குறூஉம் மாற்றந் தாராய்
வல்லிருள் கழிந்தது மாதவி மயங்கும்
எல்வளை வாராய் விட்டகன் றனையோ
விஞ்சையில் தோன்றிய விளங்கிழை மடவாள்
வஞ்சஞ் செய்தனள் கொல்லோ அறியேன்
ஒருதனி யஞ்சுவென் திருவே வாவெனத்
13
உரை
27
காதற் சுற்றம் மறந்து கடைகொள வேறிடத்துப் பிறந்த உயிரே போன்று - அன்பின் மிக்க சுற்றங்களை மறந்து முடிவு கொள்ள வேறிடத்தில் தோன்றிய உயிரைப்போல, பண்டுஅறிகிளையொடு பதியும் காணாள்-முன்னர்த் தன்னாலறியப்பட்ட சுற்றத்துடன் நகரத்தையும் காணாதவளாகி, கண்டு அறியாதன கண்ணிற் காணா - முன் கண்டறியப் படாதனவற்றைக் கண்களாற் கண்டு, நீல மாக் கடல் நெட்டிடை அன்றியும் - நீலநிறமுடைய பெரிய கடலில் அணிமைக்கண், காலை ஞாயிறு கதிர் விரித்து முளைப்ப - இளஞாயிறு கதிர்களை விரித்து உதிக்க, உவவன மருங்கில் ஓரிடம் கொல் இது-இஃது உவவனத்தில் ஓரிடமோ, சுதமதி ஒளித்தாய்- சுதமதீ ஒளிந்து கொண்டாயோ, துயரம் செய்தனை - துன்பம் செய்தனை, நனவோ கனவோ என்பதை அறியேன்-இது நனவோ கனவோ என்பதை அறிகின்றிலேன், மனம் நடுங்குறூஉம் மாற்றம் தாராய்-உள்ளம் நடுங்குதலுறுகின்றது மறுமொழி தருவாய், வல்லிருள் கழிந்தது மாதவி மயங்கும்-வலிதாகிய இருள் நீங்கியது மாதவி மயங்குவாள், எல்வளை வாராய்-ஒளி பொருந்திய வளையினை யுடையாய் வருவாயாக, விட்டு அகன்றனையோ - என்னைவிட்டுச் சென்றனையோ, விஞ்சையில் தோன்றிய விளங்கிழை மடவாள் - விளங்குகின்ற அணிகளுடன் வித்தையினாலே தோன்றியமடந்தை, வஞ்சம் செய்தனன் கொல்லோ அறியேன் - வஞ்சனை செய்தனளோ அறியேனே, ஒரு தனி அஞ்சுவேன் திருவே வா என-ஒப்பற்ற தனிமையை அஞ்சுகின்றேன் திருவனையாய் வருக என்று;
கடைகொள - முற்ற; வினைமுடி வெய்த என்றுமாம். நெட்டிடை அன்றியும் - நெடுந்தூரம் அன்றாக; அணிமையில் ; உம்: அசை. உவவனம் என்பது முதல் மணிமேகலை கூற்று. ஓரிடங்கொல்-முன் கண்டறியாத ஓரிடமோ வென்க. வாராய் - வருகின்றிலை எனவும், வராது எனவும் உரைத்தலுமாம். மெல்வளை யென்றலுமாம்.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil