Maṇimēkalai's Renunciation 12.15
Maṇimēkalai urai 12.15
- Language
- Tamil
12.15
பாத்திரம் பெற்ற காதை
100
105 விட்ட பிறப்பில்யான் விரும்பிய காதலன்
திட்டி விடமுணச் செல்லுயிர் போவுழி
உயிரொடு வேவே னுணர்வொழி காலத்து
வெயில்விளங் கமையத்து விளங்கித் தோன்றிய
சாது சக்கரன் றனையா னூட்டிய
காலம் போல்வதோர் கனாமயக் குற்றேன்
ஆங்கதன் பயனே ஆருயிர் மருந்தாய்
ஈங்கிப் பாத்திரம் என்கைப் புகுந்தது
99
உரை
106
விட்ட பிறப்பில் யான் விரும்பிய காதலன்-போன பிறவியில் என்னால் விரும்பப்பட்ட கணவன், திட்டிவிடம் உணச் செல் உயிர் போவுழி-திட்டிவிடமெனும் பாம்பு தீண்டப்பெற்று உயிர் நீங்கினவிடத்து, உயிரொடு வேவேன் உணர்வு ஒழிகாலத்து - தீயிற் குளித்து உயிருடன் வேகாநிற்கும் யான் உணர்வு நீங்குந் தறுவாயில், வெயில் விளங்கு அமயத்து விளங்கித் தோன்றிய - வெயில் விளங்குகின்ற உச்சிப் பொழுதில் விளக்கமுற்றுத் தோன்றிய, சாது சக்கரன் தனை யான் ஊட்டிய காலம் போல்வதோர் கனாமயக்குற்றேன்-சாது சக்கரனை யான் உண்பித்த பொழுதைப் போல்வதாகிய ஒரு கனாவாகிய மயக்கத்தை யடைந்தேன், ஆங்கதன் பயனே - அக் கனாப்போலும் நினைவின் பயனே, ஆருயிர் மருந்தாய் ஈங்கு இப்பாத்திரம் என் கைப்புகுந்தது - அரிய உயிர்களைக் காக்கும் மருந்தாகி இப் பாத்திரம் ஈண்டு என் கையிற்புக்கது ;
உயிருடன தீயிற் குளித்து வெந்தமையின் 'உயிருடன் வேவேன்' என்றாள். வேவேன் : பெயர். முற்பிறப்பிலே கணவன் திட்டிவிடத்தாலிறந்ததும், இவள் தீயிற் குளித்ததும் (9:49--50) முன்னரும் போந்தமை யறிக. வேவேன் உணர்வொழி காலத்துக் கனாமயக்குற்றேன் என்க. 'அதன் பயனே......என்கைப் புகுந்தது' என்னுங் கருத்து உண்மை நூற் றுணிபாதல், ¹"பிறப்பென்னும் பேதைமை" என்னுங் குறளுரையில்; "உயிர் உடம்பின் நீங்குங்காலத்து அதனால் யாதொன்று பாவிக்கப்பட்டது அஃது அதுவாய்த் தோன்றுமென்பது எல்லா ஆகமங்கட்கும் துணிபாகலின்" எனப் பரிமேலழகர் கூறியவாற்றானும் அறியப்படும். புகுந்தது அதன்பயனே யாகுமென்க.
¹குறள். 358.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil