Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 12.16

Maṇimēkalai urai 12.16

Language
Tamil

12.16

பாத்திரம் பெற்ற காதை

110

115 நாவலொடு பெயரிய மாபெருந் தீவத்து
வித்தி நல்லறம் விளைந்த வதன்பயன்
துய்ப்போர் தம்மனைத் துணிச்சித ருடுத்து
வயிருகாய் பெரும்பசி யலைத்தற் கிரங்கி
வெயிலென முனியாது புயலென மடியாது
புறங்கடை நின்று புன்கண் கூர்ந்துமுன்
அறங்கடை நில்லா தயர்வோர் பலரால்
ஈன்ற குழவி முகங்கண் டிரங்கித்
தீம்பால் சுரப்போள் தன்முலை போன்றே
நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சைப் பாத்திரத்
தகன்சுரைப் பெய்த ஆருயிர் மருந்தவர்
முகங்கண்டு சுரத்தல் காண்டல்வேட் கையேன்என

107

உரை

118

நாவலொடு பெரிய மாபெருந் தீவத்து-மிகப் பெரிய சம்புத் தீவின்கண். வித்தி நல்லறம் விளைந்த அதன் பயன் - நல்லறத்தை விதைத்து அதன்கண் விளைந்த பயனாகிய செல்வத்தை, துய்ப்போர் தம்மனை - அனுபவிக்கும் செல்வருடைய இல்லத்தில், துணிச் சிதர் உடுத்து - கிழிந்த சீரைகளை உடுத்திக்கொண்டு, வயிறுகாய் பெரும்பசி அலைத்தற்கு இரங்கி - வயிற்றினைக் காய்கின்ற பெரிய பசி அலைத்தலால் வருந்தி, வெயில் என முனியாது புயல் என மடியாது - மிக்க வெயில் என்று வெறுப்படையாமலும் மழை என்று ஓரிடத்தில் தங்காமலும் சென்று, புறங்கடை நின்று புன்கண் கூர்ந்து - தலைவாயிலில் நின்றுகொண்டு துன்பமிகுந்து, முன் அறங்கடை - முற்பிறப்பிற் செய்த தீவினையால், நில்லாது அயர்வோர் பலரால்-ஓரிடத்தில் நில்லாமல் அயர்கின்றவர் பலராவர் ஆகலின், ஈன்ற குழவி முகம் கண்டு இரங்கி-பெற்ற குழவியினது முகத்தைக் கண்டு இரங்கி, தீம்பால் சுரப்போள் தன்முலை போன்றே - இனிய பாலைச் சுரக்கின்ற தாயின் கொங்கையைப் போல, நெஞ்சுவழிப் படூஉம் விஞ்சைப் பாத்திரத்து - மனத்தின் வழியே ஒழுகும்விஞ்சையையுடைய இப்பாத்திரத்தின்கண், அகன் சுரைப்பெய்த ஆருயிர் மருந்து - அகன்ற உள்ளிடத்திலிட்ட அரியவுயிர் மருந்தாகிய உணவு, அவர் முகம் கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன் என - அவ்வறிஞர்களின் முகத்தைக் கண்டு சுரத்தலைக் காணும் விருப்ப முடையேன் என்று மணிமேகலை கூற ;

சிதர் - சிதார் எனவும் வழங்கும். வயிறு காய்-வயிறு உணவின்றிக் காய்ந்தமையாலாகிய எனலுமாம். அலைத்தற்கு-அலைத்தலால். அறத்தின் நீக்கப்பட்டமையின், பாவம் அறங்கடை யெனப்பட்டது; ¹;"அறன் கடை நின்றாரு ளெல்லாம்" என்பதூஉங் காண்க. ²;"அகத்தாரே வாழ்வாரென் றண்ணாந்து நோக்கிப், புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி, மிகத்தாம் வருந்தி யிருப்பரே மேலைத் தவத்தாற் றவஞ்செய்யாதார்" என்பது ஈண்டு அறியற்பாலது. மடியாது சென்று என ஒரு சொல்லும், அறங்கடையால் என மூன்றனுருபும் விரித்துரைக்க. சுரை-உட்டுளை ; ஈண்டுப் பாத்திரத்தின் குழிந்த உள்ளிடம்.

¹ குறள். 142. ² நாலடி. 31.

Linked texts (1)